அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர் கேள்வி..!
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அம்பானி- அதானி குறித்து பேசாமல் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஐந்தாண்டுகளாக காங்கிரசின் இளவரசர் ஒரு முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். அதாவது ஐந்து தொழிலதிபர்கள், ஐந்து தொழிலதிபர்கள், ஐந்து தொழிலதிபர்கள் என்று. ரஃபேல் விவகாரம் அடியோடு முடங்கியதும் இந்த புதிய முழக்கத்தை அவர் தொடங்கினார். படிப்படியாக, அம்பானி-அதானி என்று சொல்லத் தொடங்கினார். ஆனால் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அவர் அம்பானி மற்றும் அதானியை பற்றிப் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இன்று தெலங்கானா மண்ணில் இருந்து கேட்க விரும்புகிறேன், அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்பதை அவர் அறிவிக்க வேண்டும்?. உங்களுக்குள் டீல் முடிந்து விட்டதா?. அம்பானியையும் அதானியையும் அசிங்கப்படுத்துவதை ஒரே இரவில் ஏன் நிறுத்தினீர்கள்?. இதில் ஏதோ தவறாக உள்ளது. ஐந்து ஆண்டுகளாக நீங்கள் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்தீர்கள், பின்னர் அது ஒரே இரவில் நிறுத்தப்பட்டது ஏன்?" என்று பிரதமர் மோடி கூறினார்.
நரேந்திர மோடி அரசாங்கம் மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கு சாதகமாக ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியதால், பிரதமர் தற்போது எதிர்தாக்குதல் நடத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பேசிய ராகுல் காந்தி, “பாஜக அரசு 22 இந்தியர்களை மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதி ஆக்குவோம்” என்றும் அவர் கூறினார்.
ராகுலுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்த இடமும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலங்கானா, சமீபத்தில் அதானி குழுமத்துடன் பல்வேறு துறைகளில் மொத்தம் ரூ. 12,400 கோடி முதலீட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu