தேனி மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்வு

தேனி மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்வு
X

பைல் படம்.

தேனி மார்க்கெட்டில் காய்கறிகளி்ன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

தேனி மார்க்கெட்டில் காய்கறி விலைகள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டம் தோட்டக்கலை மாவட்டம் என வர்ணிக்கப்படுகிறது. அந்த அளவு காய்கறிகளின் விளைச்சல் அதிகமாக உள்ளது. தினமும் பல நுாறு டன் காய்கறிகள் விளைகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து மதுரை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வத்தலக்குண்டு, திருச்சி மார்க்கெட்டுகளுக்கும், கேரளாவிற்கும் தினமும் பல டன்கள் காய்கறி கொண்டு செல்லப்படுகிறது. தேனி மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருந்தது. ஒரு கிலோ தக்காளி விலை 5 ரூபாய் என்ற அளவிற்கு இறங்கியது.

பின்னர் படிப்படியாக உயர்ந்து 10 ரூபாய், 15 ரூபாய் என்ற அளவிற்கு வந்தது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை கிலோ 50 ரூபாயினை எட்டி உள்ளது.அதேபோல் கிலோ 15 என்ற அளவிற்கு இறங்கிய சின்னவெங்காயத்தின் விலையும் இன்று கிலோ 60 ரூபாயினை கடந்து நிற்கிறது. தேனி மாவட்டத்தில் மொச்சைக்காய் சீசன் தொடங்கி உள்ளது. சீசன் தொடக்கம் என்பதால் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சீசன் மும்முரமான கட்டத்தை எட்டியதும் இதன் விலை கிலோ 25 ரூபாய் என இறங்கும்.

தற்போதைய நிலையில் கிலோ ஒன்றுக்கு கத்தரிக்காய் 25 ரூபாய், வெண்டைக்காய் 40 ரூபாய், முருங்கைக்காய் 80 ரூபாய், அவரைக்காய் 50 ரூபாய், உருளைக்கிழங்கு 50 ரூபாய், கருணைக்கிழங்கு 28 ரூபாய், பட்டர்பீன்ஸ் 200 ரூபாய், சோயாபீன்ஸ் 120 ரூபாய், முருங்கை பீன்ஸ் 75 ரூபாய், முட்டைக்கோஸ் 30 ரூபாய், கேரட் 60 ரூபாய் என விற்கப்படுகிறது. இதே போல் அனைத்து ரக காய்கறிகளின் விலைகளும் உயர்ந்து உள்ளது. இது விவசாயிகளுக்கு சாதகமான நிலை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பொதுமக்களும் புரட்டாசி மாதம் வழக்கமாக காய்கறிகள் விலை உயரும் என்பதை தெரிந்திருப்பதால், இந்த விலை உயர்வை பற்றி கவலைப்படவில்லை என உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் விலை உயர்ந்துள்ளதால் பக்கத்து மாநிலமான கேரளாவில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் விற்கப்படும் விலையை விட இரண்டு மடங்கிற்கும் அதிக விலை கேரளாவில் விற்கப்படுகிறது.

கேரள மக்கள் இவ்வளவு விலை கொடுத்து தான் காய்கறிகளை வாங்க முடியும். ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் வந்தாலும், தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகள் தான் கேரளாவில் புத்தம் புதிதாக கிடைக்கிறது. அதாவது அறுவடை ஆன அன்றே கேரள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வந்து சோர்ந்து விடுகிறது. இதனால் கேரள மக்களும் விலையை பற்றி கவலைப்படுவதில்லை.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!