தேனி தி.மு.க.,வில் பதவி சண்டை: தலைவர், துணைத் தலைவர் கடும் மோதல்
![தேனி தி.மு.க.,வில் பதவி சண்டை: தலைவர், துணைத் தலைவர் கடும் மோதல் தேனி தி.மு.க.,வில் பதவி சண்டை: தலைவர், துணைத் தலைவர் கடும் மோதல்](https://www.nativenews.in/h-upload/2022/04/11/1513720-dmk.webp)
பைல் படம்.
தேனி தி.மு.க., நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன். இவரது பதவியை ராஜினாமா செய்யுமாறு தலைமை கட்டளையிட்டுள்ளது. ஆனால் இதுவரை ரேணுப்பிரியா ராஜினாமா செய்யவில்லை. மாறாக காங்., கட்சிக்கு துணைத்தலைவர் பதவியை வழங்க அவரது கணவர் பாலமுருகன் தி.மு.க., மேலிடத்திடம் பேசி வருகிறார். தற்போது இக்குழுவினர் சென்னை சென்றுள்ளனர். பஞ்சாயத்து சென்னையி்ல் நடந்து வருகிறது.
இதற்கிடையில் தேனி தி.மு.க.,வில் தலைவர்- துணைத்தலைவர் மோதல் கடுமையாக வெடித்துள்ளது. ரேணுப்பிரியா பாலமுருகனிடம் தேனி தி.மு.க., கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி பேசியது போல் ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் ரேணுப்பிரியா பாலமுருகன் நகராட்சி கூட்டத்திற்கு வாருங்கள் என அழைக்கிறார். பதிலளித்த சந்திரகலா ஈஸ்வரி நீங்கள் பதவி பெற்றதற்கு பேசியபடி முதலில் கமிஷன் 5 லட்சம் ரூபாய் தாருங்கள் என கேட்கிறார். அதற்கு ரேணுப்பிரியா எனது பதவியே உறுதியில்லாமல் உள்ளது. ஆனால் நான் பேசியபடி கமிஷன் கொடுத்து விட்டேன். பணம் முழுக்க மாவட்ட செயலாளரிடம் உள்ளது. துணைத்தலைவர் பங்கினை கேட்டு வாங்குங்கள் என பதிலளித்துள்ளார்.
இந்த ஆடியோ தேனி மாவட்டம் முழுவதும் வைரலாகி வருகிறது. இது குறித்து துணைத்தலைவர் செல்வத்திடம் கேட்ட போது, 'ரேணுப்பிரியாவை வேட்பாளராக தி.மு.க., மேலிடம் அறிவிக்கவில்லை. தி.மு.க., கவுன்சிலர்களும் அவரை ஓட்டுப்போட்டு தேர்வு செய்யவில்லை. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பதவிக்கு வந்துள்ளார். தன்னிச்சையாக செயல்படுகிறார். நான் தி.மு.க., அறிவித்த வேட்பாளர். முறைப்படி தேர்வானவன். ஆனால் ரேணுப்பிரியா தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள என்னை ராஜினாமா செய்ய வைத்து, துணைத்தலைவர் பதவியை காங்., கட்சிக்கு வழங்க முயற்சிக்கிறார். எனது பணம் 80 லட்சம் ரூபாய் நகராட்சி தலைவரிடம் உள்ளது. தற்போது தேனியில் உள்ள 33 கவுன்சிலர்களில் 26 பேர் தலைவருக்கு எதிராக உள்ளனர். விரைவில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். தலைமைக்கு கட்டுப்படாமல் மீறியவருக்கு பதவி வழங்குவதும், தலைமையின் கட்டளைப்படி நடப்பவரின் பதவியை பறிப்பதும் எப்படி ஏற்புடையதாகும். தவிர தேனியில் தேனி மாவட்டத்திலேயே அதிக ஓட்டு பெற்ற தி.மு.க., கவுன்சிலர்களி்ல் நான் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். நாற்பது ஆண்டுகளாக அ.தி.மு.க.,விடம் சிக்கி தவித்த வார்டினை தி.மு.க.,விற்கு எடுத்துக் கொடுத்துள்ளேன். நான் கட்சி வேலையை மட்டும் தற்போது தீவிரமாக கவனித்து வருகிறேன் என்றார்.
ரேணுப்பிரியாவின் கணவர் பாலமுருகனிடம் கேட்ட போது, 'துணைத்தலைவர் பணம் எதுவும் எங்களிடம் தரவில்லை. தேனி தி.மு.க.,வில் நகராட்சி துணைத்தலைவர் பதவியை காங்., கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் விரைவில் இறுதியாக உள்ளது. இதனால் செல்வம் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள ஆடியோவையும் வெளியிட்டு, பணம் கொடுத்ததாகவும் கூறி நாடகம் நடத்துகிறார்' என்றார்.
எப்படியோ இதுவரை இல்லாத அளவு தேனி தி.மு.க., இந்த ஆடியோவால் அசிங்கப்பட்டு விட்டது. மக்கள் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறோம் என்றே தெரியவில்லை. பகிரங்கமாக கமிஷன் தாருங்கள் என ஒரு கவுன்சிலர் கேட்பதும், அடுத்தடுத்த பணிகளில் வாங்கிக் கொள்ளலாம் என தலைவர் பதிலளிப்பதும் தேனி தி.மு.க.,வை அதலபாதாளத்தில் தள்ளி விட்டது. இந்த பதவிச்சண்டையில் தி.மு.க.,வின் இமேஜ் மிகவும் சரிந்து விட்டது என தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu