ரவீந்திரநாத் மத்திய அமைச்சர்? ஒப்புக்கொள்வாரா எடப்பாடி? இது ஒரு அரசியல் சகஜம்..!

ரவீந்திரநாத் மத்திய அமைச்சர்?   ஒப்புக்கொள்வாரா எடப்பாடி?  இது ஒரு அரசியல் சகஜம்..!
X

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. (கோப்பு படம்)

மெகா கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், எம்.பி., தேர்தலுக்கான எந்த கூட்டணி முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.

அதிமுகவைப் பொறுத்தவரை இன்னும் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்றுகூட உறுதியாகத் தெரியவில்லை. மேலிடத்தில் இருந்து மட்டுமே, உறுதி வெளிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, மாநில அளவில் வெளிப்படையாக யாரும் பேசவில்லை. இப்படிப்பட்ட சூழலில், பாஜக தன் அதிரடி திட்டத்தை கிளப்பி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் தேர்தல் வியூகம் தொடர்பாக ஒரு தகவல் வட்டமடித்தது. அதாவது, மொத்தமுள்ள 40 தொகுதிகளில் சரிபாதியாக 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும், மீதமுள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கப்படும் 20 தொகுதிகளை, தங்களுக்குள் பிரித்துக் கொள்வது என யோசிக்கும் ஒரு முடிவு.

20 - 20 சாத்தியமா? அப்படி தங்களுக்கு கிடைக்கும் அந்த 20 தொகுதிகளில், 13 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்துவது, மிச்சமுள்ள 7 தொகுதிகளை, ஓபிஎஸ் அணி + அமமுக டிடிவி தினகரன், தமாகா, ஜிகே வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் போன்றோருக்கு தான் பிரித்து தருவது என பாஜக கணக்கு போட்டுள்ளதாக தெரிகிறது.

இதில், ஓபிஎஸ் அணிக்கு மட்டும் 2 இடங்கள் கொடுக்கப் போவதாகவும், அதில் ஒரு தொகுதியில் ரவீந்திரநாத்தை நிறுத்தவும் ஏற்பாடுகள் நடப்பதாகவும் தகவல்கள் பரபரத்தன. ஆனால், அதற்கு பிறகு அந்த பிளான்கள் எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஆனால், இதில் பாதி பிளான் இப்போதே நடந்து முடிந்து விடும் போல தெரிகிறது. இதுசம்பந்தமான ஸ்பெஷல் செய்தி தான் இப்போது கிடைத்திருக்கிறது.

பாமக, தமாகா:

கடந்த சில நாட்களாகவே, மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து டாக்டர் அன்புமணி, ஜி.கே.வாசன் இருவரையும் அமைச்சராக்கலாமா என்ற யோசனை டெல்லிக்கு இருப்பதாக, பாஜக வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது. அதனை நிரூபிப்பது போல பாமக, த.மா.கா. வட்டாங்களிலும் உற்சாகம் தென்பட்டு வருகிறதாம்.

அன்புமணிக்கு சான்ஸ்:

அன்புமணியிடம் பாமகவினரும், வாசனிடம் தமாகாவினரும் பேசும் போது, அமைச்சர் வாய்ப்பு குறித்து கேட்கின்றனர். அதற்கு வாசன், "வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. ஆனா, உறுதியாகும் வரை நாம் சந்தோசப்படக்கூடாது" என்று தங்கள் கட்சியினரிடம் வாசன் சொல்லி வருகிறாராம். இதனிடையே, வாசனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிந்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், அமைச்சர் வாய்ப்புக் கேட்டு அப்பா மூலமாக டெல்லியில் முயற்சிக்கிறாராம்.

அதிமுகவை பலவீனப்படுத்தி, பாஜக தலைமையிலான அணியை பலப்படுத்தும் ஒருவகை திட்டத்தில் தான் அன்புமணி, வாசன் ஆகியோரை மத்திய அமைச்சராக்கும் யோசனை நடப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், 2 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிட்டால், அதிமுகவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஒருவேளை ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிட்டால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கப் போகிறது என்று தெரியவில்லை? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Tags

Next Story