முல்லை பெரியாறு அணையை நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
முல்லை பெரியாறு அணை நோக்கி கூடலுாரில் நடைபயணம் தொடங்கிய விவசாயிகள்.
முல்லை பெரியாறு அணையினை மீட்க குமுளி நோக்கி நடைபயணம் சென்ற விவசாயிகளை போலீசார் கூடலுாரில் தடுத்து நிறுத்தினர்.
கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும், முல்லை பெரியாறு அணையில் தமிழக உரிமைகளை நிலை நாட்டவும், அணையை நோக்கி கூடலுாரில் இருந்து விவசாயிகள் இன்று நடைபயணம் புறப்பட்டனர். கூடலுார் முல்லை சாரல் விவசாய சங்கம், கூடலுார் விவசாய சங்கம், முல்லை பெரியாறு பாசன குடிநீர் பாதுகாப்பு சங்கம், பதினெட்டாம் கால்வாய் விவசாய சங்கம், தென்னை மர விவசாயிகள் சங்கம், தேனி, கோவை மாவட்ட சுபாஷ்பாலேக்கர் இயற்கை விவசாய சங்கத்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
கூடலுார் பேருந்து நிலையத்திலிருந்து நுாற்றுக்கணக்கானோர் குமுளி நோக்கி நடைபயணம் தொடங்கினர். தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் டி.எஸ்.பி., ஸ்ரேயா குப்தா, கூடலுார் இன்ஸ்பெக்டர் முத்துமணி, கம்பம் இன்ஸ்பெக்டர் லாவண்யா உள்ளிட்ட போலீஸ் படையினர் இவர்களை தடுத்து நிறுத்தினர்.
பேபி அணையினை பலப்படுத்தி உடனடியாக முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பினை அவமதித்து, இருமாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட கேரள நீர்வளத்துறை அமைச்சர் லோகி அகஸ்டின், வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட அத்தனை விஷயங்களையும் தமிழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும், தமிழன்னை படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும். பேபி அணைக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும் என்பது உட்பட போராட்டக்குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து நடைபயணம் வாபஸ் பெறப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu