தேனியில் பிரியாணிக்கு தடை விதித்த போலீசார்

தேனியில் பிரியாணிக்கு தடை விதித்த போலீசார்
X

பைல் படம்

Police News -சமூக விரோதிகளை கருத்தில் கொண்டு தேனியில் இரவு நேரத்தில் கடைகளில் பிரியாணி விற்க போலீசார் தடை விதித்துள்ளனர்

Police News -தேனியில் நுாற்றுக்கணக்கான பிரியாணிக்கடைகள் உள்ளன. அத்தனையிலும் வியாபாரம் கொடி கட்டிப்பறக்கிறது. தினமும் அத்தனை கடைகளிலும் பிரியாணி விற்பனை நடக்கிறது. ஆனால் இரவு நேரத்தில் பிரியாணி கிடைப்பதில்லை. இரவு 11 மணிக்கே அத்தனை கடைகளையும் மூடி விட வேண்டும் என போலீசார் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இதனால் தேனியில் பெரும்பாலான ஓட்டல்கள் இரவு 10 மணிக்கு மேல் மூடப்பட்டு விடும். இரவு 11 மணிக்குள் அத்தனை ஓட்டல்களும் மூடப்படும்.

இரவில் பிரியாணி சாப்பிட விரும்புபவர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே தேனியில் 24 மணி நேரமும் பிரியாணி விற்பனை செய்ய ஒரு சிலர் முடிவு செய்தனர். ஆமாம் 24 மணி நேரமும் சூடாக மட்டன், சிக்கன், முட்டை பிரியாணி இதேபோல் தால்ச்சா, மட்டன் கிரேவி, முட்டை கிரேவி, சிக்கன் கிரேவி விற்க ஏற்பாடு செய்து கடைகளை திறந்தனர்.

இதற்கு போலீசார் தடை விதித்து விட்டனர். தேனியில் இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை அனுமதிக்கப்பட்ட ஒருசில டீக்கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதியில்லை என தெரிவித்தனர். இந்த டீக்கடைகளும், இரவில் சரக்கு ஏற்றி இறக்குபவர்களுக்கும், இரவு நேர பயணிகளின் நலன் கருதியும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது புதிய பஸ்ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ்ஸ்டாண்ட், பெரியகுளம் ரோட்டில் இந்த கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மற்ற கடைகள் அனைத்தையும் மூடி விட வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருக்கும் நிலையில், இரவில் பிரியாணிக்கு என சிறப்பு கடைகளை திறந்தால் தேவையற்ற பிரச்னை ஏற்படும். குடிமகன்கள் கடைகளில் பிரியாணி சாப்பிட்டு தகராறு செய்வார்கள். தவிர இந்த கடை இருக்கும் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் போது, இரவு நேர திருட்டு மற்றும் இதர குற்றவாளிகள் இந்த கூட்டத்திற்குள் வந்து அடைக்கலமாகும் வாய்ப்புகள் உள்ளது.

இப்படி கூட்டத்தில் கலந்து விட்டால் போலீசாரிடம் இருந்து எளிதில் தப்பி விடவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இரவு நேர குற்றங்களை தடுக்கவும், போலீசாரின் ரோந்து பணிக்கு வசதியாகும் இரவில் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது என போலீஸ் நிர்வாகம் கை விரித்து விட்டது.

அதேபோல் வியாபாரிகள் சங்கமும், வியாபாரத்தில் புதுமை என்ற பெயரில் குழப்பங்கள் செய்ய முடியாது. இரவில் பிரியாணி விற்று வருவாய் தேட வேண்டிய அவசியம் இல்லை. பிரியாணி கடைகளை பொறுத்தவரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தான் விற்பனை நேரம். சிலர் விரும்பினால் இரவு 10 மணி வரை கூட விற்றுக் கொள்ளலாம். ஆனால் 24 மணி நேர பிரியாணி கடை என திறந்து போலீசாருக்கு நெருக்கடி தர வேண்டாம்' என முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து இரவு நேர பிரியாணி கடை திறக்கும் முடிவினை கை விட்டு, காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பிரியாணி விற்க முடிவு செய்துள்ளதாக கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!