தேனி தொகுதி தி.மு.க., வேட்பாளரின் பிளஸ் பாயிண்ட்கள் என்ன?

தேனி தொகுதி தி.மு.க., வேட்பாளரின்  பிளஸ் பாயிண்ட்கள் என்ன?
X

தேனி மாவட்டத்தின் முக்கிய தி.மு.க, அரசியல் பிரமுகர் ஜீவா.

தேனி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் தங்க.தமிழ்செல்வனின் பிளஸ் பாயிண்ட்கள் என்ன?

தேனி தொகுதியின் மிக நீண்ட கால அரசியல் பிரமுகர் ஜீவா. தி.மு.க.,வில் பலமுறை எம்.எல்.ஏ.,வாக போட்டியிட சீட் கேட்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர். மிகுந்த அரசியல் அனுபவமும், பொதுமக்கள் தொடர்பும் உள்ள இவர் சமீபகாலமாக யூடியூபராகவும் மாறி உள்ளார்.

இவர் தேனி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் தங்க.தமிழ்செல்வனின் பிளஸ் பாயிண்ட்கள் பற்றி கூறியதாவது:

தி.மு.க., வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன். சொந்த தொகுதியை சேர்ந்தவர். மண்ணின் மைந்தர். மிகவும் பாரம்பரியமான அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர். ஏற்கனவே எம்.பி., எம்.எல்.ஏ., என பல உயரிய அரசியல் பதவிகளை வகித்த அனுபவம் உள்ளவர். தொகுதி முழுக்க மக்களிடம் அறிமுகம் ஆன வேட்பாளர்.

தேனி தொகுதி தி.மு.க., வின் கோட்டையாக தற்போது மாறி உள்ளது. காரணம், தற்போது உள்ள நிலையில், தங்க.தமிழ்செல்வனுக்கு பல்வேறு சாதகங்கள் உள்ளன. அதில் ஒன்று தி.மு.க.,வினரின் ஒட்டுகள். சிந்தாமல், சிதறாமல் மொத்தமாக விழும். தவிர கூட்டணி கட்சியான விடுதலைச்சிறுத்தைகள், காங்., கம்யூனிஸ்ட்கள் உட்பட அத்தனை கட்சியினரின் ஓட்டுகளும் முழுமையாக கிடைக்கும். தவிர முஸ்லீம், கிறிஸ்தவ சிறுபான்மையினரின் ஓட்டுகளும் ஒரு ஓட்டு தவறாமல் கிடைக்கும்.

எல்லாவற்றையும் விட சிறந்த பிளஸ் பாயிண்ட் தி.மு.க.,வின் கட்சி உள்கட்டமைப்பு. தமிழகத்தில் அதுவும் குறிப்பாக தேனி மாவட்டத்தில் தி.மு.க.,வின் கட்சி உள்கட்டமைப்பு மிகுந்த பலம் வாய்ந்ததாக உள்ளது. என்ன தான் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தல் என்று வந்து விட்டால், தி.மு.க.,வினர் அத்தனை பேரும் ஒரே குடும்பமாக மாறுவது தான் அக்கட்சியின் தனிச்சிறப்பு.

இப்போதும் அது தான் நிகழ்ந்துள்ளது. தவிர கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வதில், தி.மு.க.,விடம் இருந்து தான் பிற கட்சிகள் பாடம் கற்க வேண்டும். தங்கள் கட்சியின் ஓட்டுகள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் எத்தனை உள்ளன என்பது அந்த பகுதி தி.மு.க.,வினருக்கு தெள்ளத்தெளிவாக தெரியும். தேர்தல் நாளன்று அந்த ஓட்டுக்களை பெட்டிக்குள் கொண்டு வந்து சேர்க்கும் திறனும் தி.மு.க.,விற்கு மட்டுமே உண்டு.

தங்க.தமிழ்செல்வன் தி.மு.க.,வின் வடக்கு மாவட்ட செயலாளர். ஒரு மாவட்ட செயலாளர், அதுவும் ஆளும் கட்சி மாவட்ட செயலாளர், அசுர பலம் கொண்ட கட்சியின் மாவட்ட செயலாளர். தமிழகத்தில் வலுவான கூட்டணி கொண்ட கட்சியின் வேட்பாளர் என்ற பல பிளஸ் பாயிண்ட்கள் உள்ளன. தேர்தல் பணிகளில் தி.மு.க., காட்டிய வேகம் ஒட்டுமொத்த கட்சியினரையும், மக்களையும் திகைக்க வைத்தது. இந்த தேர்தலில் அவ்வளவு சிறப்பாக வேலை செய்தனர். இன்னும் ஓட்டுப்பதிவிற்கு ஒரே நாள் மட்டும் இருக்கும் நிலையில், தி.மு.க.,வினர் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஆக சிறுபான்மை ஓட்டுகள், தி.மு.க., ஒட்டுகள், கூட்டணி கட்சிகளின் ஓட்டுகள் என்று விலைபோகாத ஓட்டுகள் தி.மு.க.,வின் மிகப்பெரும் பலம். அந்த ஓட்டுக்களை பெட்டிக்குள் கொண்டு வந்து சேர்க்கும் தி.மு.க., என்ற ஆளும் கட்சியின் சிறந்த கட்டமைப்பின் பலம் என பல சாதகங்கள் உள்ளன.

இந்த ஓட்டுக்களை வைத்து மதிப்பிட்டால் தொகுதிக்கு ஒண்ணேகால் லட்சம் ஓட்டுகள் வீதம், ஆறு தொகுதிக்கும் சேர்ந்து ஏழுரை லட்சம் ஓட்டுகள் வாங்குவார் என்பது உறுதி. அ.தி.மு.க.,வாலோ, தி.மு.க.,வாலோ இந்த ஓட்டுகளில் சில நுாறினை கூட மாற்ற முடியாது. காரணம் அவ்வளவும் கொள்கைப்பிடிப்புள்ள ஓட்டுகள்.

அ.தி.மு.க., அறிமுகம் இல்லாத வேட்பாளரை நிறுத்தி உள்ளது. அ.தி.மு.க., மூன்றாக சிதறி கிடக்கிறது. ஆண்டு முழுவதும் பள்ளிக்கு சென்ற மாணவன், பரிட்சைக்கு செல்லாமல் விடுப்பு எடுப்பது எப்படி அந்த மாணவனின் ஒட்டுமொத்த உழைப்பையும் வீணாக்கி விடுமோ, அப்படி தேனி தொகுதியில் பா.ஜ.க.,வினரின் உழைப்பு வீணாகி விட்டது.

எனக்கு தெரிந்த வகையில் திறன் வாய்ந்த பா.ஜ.க., நிர்வாகிகள் யாரும் இந்த தேர்தலில் வேலை செய்யவில்லை. இப்படி அ.தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும் திசை தெரியாமல் பயணிப்பதும் தி.மு.க.,விற்கு பெரும் சாதகமாக உள்ளது. நான் தேர்தல் முடிவுகளை பற்றி சொல்லவில்லை.

யார் நமக்கு எம்.பி.,யாக வர வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்ய உள்ளனர். மக்களின் மனநிலை பற்றி நான் கருத்துக்கணிப்பு எதுவும் நடத்தவில்லை. ஆனால் எனது அரசியல் அனுபவத்தின் அடிப்படையில், தற்போது தொகுதியை உற்று கவனித்ததில், எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாவட்டத்தில் கட்சியினரின் சாதகங்களை பற்றித்தான் சொல்கிறேன். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு