பொங்கல் பண்டிகையையொட்டி நீர்வீழ்ச்சிகளில் குளிக்க அனுமதி..!
வைகை அணை படம்.
தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வைகை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. ஒரு வாரத்தினை கடந்தும் அணை நீர் மட்டம் 71 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த பரவலான மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வரை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
கடந்த ஆறு நாட்களாக மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. இதனால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 1150 கனஅடி மட்டும் நீர் வரத்து உள்ளது. வரும் நீர் முழுக்க வெளியேற்றப்பட்டு அணையின் நீர் மட்டம் 71 அடியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பெரியாறு அணை நீர் மட்டம் 138.75 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி நீர் வரத்து உள்ளது. வரும் நீர் முழுக்க வெளியேற்றப்பட்டு வருகிறது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் நுாற்றி இருபத்தி ஆறு அடியை தாண்டி உள்ளதால், அணை நுாறு நாட்களை கடந்தும் பொங்கி வழிகிறது. மஞ்சளாறு அணை, சண்முகாநதி அணைகளும் நிரம்பி உள்ளன.
அதேபோல் முல்லைப்பெரியாறு, வைகை ஆறு, சுருளியாறு, வராகநதி, கொட்டகுடி ஆறுகளில் இன்னும் நீர் வரத்து இருந்து கொண்டு தான் உள்ளது. நீர் வரத்து அபாயகரமான அளவில் இல்லை என்றாலும், பயணிகள், பொதுமக்கள் ஆறுகளில் பாதுகாப்பான இடங்களை தவிர மற்ற இடங்களில் குளிக்க வேண்டாம் என தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
பண்டிகை காலம் என்பதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் சின்னசுருளி அருவி, சுருளி அருவி, அணைக்கரைப்பட்டி நீர் வீழ்ச்சி, கும்பக்கரை நீர் வீழ்ச்சிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu