கேரளா வெள்ளத்தில் மிதக்க பெரியாறு அணையா காரணம்? பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் காட்டம்!
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தற்போது பெரியாறு அணை வறண்டு கிடக்கிறது. 152 அடி நீர் மட்ட உயரம் கொண்ட பெரியாறு அணை நீர் மட்டம் தற்போது வரை 123 அடியை எட்டக்கூட இல்லை. ஆனால் கேரளா தற்போது வெள்ளத்தில் மிதக்கிறது.
கேரளத்து அறிவாளிகள் ரசல் ஜோய்,பாதர் ஜெபஸ்டியன் கொச்சுபுரக்கல் உடனடியாக ஏலப்பாறைக்கு வந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பாருங்கள். தென்மேற்கு பருவமழை முழுமையாக ஓய்வு பெற்று விட்ட நிலையில், கேரளாவில் தற்போது மழை கொட்டி தீர்க்கிறது. இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டிருக்கும் இந்த கனமழையால், கர்நாடக எல்லையில் உள்ள காசர்கோடு மாவட்டம் மட்டும் தப்பித்து இருக்கிறது.
கேரளாவில் உள்ள பிரதானமான 14 ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. கேரளா வறட்சியில் இந்த ஆண்டு சிக்கி விடுமோ என்று மலையாள சகோதரர்கள் பயந்திருந்த நிலையில், அடித்து ஊற்றும் கண்மண் தெரியாத மழையால் கதி கலங்கி கிடக்கிறது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அறிவாளி என்று தன்னை பீற்றிக்கொள்ளும் வழக்கறிஞர் ரசல் ஜோய், பாதர் ஜெபஸ்டியன் கொச்சுபுரக்கல் உள்ளிட்ட பெரிய மனிதர்களுக்கு எங்கள் சங்கம் ஒரு அழைப்பை விடுக்கிறது .
முல்லைப் பெரியாறு அணை தற்போது வறண்டு கிடக்கிறது. 152 அடி நீர் மட்ட உயரம் கொண்ட பெரியாறு அணையில் தற்போது வரை நீர் மட்டம் 123 அடியை தாண்டவில்லை. பெரியாறு அணையில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கேரளாவை நோக்கி திறக்கப்படவில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது என்று கூக்குரலிடும் சப்பாத்து கிராமத்தில், இன்று மாலை 6 மணி அளவில் முல்லைப் பெரியாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
ஏலப்பாறையிலும் ,ஐயப்பன் கோவிலிலும் இதுதான் நிலைமை. பெரியாறு அணையையே நாங்கள் திறக்கவில்லை. ஆனால் தண்ணீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இது எப்படி. கேரளத்து அறிவாளிகள் இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று நமக்கு கண்டுபிடித்து சொல்லுவார்கள் என்று நம்புகிறோம். பெரியாறு அணைக்கு வரும் நீரை கேரள அரசு வனத்திற்குள்ளேயே சிறு, சிறு அணைகள் கட்டி திசை திருப்பி விட்டுள்ளதே இதற்கு காரணம். இதனால் பெரியாறு அணைக்கு வர வேண்டிய தண்ணீர் தேவையில்லாமல், இடுக்கி அணை நோக்கி செல்கிறது.
பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் நான்கு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. ஆனால் அணைக்கு இதுவரை ஆயிரம் கனஅடி நீர் கூட வரவில்லை. அவ்வளவு நீரையும் கேரள அரசு வனத்திற்குள் அணைகட்டி திருப்பி விட்டுள்ளது. சென்டரல் வாட்டர் கமிஷன் அதாவது மத்திய நீர் வள ஆணையம் இந்த வுிஷயத்தில் நேரடியாக தலையிட்டு, கேரளாவின் திருட்டுத்தனத்தை தடுக்க வேண்டும்.
மத்திய நீர் வள ஆணையமோ, மூவர் கமிட்டியோ, ஐவர் கமிட்டியோ இதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். கேரளாவில் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்நிலை தொடர்வது ஆரோக்கியம் அல்ல. சம்மந்தப்பட்ட நிர்வாகத்துறைகள் இதில் நேரடியாக தலையிட்டு சரி செய்ய வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu