நீங்கள் தடுத்தால்... இனி நாங்களும் தடுப்போம்... பெரியாறு பாசன விவசாயிகள் எச்சரிக்கை!
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: குமுளி தேக்கடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பெரியார் புலிகள் காப்பகம், கடந்த 1978 ஆம் ஆண்டு தேசிய புலிகள் ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. 925 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த புலிகள் காப்பகம், தமிழகத்தோடு பெருமளவில் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்த பெரியார் புலிகள் காப்பகம், ஒரு இணை இயக்குனரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. இரவங்கலாறு, கோட்டமலை, மணலாறு, மாவடி, மயிலப்பாரா, மூல வைகை, பெரியார் சுந்தரமலை, தாமரை, தானிக்குடி, என பத்து டிவிசன்கள் தமிழகத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இதில் தாணிக்குடி ரேஞ்சுக்கு செல்ல வேண்டுமானால், பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் பயன்படுத்துவது முழுக்க முழுக்க தமிழக வழியைத்தான். குமுளியிலிருந்து கிளம்பி ஒன்றாவது கிலோ மீட்டரிலேயே தமிழக எல்லையை அடையும் புலிகள் காப்பக அதிகாரிகள், லோயர் கேம்ப், கம்பம், சின்னமனூர், அண்ணா நகர், கடமலைக்குண்டு, குமணந்தொழு, கோரையூத்து வழியாக மேகமலை புலிகள் காப்பக எல்லையான மஞ்சனூத்து சோதனை சாவடியை தாண்டி, வெள்ளிமலை வழியாக தங்களுடைய தானிக்குடி ரேஞ்சுக்கு செல்கிறார்கள்.
கிட்டத்தட்ட 90 கிலோ மீட்டர் தூரம் இந்த பெரியார் புலிகள் காப்பக வண்டிகள் தமிழகத்தின் வழியே தான் பயணிக்கிறது. அவர்கள் பயணிக்கும் வண்டிகளில் தேனி மாவட்ட நிர்வாகத்தின் எவ்வித அனுமதியும் இன்றி, எல்லா வகையான ஆயுதங்களும் கொண்டு செல்லப்படுகிறது. சின்னமனூர் சந்தையில் தான் இவர்கள் காய்கறிகளை வாங்குகிறார்கள். முறையான எந்தவித அனுமதியையும் அவர்கள் தமிழகத்தின், தேனி மாவட்ட நிர்வாகத்திடம் பெறவில்லை என்பதை,கடந்த வாரம் தேனியில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் நாங்கள் உறுதி செய்து கொண்டோம். இது ஏற்புடையதுதானா என்பதை தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுகிறோம். முல்லைப் பெரியாறு அணையில் பணி செய்யும் பொதுப்பணி துறையின் தமிழகப் பொறியாளர்கள் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை கொண்டு செல்லவே தடை விதிக்கும் இந்த பெரியார் புலிகள் காப்பக அதிகாரிகளை, எந்த அடிப்படையில் தமிழகத்திற்குள் பயணிக்க அனுமதிக்கிறோம்.
அதேபோல குமுளியிலிருந்து பெரியார் புலிகள் காப்பகத்தின் செண்பகவல்லி கால்வாய் பகுதிக்கு செல்லும், சுந்தரமலை டிவிஷனுக்கு செல்ல, 224 கிலோமீட்டர் தமிழகத்தின் வழியே பயணிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களை கடந்து தங்களுடைய சுந்தரமலை டிவிஷனுக்கு செல்லும் இவர்கள் மேற்கண்ட நான்கு மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதியை பெற்று இருக்க வேண்டும். ஆனால் பெறவில்லை.
இதுகுறித்து தேனி மதுரை விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகங்களும் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இத்தனை தூரம் தமிழகத்திற்குள் சர்வ சுதந்திரமாக பயணிக்கும் இவர்கள், பெரியாறு அணைக்குச் செல்லும் வல்லக்கடவு சோதனை சாவடியில் அமர்ந்து கொண்டு அணையில் தங்கி பணி புரியும் தமிழக பொறியாளர்களையும், ஊழியர்களையும் அனுமதிக்க மறுப்பதோடு, ஒரு தளவாட சாமானை கொண்டு செல்ல வேண்டுமானால் கூட, அவரிடம் கேள், இவரிடம் கேள் என அலைக்கழிப்பு செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
கேரளாவின் தலைமைச் செயலாளர் கொடுத்த கடிதத்தை காண்பித்தும், அதை ஏற்க மறுத்த குமுளி ரேஞ்சர், கடிதத்தை வாங்கி கிழித்துப் போட்டு விட்டு, எது வேண்டுமானாலும் வனத்துறையை கேட்க வேண்டும் என்று அதிகாரம் செய்துள்ளனர்.
தமிழகத்தின் இரண்டு வழியையும் பெரியார் புலிகள் காப்பக அதிகாரிகள் இனி பயன்படுத்த வேண்டுமானால், வல்லக்கடவு சோதனை சாவடியில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது இனிமேல் கெடுபிடி காட்டக்கூடாது, மீறிக்காட்டினால், தமிழகத்திற்குள் பெரியார் புலிகள் காப்பக வண்டிகளை நுழைய அனுமதிக்க மாட்டோம். தானிக்குடி ரேஞ்சுக்கு செல்லும் வண்டிகளை கடமலைக்குண்டு வில்தடுத்து நிறுத்துவோம். சுந்தரமலை ரேஞ்சுக்கு செல்லும் வண்டிகளை வாசுதேவநல்லூரில் தடுத்து நிறுத்துவோம்.
வரும் 10ம் தேதிக்குள் இதற்கான முடிவை எட்டுவதற்கு தேனி மற்றும் இடுக்கி மாவட்ட வனத்துறை தலைமை அதிகாரிகள் தயாராக வேண்டும். பெரியார் புலிகள் காப்பக இணை இயக்குனர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் ஆகிய இருவரும் கூட்டுக் கூட்டத்தை நடத்துவதற்கு தயாராக வேண்டும். 999 ஆண்டுகள் தமிழகத்திற்கு சொந்தமாக எழுதிக் கொடுக்கப்பட்ட பெரியாறு அணைக்குள் செல்வதற்கு தடை விதிக்க எவருக்கும் அனுமதி இல்லை என்கிற நிலையில், தொடர்ந்து பல பத்தாண்டுகளாக அந்த நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருக்கும் பெரியார் புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு நம்முடைய கண்டனங்கள்.
படகு மூலமாகவோ அல்லது வல்லக்கடவு தரைப்பாதை வழியாகவோ செல்லும் அடையாள அட்டை பொறித்த தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களை, இனிமேல் ஏதாவது காரணம் சொல்லி, அணைக்குள் விட மறுத்தால், தமிழக எல்லைக்குள் பெரியார் புலிகள் காப்பக வண்டிகளை அனுமதிக்கப் போவதில்லை. வண்டிகளை மறித்து போராட்டத்தை தொடங்குவோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu