தேனி வனத்துறையினர் மீது பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
Tamilnadu Forest Department -பழங்குடியின மக்கள் வீடுகள் கட்டக்கூடாது என தடுக்கும் வனத்துறை, மலையாளிகள், ரோடு அமைக்கவும் உல்லாச பயணம் மேற்கொள்ள குடில்கள் அமைக்கவும் அனுமதிக்கிறது.இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: -
சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பழங்குடியின மக்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொள்வதற்காக போராடும்போது அவர்களுடன் சரி மல்லுக்கட்டும் தேனி மாவட்ட வனத்துறை, தங்கள் எல்லைக்குட்பட்ட வன நிலங்களில் மலையாளிகள் ஆதிக்கம் செலுத்தும் போது மட்டும் எதையும் கண்டு கொள்ளாமல் கவனமாக கடந்து போகிறது.
இது இயல்பாக நடக்கிறதா அல்லது திட்டமிடலோடுதான் நடக்கிறதா என்கிற கேள்வி அவ்வப்போது எழத்தான் செய்கிறது. தேவிகுளம் தாலுகாவில் உள்ள எல்லப்பட்டி வனப்பகுதி, அதே தேவிகுளம் தாலுகாவில், கடல் மட்டத்திலிருந்து 8200 அடி உயரமுள்ள கொழுக்குமலை வனப்பகுதி, கண்ணகி கோட்டம் அமைந்திருக்கும் வண்ணாத்திப் பாறை வனப்பகுதி, மேகமலை வனச்சரகத்தில் வரும் தாண்டிக்குடி வனப்பகுதி, குமுளி முதல் மறையூர் வரை உள்ள தமிழக கேரள எல்லைப்பகுதி என கடந்த 1956 மொழிவழி பிரிவினைக்கு பின், தமிழகம் கிட்டத்தட்ட இந்த பகுதிகளில் மட்டும், அதாவது மேகமலை தாண்டிக்குடி வனப்பகுதி முதல் மறையூர் வரை, கிட்டத்தட்ட 250 சதுர கிலோமீட்டர் பரப்பை கேரளாவிடம் இழந்திருக்கிறது. (இதை இல்லை என்று தேனி மாவட்ட வனத்துறை நிரூபிக்க தயார் என்றால் நாங்களும் தயார்)
இப்போது அந்த பழைய விட்டுக்கொடுத்தல்களின் அடிப்படையில், குமுளி 2-ஆம் மைலில் இருந்து நான்காம் மைல் வரை, தமிழக வன எல்லைக்குள் கேரள மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை தைரியமாக சாலை அமைத்துக் கொண்டிருப்பதோடு, ஜியோ டவர் ஒன்றையும் தமிழக வனப்பகுதிக்குள் நிறுவி இருக்கிறது. அதேபோல் தமிழக வனப்பகுதிகளுக்குள் மலையாளிகள் தங்கி சுற்றுலா சுகத்தை அனுபவிக்க குடில்கள் உட்பட அத்தனை வசதிகளையும் செய்து கொள்ள தமிழக வனத்துறை அனுமதிக்கிறது.
அப்பாவி விவசாயிகளிடம் அகமலையிலும், குரங்கணியிலும் வீடு கூட கட்டக்கூடாது என முண்டா தட்டும் இந்த தேனி மாவட்ட வனத்துறை, மலையாளிகளிடம் மட்டும் அடக்கி வாசிப்பதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்று தெரிய வேண்டும். உங்கள் மீதான நம்பகத்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் இழந்து வந்த நிலையில், மறுபடியும் குமுளி 2 ம் மைல் முதல் 4 ம் மைல் வரை மலையாளிகள் நடத்தும் அத்துமீறல்களால் மேலும் குறைந்திருக்கிறது.
தேனி மாவட்ட வன அலுவலர் குமுளி 2 ம் மைல் முதல் 4 ம் மைல் வரை மலையாளிகள் நடத்தும் அத்துமீறலை பற்றி பேசுவாரா? பட்டப்பகலில் தமிழக வன நிலம் என்று தெரிந்தும், மலையாளிகள் சாலை போடுகிறார்கள் என்று தெரிந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை.
கம்பம் மெட்டில் உள்ள கேரள காவல் சோதனை சாவடி, அப்பட்டமாக தமிழக வனநிலத்தில் இருக்கிறது என்று தெரிந்தும், எந்த அடிப்படையில் அதை இத்தனை நாட்கள் விட்டு வைத்திருக்கிறீர்கள் தேனி மாவட்ட வனத்துறையினரே?
நாவல் பள்ளம் முதல் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா வரை தமிழக வன நில எல்லையை அளவீடு செய்ய எதற்காக எந்த முயற்சியும் நீங்கள் எடுக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
உடனடியாக குமுளி 2 ம் மைல் முதல் 4 ம் மைல் வரையிலான தமிழக வன நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கம்பம் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
அதுவும் கம்பம் வனச்சரக அதிகாரிகள் மலையாள மாஃபியாக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அமைதியாக இருக்கிறீர்கள் என்கிற குற்றச்சாட்டை நாங்கள் தெளிவாக பதிவு செய்வோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu