பெரியாறு அணை நீர் மட்டம் உயர்வு! ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது

பெரியாறு அணை நீர் மட்டம் உயர்வு! ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர் மதுரை நோக்கி பாய்ந்து செல்கிறது. இடம்: ஆண்டிபட்டி வைகை ஆறு.

பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக அணை நீர் மட்டம் 118.50 அடியாக உயர்ந்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கடந்த 15 நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களாகவே பலத்த மழை பெய்தது. நேற்று மழையில்லை என்றாலும், இன்று மழைக்கான வாய்ப்புகள் உள்ளது.

115 அடி வரை குறைந்த அணையின் நீர் மட்டம் இந்த மழை காரணமாக மெல்ல மெல்ல உயர்ந்தது. நேற்று மட்டும் ஒரே நாளில் அணை நீர் மட்டம் ஒரு அடி வரை உயர்ந்தது. தற்போது நீர் மட்டம் 118.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 2000ம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி மட்டும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணை நீர் மட்டம் இன்னும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

45 அடி வரை குறைந்த வைகை அணை நீர் மட்டமும், மெல்ல அதிகரித்து 48 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது வைகை அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 472 அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மூலம் திண்டுக்கல், மதுரை, சிவங்ககை மாவட்டங்களில் கரையோரப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக மதுரை நகருக்குள் ஊடுருவிச் செல்லும் வைகை நதியில் ஒரு மாதத்திற்கும் மேல் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இதனால் மதுரை நகரின் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணைகளுக்கும் நீர் வரத்து உள்ளது. இந்த அணைகளின் நீர் மட்டமும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story