பெரியாறு அணை நீர் மட்டம் சரிவு: தேனி மாவட்ட விவசாயிகள் கலக்கம்
பெரியாறு அணை பைல் படம்.
கடந்த ஜூன் முதல் தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.50 அடியாக இருந்த நிலையில் தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகளும் நாற்றங்கால் பாவி நாற்றுகள் வளர்த்து விட்டனர். இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் இந்த நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். நடவுக்கு முன் வயலினை தயார் செய்ய வேண்டும். அதாவது வயல் முழுக்க தண்ணீர் நிரப்பி, சேற்று உழவு போட்டு, பின்னர் தான் நடவு செய்ய வேண்டும். இந்த பணிகளை நடவுக்கு மூன்று நாட்கள் முன்னரே முடிக்க வேண்டும்.
ஆக எப்படியும் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி வரை தண்ணீர் திறந்தால் மட்டுமே வயல்களில் சேற்று உழவு போட தேவையான தண்ணீர் எடுக்க முடியும். ஆனால் பெரியாறு அணையின் நீர் மட்டம் தற்போது 116.45 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 356 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர் வரத்து இல்லை. இந்நிலையில் இவ்வளவு நீர் எடுத்தால், நீர் மட்டம் ஒரு வாரத்தில் 110 ஆக குறைந்து விடும். எனவே தற்போது பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
பருவமழை கேரளாவில் தொடங்கினாலும் இன்னும் வலுவடையவில்லை. இதனால் பெரிய அளவில் கேரளாவில் மழை பெய்யவில்லை. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து இல்லை. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை இன்னும் ஐந்து நாட்களுக்குள் பெரியாறு அணை நீர் மட்டம் உயராவிட்டால், நடவுப்பணிகள் பாதிக்கும். நாற்றங்கால் பாவி உரிய காலத்திற்குள் நடவுப்பணிகளை முடிக்காவிட்டால், நாற்றுக்கள் பருவத்தை தாண்டி வளர்ந்து விடும். பின்னர் நடவு செய்வது சிரமம். எனவே தேனி மாவட்ட விவசாயிகள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu