பெரியாறு அணை விவகாரம்: அண்ணாமலைக்கு தேனி மாவட்ட விவசாயிகள் கேள்வி

பெரியாறு அணை விவகாரம்:  அண்ணாமலைக்கு தேனி மாவட்ட விவசாயிகள் கேள்வி
X

பெரியாறு அணை (பைல் படம்).

ரசல் ஜோயை, பொள்ளாச்சியில் சந்தித்தது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு தேனி மாவட்ட விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ரசல் ஜோயை, பொள்ளாச்சியில் சந்தித்தது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு தேனி மாவட்ட விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரசல் ஜோய், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொள்ளாச்சியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். ஒரு தலைவரை யார் வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம் என்கிற நியதியின் அடிப்படையில் இது தோற்றமளித்தாலும், இதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது தெரிய வேண்டும்.

ஏனென்றால் De Commission முல்லைப் பெரியாறு என்கிற முழக்கத்தை முன்வைத்து மிகப்பெரிய அளவில் கேரளாவில் உள்ள இடுக்கி, எர்ணாகுளம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து ஏழெட்டு ஆண்டுகளுக்கு மேலாக கடும் பிரச்சாரத்தை நிகழ்த்தி வரும் இந்த ரசல் ஜாய், எந்த அடிப்படையில் அண்ணாமலையை சந்தித்தார் என்பது தெரிய வேண்டும். இந்த ரசல் ஜோயை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தது யார் என்பதும் தெரிய வேண்டும்.

உச்சநீதிமன்றம் கடந்த 2006 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில், முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று கொடுத்த இரண்டு தீர்ப்புகளுக்கு எதிராக, வதந்திகளை தொடர்ந்து பரப்பி வரும் இந்த ரசல் ஜோய் என்பவர், பாதர் ஜோ நிரப்பல், முல்லைப் பெரியாறு அணையை அடுத்து இருக்கும் சப்பாத்திலுள்ள தேவாலயத்தின் முன்பாக ஆரம்பித்து வைத்த முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான விஷம கருத்துக்களை தொடர்ச்சியாக எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். தமிழர்களுக்கும், முல்லைப்பெரியாறு அணைக்கும் எதிராக செயல்படும் இந்த ரசல்ஜோய் எந்த அடிப்படையில் அண்ணாமலையை சந்தித்தார்.

ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே தீருவோம் என்று ஹை ரேஞ்ச் சாம்ரக்ஷ்ண சமிதி இயங்கி வரும் நிலையில், இந்த ரசல் ஜோய் ஆரம்பித்த சேவ் கேரளா பிரிகேட் அமைப்பும் அதே வேலையைத் தான் செய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை குறித்த பல்வேறு நிபுணத்துவம் பெற்ற 14 நிபுணர் குழுக்களின் அறிக்கைகளின் ஆய்வின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், தொடர்ச்சியாக அந்த நிபுணர் குழுக்களை இழிவு செய்யும் வேலையில் இறங்கி இருக்கும் நபர் இந்த ரசல் ஜோய், அறிவியலும் தெரியாமல், புவியியலும் தெரியாமலும், நிலவியலும் தெரியாமல் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக தொடர்ந்து களத்தில் நின்று போராடுவதோடு, இளம் பிஞ்சுகளின் நெஞ்சில் எல்லாம் பெரியாறு அணைக்கு எதிராக நஞ்சை விதைத்து வருகிறார்.

இந்த ரசல் ஜோயை அண்ணாமலை சந்தித்தது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை குறித்து அறிவியல் ரீதியாக தர்க்கம் செய்வதற்கு தயாரா என்று இந்த ரசல் ஜோயிடம் ஒரு முறைக்கு பலமுறை கேட்டிருக்கிறோம். அதற்கெல்லாம் விவாத களத்திற்கு வர தயாரில்லாத இந்த ஜோய், பெரியாறு அணைக்கு எதிராக வேலை செய்து வருவதை அனுமதிக்க முடியாது. இடுக்கி அணைக்கு வரும் தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மட்டும் வருவதல்ல என்பதை பட்டவர்த்தனமாக அறிவிக்க வேண்டிய காலகட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் நிற்கிறது. தேவிகுளம் தாலுகாவில் உள்ள மாட்டுப்பட்டி, குண்டல அணைகளில் இருந்து வரும் தண்ணீர் உள்பட கிட்டத்தட்ட 18 கிளை நதிகளின் தண்ணீர் இடுக்கி அணைக்கு தான் வந்து சேர்கிறது. கேரளாவில் உள்ள பெரிய நதிகளில் ஒன்றான முதிரப்புழையாற்றினுடைய தண்ணீருக்கும், முல்லைப் பெரியாறுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த முதிரைப்புழா ஆற்றினுடையை தண்ணீரை, கோதமங்கலத்தில் இருந்து இடுக்கி செல்லும் சாலையின் இடதுபுறத்தில் ஒரு அணையைக் கட்டி தடுத்து நிறுத்தி, அதற்கு கீழ் பெரியாறு அணை என்று கேரள அரசு பெயர் வைத்தது, மிகவும் தவறான திசை திருப்பும் செயல். இடுக்கி மாவட்டத்தின் நாற்புறத்திலிருந்து ஓடிவரும் அத்தனை மழை வெள்ள தண்ணீரையும் இடுக்கி அணைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டு, அங்கு இருக்கக்கூடிய தண்ணீரெல்லாம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வந்ததாக கதை கட்டி விடும் இந்த ரசல் ஜோய் போன்றவர்களின் பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தக்கூடிய காலம் வந்து விட்டது.

இந்த அணைக்கு மேலே இன்னொரு கிளை அணையை கட்டி விட்டு அதற்கும் பெரியாறு ஆற்றினுடைய பெயரை வைத்திருக்கும் கேரள மாநில அரசும், எந்த அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் உபரி நீர் தான் கேரளாவினுடைய மழை வெள்ளத்திற்கு காரணம் என்று எப்படி குற்றஞ்சாட்டுகிறது என புரியவில்லை. நிலவியல் ரீதியாக முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா உருவாக்கி வைத்திருக்கும் பொய் சித்திரங்கள் பற்றிய உண்மைகளை நாங்கள் தொடர்ந்து வெளியிட்டு அவர்களின் பொய் பற்றி அம்பலப்படுத்துவோம்.

அந்த வேலையை நாங்கள் தெளிவாக செய்தாலே ரசல் ஜோய் போன்றவர்களின் பொய் பிரச்சாரம் எடுபடாது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அண்ணாமலை எங்கள் வினாக்களுக்கு விடையளிப்பார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!