பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க பொதுப்பணித்துறை தயங்குவது ஏன்?
முல்லை பெரியாறு அணை - கோப்புப்படம்
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வைகை அணையில் போதிய இருப்பு உள்ளது. அதாவது வைகை அணை நீர் மட்டம் 68.41 அடி உயரத்திற்கு நீர் இருக்கும் நிலையில், அணைக்கான நீர் வரத்து 558 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான இருபோகப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் அதே நேரத்தில், திருமங்கலம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருபோக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. சற்றுமுன் வரை வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 2,099 கன அடியாக உள்ளது.
அதே நேரத்தில் கம்பம் பள்ளத்தாக்கு இருபோகப் பாசனத்திற்கு போதுமான தண்ணீர் இருக்கிறது. கூடுதலாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போதைய நிலையில் பள்ளத்தாக்கிருக்கும் தண்ணீர் தேவை இல்லாத நிலை தான் உள்ளது.
ஆனால் நேற்று முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு 105 கன அடியாக இருந்த நிலையில், இன்று திடீரென, ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. ரூல்கர்வ் விதிப்படி நவம்பர் 30 வரை, பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கலாம் என்கிற நிலையில், எதற்காக ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்தார்கள் என்று தெரியவில்லை.
கொட்டக்குடி ஆற்றில் இருந்தும், மூல வைகையிலிருந்தும் ஓரளவு தண்ணீர், அதாவது 500 கன அடிக்கு மேல் வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தண்ணீர் திறப்பு அவசியமற்றது.
குறைந்தபட்சம் 136 அடியாவது முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேங்கிய பிறகு தண்ணீரை திறந்து விட்டிருக்கலாம். என்ன நோக்கத்தில் இந்த தண்ணீர் திறப்பு சாத்தியப்பட்டிருக்கிறது என்கிற பல கேள்விகள் நமக்கு எழுகிறது.
கேரளாவின் நெருக்கடி இருக்கிறது என்று சொன்னால், அது குறித்த தெளிவை அணைக்கான பொறுப்பு பொறியாளர் சாம் இர்வின், பொது சமூகத்திற்கு சொல்ல வேண்டும். அதை விடுத்து முற்றிலும் தண்ணீர் தேவையற்ற நிலையில் எதற்காக ஆயிரம் கன அடி தண்ணீரை பெரியாறு அணையில் இருந்து திறக்க வேண்டும்?. யாரை திருப்திபடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் தேனி மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டிலாவது முல்லைப் பெரியாறு அணையை கொண்டு வர வேண்டும். உடனடியாக பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என்பதோடு, இந்த நவம்பர் 30 ஆம் தேதிக்குள் 142 அடி வரை ரூல் கர்வ் விதிமுறைகள் படி உயர்த்துவதற்கு பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu