காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு.. நெகிழ்ச்சி சம்பவம்
பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் காவலர் பாரதிக்கு நிகழ்ந்த வளைகாப்பு நிகழ்ச்சி.
தமிழகத்தில் காவல் நிலையங்கள் என்றாலே எப்போதும் பரபரப்புடனும், ஒருவித பதட்டத்துடனும் காணப்படும் நிலையை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை அரங்கிற்றி உள்ளது தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை காவல் நிலையம்.
பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் பாரதி என்பவருக்கு அவருடைய உறவினரான அருண் என்பவருடன் கடந்த ஆண்டு திருமணமாகியது. காவலர் பாரதி தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
அவருக்கு பிறக்க இருக்கும் முதல் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையில் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னமயில் மற்றும் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி மற்றும் தென்கரை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர்கள் ஒன்றாக இணைந்து முதல் நிலைக் காவலர் பாரதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் பங்கேற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் பெண் ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் காவலர் பாரதிக்கு நெற்றியில் சந்தன குங்குமம் திலகமிட்டு,வளையல் அணிவித்து மலர் தூவி குழந்தை நலமுடன் பிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவலர்கள் ஏற்பாடு செய்திருந்த ஐந்து வகையான உணவு வகைகளை கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் இருவரையும் உணவு அருந்த செய்து காவலர்கள் அனைவரும் உணவு அருந்தினர். காவல் நிலையத்தில் உடன் பணியாற்றும் பெண் காவலருக்கு அனைத்து காவலர்களும் ஒன்று சேர்ந்து தாயுள்ளத்தோடு, சொந்த பந்தங்களாக கூடி நின்று வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu