பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மின்காந்த அதிர்வு சிகிச்சை வசதி
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோர் மனநோயாளிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அனாதையாக விடப்பட்ட மனநோயாளிகளை இங்கு கொண்டு வந்து இலவசமாக தங்க வைத்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்த பின்னர் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குணமடைந்த மனநோயாளிகளுக்கு சுய தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இந்த காப்பகம் மூலம் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் குணப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், மாநில அளவில் சிறந்த மனநோயாளிகள் காப்பகமாக தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசு சார்பில் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருந்து மாத்திரை சாப்பிட மறுக்கும் மனநோயாளிகள், மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த முடியாத கடும் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு ‛மின்காந்த அதிர்வு சிகிச்சை’ அளிக்கப்படுகிறது. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் இங்கு உபகரணங்கள் ஆபரேஷன் வழங்கி தியேட்டர் அமைக்கப்படுகிறது. எந்த பக்க விளைவும் இல்லாத ‛மின்காந்த அதிர்வு சிகிச்சை’ இதுவரை 200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து காப்பகத்தின் டாக்டர்கள் கூறியதாவது:-
பழைய முறைப்படி பாதிக்கப்பட்ட மனநோயாளிகளை கீழே படுக்க வைத்து நான்கு முதல் ஐந்து பேர் அமுக்கி பிடித்துக் கொண்டு மின்காந்த அதிர்வு சிகிச்சை வழங்குவார்கள். தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வந்து விட்டது. ஆபரேஷன் தியேட்டரில் மயக்க மருந்து கொடுத்து ஒரு மணி நேரம் வரை மின்காந்த அதிர்வு சிகிச்சை கொடுக்கிறோம். இந்த புதிய நவீன நுட்பத்தில் ஒரு முறை சிகிச்சை கொடுக்க குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
ஒரு நோயாளிக்கு 20 முறை வழங்க வேண்டியிருக்கும். அந்த கணக்குப்படி ஒரு நோயாளிக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்காந்த அதிர்வு சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பெரியகுளத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. இந்த சிகிச்சை பெற அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். எந்த பக்கவிளைவும் இல்லாத இந்த சிகிச்சையில் இதுவரை 200 பேர் வரை குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu