மீண்டும் வெடிக்கிறது பீர்மேடு பிரச்னை: தமிழக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

மீண்டும் வெடிக்கிறது பீர்மேடு பிரச்னை: தமிழக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
X
தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களையும் இணைத்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.

தற்போது கேரளாவுடன் இணைந்துள்ள இடுக்கி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைந்திருந்தன. முல்லைப்பெரியாறு அணையும் இந்த எல்லைக்குள் தான் அமைந்துள்ளது. மொழிவாரி பிரிவினையின் போது, முழுக்க தமிழர்கள் வசித்த இந்த தாலுகாக்களை கேரளா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த தாலுகாக்களில் மலையாளிகளையும் குடி வைத்தது. இருப்பினும் இப்போது வரை இந்த தாலுகாக்களில் 85 சதவீதம் பேர் தமிழர்கள் தான் வசிக்கின்றனர். இவர்கள் தமிழகத்துடன் சேர வேண்டும் என ஆரம்ப காலம் முதல் அதாவது மொழிவழி பிரிவினை தொடங்கியது முதல் தற்போது வரை கோரிக்கை வைத்து வருகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்னை காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும். அல்லது தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இடையில் இந்த கோரிக்கை சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதே சூழலில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் மராட்டிய-கர்நாடக எல்லை பிரச்சனையில் அடுத்த திருப்பம் நிகழ்ந்திருக்கிறது.

இதுவரை கர்நாடகத்திலுள்ள பெலகாவி, கார்வார் மற்றும் நிப்பானி உள்ளிட்ட 765 கர்நாடக கிராமங்களை, மராட்டிய மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று 60 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்த மராட்டியர்கள், திடீரென மேற்கண்ட பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவசேனா கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சய் ராவத்தின் கருத்தை, கர்நாடகத்தில் உள்ள மராட்டியர்களுக்கான சட்ட அமைப்பின் தலைவர் பாட்டீலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். மராட்டியத்தோடு மட்டுமே இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள், யூனியன் பிரதேச சிந்தனையின் பக்கம் திரும்புவதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

இதே கருத்தை இந்த சூழலில் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்கமும் கையில் எடுத்துள்ளது. பெலகாவி மாவட்ட கிராமங்களை யூனியன் பிரதேசமாக அறிவிப்பதை போல், தமிழக விவசாயிகளின் கோரிக்கையான பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களையும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்துள்ளனர்.

இச்சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: மராட்டிய எல்லையோரம் அமைந்திருக்கும் பெலகாவி மாவட்டம், அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலையோரம் உள்ள, கர்நாடகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். கன்னட மொழி பேசுவோர் 37 சதவீதமாக இருக்கும் நிலையில், மராட்டிய மொழி பேசுவோர் 32.91 சதவீதமாக இருக்கிறார்கள். உருது பேசுவோர் எண்ணிக்கை 19.81 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.

நாடு விடுதலை அடைந்தபோது இந்த பெல்காம் மாவட்டம், பம்பாய் மாகாணத்துடன் இணைந்த பகுதியாக இருந்தது. 1956 இல் பிராந்திய மொழி பேசுபவர்களின் மீது வலியத் திணிக்கப்பட்ட மொழிவழிப் பிரிவினை மோசடியால், அன்றைக்கு 42 விழுக்காடாக இருந்த மராத்திய மொழி பேசிய பெல்காம், சட்ட விரோதமாக கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டது.

இந்த மொழி வழி பிரிவினை மோசடியின் போது அங்கு சிவசேனா உருவாகி இருக்கவில்லை. பால்தாக்கரே போன்ற தலைவர்கள் அன்றைக்கு உருவாகி இருந்தால் மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட கர்நாடகத்திற்கு சென்றிருக்காது. மராட்டிய மொழி பேசும் மக்களின் பேராதரவை பெற்ற சரத்பவார் போன்றவர்கள் எல்லாம், தேசிய நீரோட்டத்தில் இணைந்திருந்ததால் அவர்களால் பிராந்தியவாதம் பற்றி எதுவும் பேச முடியாமல் போயிற்று.

இப்படி வலுக்கட்டாயமாக கர்நாடகத்துடன் இணைக்கப்பட்ட பெல்காம், கார்வார், நிப்பானி உள்ளிட்ட 865 கிராமங்களை உள்ளடக்கிய,கர்நாடகத்தில் உள்ள மராத்தி மொழி பேசும் மக்கள், கடந்த 1960 மே 1 ம் தேதியில் இருந்து, இன்று வரை தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.

மராட்டியர்கள் இன்றளவும் நிறைந்து கிடக்கும் பெல்காம் நகரத்தினுடைய பெயரை, கடந்த 2014 ல் பெலகாவி என்று மாற்றியதோடு, குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டுவதற்காக ,பெல்ஹாம் நகரத்தில் சுவர்ண விதான் சௌதா என்கிற சட்டமன்ற கட்டிடத்தையும் கடந்த 2012 அக்டோபர் 11ஆம் தேதி திறந்து வைத்தார்கள்.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரில் இருந்து 502 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு நகரத்தில், துணை சட்டமன்ற கட்டிடத்தை திறக்கிறார்கள் என்றால், நிலத்தை கன்னடர்கள் எப்படி நேசிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

படிப்படியாக மராத்தியர்களுக்கு சொந்தமான பெல்காம் மாவட்டத்தை வசப்படுத்தி வந்த கன்னடர்களுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான மராட்டிய போராளிகள் இன்றளவும் பெல்காம் மாவட்டத்தில் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கடந்த 2005 ம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி திடீரென பெல்காம் மாநகராட்சியை மராட்டியத்துடன் இணைப்பதாக தீர்மானம் கொண்டு வந்து, அதை நிறைவேற்றவும் செய்தார் பெல்காம் மாநகர மேயரான விஜய் மோர்.

மராட்டிய எகிகிரண் சமிதியை சேர்ந்த விஜய் மோரை கைது செய்ய உத்தரவிட்டதோடு, பெல்காம் மாநகராட்சியையும் கலைத்து உத்தரவிட்டது கர்நாடகா மாநில அரசு. விளக்கம் கொடுப்பதற்காக பெங்களூர் வந்த விஜய் மோரின் முகத்தில் மையை ஊற்றி அட்டகாசம் செய்தார்கள் கன்னட ரக்ஷ்ண வேதிகே தொண்டர்கள்.

தொடர்ந்து பதட்டத்தின் உச்சியில் இருக்கும் பெல்காம் குறித்தான பிரச்சனை, தற்போது உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த முறை மராட்டியத்தின் கை சற்று உயர்ந்திருக்கிறது. வரும் 17ஆம் தேதி மும்பை மாநகரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாராஷ்டிரா விகாஸ் அங்காடி சார்பில், பெல்காமை மராட்டியத்தோடு சேர்க்க சொல்லி மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது.

கர்நாடக எல்லையோர மராட்டிய மாவட்டமான சோலாப்பூரில் வரும் 29 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்திருக்கும் நிலையில், பெல்காமில் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

இந்த நிலையில்தான் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் எழுப்பியிருக்கும் யூனியன் பிரதேசம் என்கிற குரல் மராட்டியத்தில் பெரிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது.

பெல்காம் கார்வார் நிப்பானி உள்ளிட்ட 865 மராட்டிய கிராமங்களை, கர்நாடகாவில் இருந்து பிரித்து யூனியன் பிரதேசமாக ஆக்க வேண்டும் என்கிற அவரது குரலை வரவேற்றிருக்கிறது அவர் சார்ந்த சிவசேனா கட்சி.

எப்படி மேற்கு வங்கத்திலிருந்து டார்ஜிலிங் மற்றும் கேம்ப்லிங் மாவட்டங்கள் தன்னாட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டு, யூனியன் பிரதேசத்திற்கு முன்னோட்டமாக மாற்றப்பட்டதோ, அதுபோல் தமிழர்கள் இன்றளவும் நிறைந்து கிடக்கும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் பீருமேடு மற்றும் உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களையும் யூனியன் பிரதேசத்திற்கு முன்னோட்டமாக,தன்னாட்சி பகுதியாக மாற்ற வேண்டும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மூணாறு நகரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்றிணைந்து தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று நடத்திய ஊர்வலம், இதற்கான முன்னோட்டத்தின் தொடக்கம். சஞ்சய் ராவத் எழுப்பிய யூனியன் பிரதேசம் என்கிற முழக்கம், விரைவில் தேவிகுளம் பீர்மேட்டிலும் ஒலிக்கும். 140 ஆண்டு கால அடிமைத்தனத்திற்கு, தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. கூர்க்காக்கள் டார்ஜிலிங்கில் அதிகாரம் பெற்றது போல, தமிழர்களும் தேவிகுளம் பீருமேட்டில் அதிகாரம் பெறுவார்கள்.

பேரறிஞர் அண்ணா முன்மொழிந்த, தலைவர் கலைஞர் முன்மொழிந்த தேவிகுளம் பீருமேடு விடுதலையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிமொழிந்து, யூனியன் பிரதேச கோரிக்கையை எழுப்ப வேண்டும். இதற்காக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம் இடைவிடாமல் போராட்டம் நடத்தும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!