குமுளியில் பஸ் வசதியில்லாமல் பல மணி நேரம் தவித்த பயணிகள்
குமுளி பஸ்ஸ்டாண்டில், தேனி செல்ல பஸ் இல்லாமல் பல மணி நேரம் பயணிகள் இருளில் காத்திருந்தனர்.
தேனி மாவட்ட எல்லையில், கூடலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியும், கேரளத்தின் இடுக்கி மாவட்டம், குமுளியும் ஒரே ஊராக அமைந்துள்ளன. ஆமாம். குமுளியின் ஒரு பகுதியில் கேரள மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதி கேரளாவுடன் இணைந்துள்ளது. குமுளியில் ரோஜாப்பூகண்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த பகுதி கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியுடன் இணைந்துள்ளது. தேனி மாவட்டமும், இடுக்கி மாவட்டமும் மாநில எல்லைப்படி பிரிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த வாழ்வியல் முறைகள் அத்தனையிலும் இணைந்துள்ளது. தேனி- இடுக்கி மாவட்டங்களிடையே அதிகளவு போக்குவரத்துக்கள் இருக்கும். இதற்கேற்ற எண்ணிக்கையில் பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இந்த வாரம் முழுக்க திருமண சீசன் என்பதால் அத்தனை பஸ்களும் மக்கள் கூட்டத்தில் பொங்கி வழிகின்றன. இதற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் குமுளியில் பயணிகள் சொல்ல முடியாத அளவு துன்பங்களை அனுபவித்தனர். குமுளியில் கேரள பஸ்ஸ்டாண்ட் நல்ல முறையில் இருந்தாலும், தமிழக பகுதியில் பயணிகள் நிற்க இடமும் இல்லை. பஸ்ஸ்டாண்ட் வசதியும் இல்லை. மாநில பிரிவினைக்கு பின்னர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக குமுளியில் தமிழக பகுதியில் பஸ்ஸ்டாண்ட் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்படவில்லை.
பயணிகள் வெயில், மழையில் இயற்கை உபாதையை கூட கழிக்க வழியில்லாமல், தவியாய் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் வந்த அத்தனை பஸ்களும் உடனடியாக பயணிகள் நிரம்பியதால் உடனே கிளம்பி சென்று விட்டன. நேற்று மாலை குமுளி பஸ்ஸ்டாண்ட் வந்த பயணிகள் சுமார் இரண்டு மணி நேரம் தமிழகத்திற்கு செல்ல வழியில்லாமல் இருட்டுக்குள் ரோட்டோரத்தில் காத்துக்கிடந்தனர்.
குழந்தைகளுடன், மழைச்சாரல், குளிர், இருட்டில் அவர்கள் தவித்த தவிப்பினை தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. பல மணி நேரம் கழித்து வந்த தனியார் பஸ் நிரம்பி வழிந்தது. வழக்கமாகவே குமுளி- கூடலுார்- கம்பம்- தேனிக்கு இணைப்பு பஸ்கள் குறைவு தான். இந்நிலையில் சீசன் நேரம் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படாததால் இந்த பிரச்னை ஏற்பட்டு பயணிகள் தவித்ததாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். கலெக்டர் சஜீவனா இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால் நல்லது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu