சின்னமனுார்- கூடலுார் இடையே பைபாஸ் ரோட்டில் பயணிக்க பயணிகள் அச்சம்

சின்னமனுார்- கூடலுார் இடையே பைபாஸ் ரோட்டில் பயணிக்க பயணிகள் அச்சம்

சின்னமனூர் புறவழிச்சாலை (கோப்புப்படம்)

தேனி மாவட்டத்தில் சின்னமனுாரில் இருந்து லோயர்கேம்ப் வரை பைபாஸ் ரோட்டில் இரவில் பயணிக்க பயணிகள் அச்சப்படுகின்றனர்.

திண்டுக்கல்- குமுளி நான்கு வழிச்சாலை பணிகள் கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டி உள்ளன. இந்த பணிகளில் முதல் கட்டமாக இருவழிச்சாலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. பெரியகுளம், தேனியில் மட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மற்ற இடங்களில் பணிகள் முடிந்ததால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து தொடங்கியதும், வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் பயணிக்க பயணிகள் மிகுந்த அச்சப்பட்டனர். காரணம் இந்த பைபாஸ் ரோட்டில் பலமுறை வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. விபத்துக்கள் கூட நடந்துள்ளன. மர்ம நபர்களால் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பின்னர் போலீசார் கடும் ரோந்து பணி மேற்கொண்ட பின்னர், திருட்டு அச்சம் குறைந்துள்ளது. வாகன போக்குவரத்து இரவில் இன்னும் இந்த பகுதியில் சீராக இல்லை.

இந்நிலையில், வத்தலக்குண்டை கடந்து விட்டால் தேனி, வீரபாண்டி, சின்னமனுார் வரை இடைவிடாமல் ரோட்டோரங்களில் கடைகள் உள்ளன. இந்த கடைகள் இரவு நேரங்களிலும் இயங்குகின்றன. ஆனால் சின்னமனுார் பைபாஸ், உத்தமபாளையம் பைபாஸ், கம்பம் பைபாஸ், கூடலுார் பைபாஸ் என எங்குமே ரோட்டோர கடைகள் இல்லை.

பகலிலும் கடைகள் இல்லை. இரவிலும் கடைகள் இல்லை. இருப்பினும் பகலில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளதால், திருட்டு அச்சம் குறைவு. பகலில் இந்த ரோட்டில் பயணிப்பது மிகவும் அழகிய அனுபவம். வயல்வெளிகள், தோட்டங்கள், ஆறுகளை கடந்து இந்த ரோடு செல்கிறது. இதனால் பயணிகள் இந்த ரோட்டில் பகல் நேரங்களில் வாகனங்களில் விரும்பி பயணிக்கின்றனர்.

ஆனால் இரவு ஆறு மணிக்கு மேல் பைபாஸ் ரோட்டை டூ வீலர், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வணிக பயன்பாட்டு வாகனங்கள், சொந்த பயன்பாட்டு வாகனங்கள் என யாருமே பயன்படுத்துவதில்லை. காரணம் இந்த ரோடுகளில் இரவில் வழிப்பறி வாய்ப்புகள் அதிகம். (இதுவரை நடந்ததாக வழக்கு ஏதும் பதிவாகவில்லை. இங்குள்ள கிராம மக்கள் வழிப்பறிகளில் ஈடுபட வாய்ப்பு இல்லை. ஆனால் வடமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட வாய்ப்புகள் அதிகம்.)

தவிர விபத்து நடந்தால் முதல் உதவியும் கிடைக்காது. எனவே மீட்பு பணிகளும் தாமதமாக நடக்கும். விபத்தில் சிக்கியவர்கள் தகுந்த நேரத்தில் உதவி கிடைக்காமல் உயிரிழக்கும் வாய்ப்புகளும் அதிகம். இது போன்ற காரணங்களால் இந்த பைபாஸ் ரோடுகளை பயன்படுத்துவதை மக்கள் குறைத்துக் கொள்கின்றனர். சிலர் தவிர்த்து விடுகின்றனர்.

வாகனங்கள் அனைத்தும் ஊருக்குள் செல்லும் ரோட்டையே பயன்படுத்துகின்றன. இதனால் இரவு நேரங்களில் சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம், கூடலுாருக்குள் வாகன போக்குவரத்து காரணமாக நெரிசல் நிலவுகிறது. பைபாஸ் அமைத்தும் பயனில்லையே. இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி என போலீஸ் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. பைபாஸ் ரோட்டினை இரவில் வாகனங்கள் பயன்படுத்தினால் மட்டுமே பைபாஸ் அமைத்ததற்கான பலன் இந்த பகுதிகளுக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் நகருக்குள் நெரிசல் நிலவுவதை தவிர்க்க இயலாது.

Tags

Next Story