ஈரோடு தேர்தலை வைத்து ஈபிஎஸ் -ஐ மிரட்டும் கட்சிகள்!
பைல் படம்
ஈரோடு இடைத்தேர்தலை வைத்து இதுதான் சமயம் என்று ஈபிஎஸ்ஸை மிரட்டிப் பார்க்கிறார்களோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இருக்கின்றன தினமும் நடக்கும் நிகழ்வுகள்.
தேர்தல் தேதி அறிவித்தால் முதலில் வேட்பாளரை அறிவிப்பது ஜெயலலிதாவாகத்தான் இருக்கும். ஆனால், ஈரோடு கிழக்கில் அப்படி அறிவிக்க முடியாமல் மூச்சுத் திணறிப் போனார் ஈபிஎஸ். அதுமட்டுமல்ல... சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெறமுடியாதது, பாஜகவிடமிருந்து உடனடியாக சாதகமான பதிலைப்பெற முடியாதது, கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியாமல் போனது என ரொம்பவே நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார் ஈபிஎஸ்.
ஒரு பக்கம் பாஜக, இன்னொரு பக்கம் தனி அணிகளாகச் செயல்படும் ஓபிஎஸ், தினகரன். மற்றொரு பக்கம் சிறிய கட்சிகள், இத்தனையும் போதாதென்று உட்கட்சி குடைச்சல்கள் என நாலாபக்கமிருந்தும் ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கடிகள். இத்தனை நெருக்கடிகள் இருப்பதால் தான் இரண்டு முறை கூட்டம் போட்டுப் பேசியும் ஈபிஎஸ்ஸால் வேட்பாளரை இறுதிசெய்ய முடியவில்லை.
2021-ல் ஈரோடு மேற்கில் அமைச்சர் முத்துசாமியிடம் தோற்ற கே.வி.ராமலிங்கத்தை இப்போது கிழக்கில் நிறுத்த நினைத்தார் ஈபிஎஸ். ஆனால், சூழலைப் புரிந்துகொண்ட ராமலிங்கம், நாசூக்காக ஒதுங்கி விட்டார். பரிசீலனையில் வைத்திருந்த இன்னும் சிலரும் ஆழமாக யோசிக்கவே தான், அடுத்த கட்டம் குறித்து விவாதிக்க ஈரோட்டில் கடந்த 26-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் ஈபிஎஸ். ஆனால், ஏழு மணி நேரம் நடந்த கூட்டத்துக்குப் பிறகும் அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. மறு நாளும் ஆலோசனைக் கூட்டம் போட்டுப் பேசி பலரையும் சமாதானப்படுத்தி, பலருக்கும் விளக்கம் சொல்லித்தான் வேட்பாளரை இறுதி செய்ததாகச் சொல்கிறார்கள்.
அதிமுக அணிகளின் பிக் பாஸான பாஜகவோ, இரட்டைஇலை சின்னத்தை மையமாக வைத்து ஈபிஎஸ்ஸை முடிந்தவரை மிரட்டுகிறது. அதிமுக இரண்டு அணிகளாக போட்டியிட்டால் சின்னம் கிடைக்காது. எனவே, தொகுதியை எங்களிடம் விட்டுவிட்டு ஆதரவு மட்டும் கொடுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என தொடக்கம் முதலே பாஜக தரப்பிலிருந்து பேசியதாகச் சொல்கிறார்கள். அந்த எண்ணம் இருப்பதால் தான், ஆதரவு கேட்டு கமலாலயம் வந்த அதிமுக தலைவர்களை மணிக் கணக்கில் காக்க வைத்திருக்கிறார்கள். அப்படியும் தெளிவான எந்த பதிலும் கொடுக்காமல், வந்தவர்களை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.
சிறிய கட்சிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்திருக்கும் பாஜக, "எங்களது ஆதரவு பாஜகவுக்குத்தான்" என்று அவர்களைப் பேசவைத்திருக்கிறது. அப்படித்தான், ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்டோர் பாஜகவுக்கு ஆதரவாக முழங்கினார்கள். கொங்கு இளைஞர் பேரவை தனியரசு மட்டும் தனி ரூட் எடுத்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவுக்கு தெரிவித்து ஈபிஎஸ்ஸை சாடினார். வாசன் கட்சி ஈபிஎஸ்ஸை ஆதரிக்கிறது.
இதையெல்லாம் பார்த்துவிட்டு, 'சிறிய கட்சிகள் எல்லாம் அதிமுகவிடம் ஆதரவு கேட்டு போயஸ் கார்டன் வாசலில் நின்ற காலம் போய் இப்போது சிறிய கட்சிகளை, அதன் தலைவர்களை தேடி அதிமுகவினர் ஓடுகிறார்கள்' என்று வேதனையை வெளிப்படுத்தினார் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன். அந்தளவுக்கு, சிறு கட்சிகளையும் அதிமுக தலைவர்கள் தேடிச்சென்று சந்தித்தது அந்தக் கட்சியின் தற்போதைய பரிதாப நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அதிமுகவின் இன்னொரு அணியாக செயல்படும் ஓபிஎஸ் தானும் போட்டி என அறிவித்தது ஈபிஎஸ்ஸை மிரட்டவே. தானும் போட்டி என்று களமிறக்கினால் ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைப்பதில் சிக்கல் வரும் என்பதாலேயே இந்த சாணக்கியத் தனத்தைக் கையாண்டிருக்கிறார் ஓபிஎஸ். அதேசமயம், "பாஜக போட்டி என்றால் அவர்களை ஆதரிப்போம்" என்றும் தந்திரமாக விளையாடி இருக்கிறார் ஓபிஎஸ். அவர் இப்படிச் சொன்னதன் பின்னணியிலும் பாஜக மூளை இருக்கிறது.
கட்சியிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் இரட்டை இலையும் கிடைக்காது; கட்சியும் காணாமல் போய்விடும் என்றதொரு நெருக்கடியை ஓபிஎஸ் மூலமாக பாஜக உருவாக்குகிறது. அமமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ் என மூன்று தரப்பும் வேட்பாளர்களை நிறுத்தினால் அதிமுகவின் நிலை படுமோசமாகி விடும். அதிலும் ஈபிஎஸ் நிலை அந்தோ பரிதாபமாகி விடும். இதை ஈபிஎஸ்ஸுக்கு உணர்த்தவே அவருக்கு பலவிதத்திலும் செக் வைக்கிறது பாஜக.
ஆகமொத்தத்தில், இடைத் தேர்தலில் தாங்கள் போட்டியிட வேண்டும் அல்லது அதிமுகவை ஒருங்கிணைத்துவிட வேண்டும் என்ற இரண்டு விதமான செயல்திட்டங்களுடன் காரியமாற்றுகிறது கமலாலயக் கட்சி. அதற்காக ஓபிஎஸ்ஸை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறார்கள். இதை உணர்ந்து தான், தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை ஆளுக்கு முன்னதாக அணுகி இருக்கிறார் ஈபிஎஸ். இதற்குப் போட்டியாக ஓபிஎஸ்ஸும் 30-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தயாராகி வருவதாக செய்திகள் வருகின்றன.
ஈபிஎஸ்ஸுக்கு தரப்படும் நெருக்கடிகள் குறித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பணிக்குழுவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் பேசினோம். இவ்வளவு நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது என்றால் எடப்பாடியாரைப் பார்த்து அந்த அளவுக்கு பயப்படுகிறார்கள் என்றுதானே அர்த்தம். என்னதான் பல தரப்பிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப் பட்டாலும் தேர்தல் நெருங்குகிறபோது அவையெல்லாம் சரியாகிவிடும்; அல்லது சரிசெய்யப்பட்டுவிடும். இதுபோல இன்னும் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதையெல்லாம் திறம்பட சமாளிப்பார் எடப்பாடியார்.
ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெறப் போவது 100 சதவீதம் உறுதி. ஓட்டுப்போடவேண்டிய மக்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கிறார்கள். யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். வெளியில் நின்று பேசுபவர்களுக்கெல்லாம் அங்கு ஓட்டு இல்லை. இந்த இரண்டாண்டு காலத்தில் தாங்கள் பட்டுவரும் கஷ்டத்தை உணர்ந்தும், கடந்த அதிமுக ஆட்சிக்காட்சியில் தாங்கள் எப்படி இருந்தோம் என்பதை நினைத்துப் பார்த்தும் மக்கள் ஓட்டுப் போடுவார்கள். ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றிக் கனியை எட்டிப்பறிக்கும்" என்று அழுத்தமாகச் சொன்னார் மணியன்.
இவர் இப்படிச் சொல்லி இருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கில் அதிமுக தனித்தே களமிறங்குகிறது என்ற கருத்தை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார் தேர்தல் பணிக் குழுவில் இருக்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன்.
இரட்டை இலை சின்னம் தங்களுக்குக் கிடைத்து விட்டால் தாங்கள் தான் உண்மையான அதிமுக என கொடிநாட்டிவிடலாம் என கணக்குப் போடுகிறார் ஈபிஎஸ். அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்து, கட்சிக்குள் அவர் தனது இருப்பை நிறுத்தி விடக்கூடாது என ஓபிஎஸ்ஸும் தினகரனும் நினைக்கிறார்கள். இடைத் தேர்தலை முன்வைத்து அதிமுக அணிகளை இணைத்து அதன் மூலம் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்த மெனக்கிடுகிறது பாஜக.யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்கலாம்!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu