இரண்டு ஆண்டுகளாக நிரம்பி வழியும் வைகை அணை..! வற்றாத முல்லையாறு..!
நீர் நிரம்பிக்காணப்படும் வைகை அணை.
தேனி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மழைப்பொழிவு மிகவும் நல்ல முறையில் இருந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள அத்தனை அணைகளும், ஆறுகளும், ஏரிகளும், கண்மாய்களும், குளங்களும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சுருளிஅருவி, கும்பக்கரை அருவி, சின்னசுருளி அருவி, அணைக்கரைப்பட்டி அருவிகளில் தொடர்ச்சியாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த அளவு தொடர்ச்சியாக நீர் வரத்து இருந்து வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நெல் விளையும் வயல்களில் இருபோக சாகுபடி நடக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் வைகை அணை இரண்டு ஆண்டுகளாக முழு அளவில் நிரம்பி உள்ளது. அணையின் நீர் மட்ட உயரம் 71 அடியாக இருந்தாலும், 70 அடி வரை மட்டுமே நீர் நிரம்பி இருக்கும்.
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் வைகை அணை ஏறத்தாழ 67 அடி முதல் 70 அடி வரை இருந்து வருகிறது. இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் 65 அடி வரை நீர் மட்டம் குறைந்தது. அடுத்த சில நாட்களில் மீண்டும் 70 அடியை எட்டி உள்ளது. இன்று காலை நிலவரப்படி வைகை அணைக்கு 1217 அடி நீர் வரத்து உள்ளது. இந்த நீர் வரத்து இன்னும் ஓரிரு மணி நேரங்களில் 4 ஆயிரம் கனஅடி வரை எட்ட வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மட்டம் 66.54 அடியாக உள்ளது. இந்த நீர் மட்ட உயரம் கிடுகிடுவென அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
வைகை அணை நீர் மட்டம் 70 அடியாக இருக்கும் போது, 18 மைல் சுற்றளவுக்கு நீர் தேங்கி நிற்கும். குறிப்பாக குன்னுார், அரைப்படித்தேவன்பட்டி கிராமங்கள் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. மதுரை சாலையில் பயணிக்கும் பயணிகள் அத்தனை பேரும் தங்கள் பயணத்தின் போது இந்த தண்ணீர் தேங்கி நிற்கும் அற்புதமான காட்சியை காணலாம்.
இந்த நிலை இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியம். அதுவும் கடந்த 4 ஆண்டுகளாக வைகை ஆற்றில் ஆண்டுக்கு 9 மாதத்திற்கும் மேல் நீர் வரத்து உள்ளது. 50 ஆண்டுகால வைகை ஆற்றின் வரலாற்றில் மதுரை வைகை ஆற்றில் தொடர்ச்சியாக 4 மாதங்களை கடந்து நீர் சென்று கொண்டுள்ளது என வைகை அணை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடுக்கடுக்கான புள்ளி விவரங்களை கூறுகின்றனர்.
அதேபோல் முல்லைப்பெரியாற்றிலும் நீர் மட்டம் 130 அடிக்கும், 140 அடிக்கும் இடையே ஏற்ற இறக்கத்துடன் நீடித்து வருகிறது. இன்று முல்லைப்பெரியாற்றின் நீர் மட்டம் 138.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு வற்றாத ஜீவநதியாக உருவாகி விட்டதோ என எண்ணும் அளவுக்கு ஆற்றில் ஆண்டு தோறும் நீர் வரத்து இருந்து வருகிறது. நீர் வரும் அளவு மட்டுமே மாறுபடுகிறது. அந்த அளவு இயற்கை ஒட்டுமொத்த தேனி மாவட்டத்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக குளிர்வித்து வருகிறது என்பதே நிதர்சனம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu