ஓபிஎஸ் எடுக்கும் இறுதி முடிவு..! எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..!

ஓபிஎஸ் எடுக்கும் இறுதி முடிவு..!  எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..!
X

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா 

பொதுக்குழு கூடி தன்னை கட்சியிலிருந்து நீக்கிய போதுகூட இவ்வளவு அப்செட் ஆகவில்லையாம் ஓபிஎஸ்.

அதிமுக உட்கட்சி மோதலில் ஒருவழியாக இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு பெற்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவை முன்னிறுத்தி ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில் ஒரு கட்டத்தில் பாஜகவே எடப்பாடியின் கையைப் பிடித்து ஆதரவு தெரிவிக்க வேண்டிய சூழல் உருவாகியது.

அதிமுகவில் இரட்டை தலைமை செயல்பட்டு வந்த சமயத்திலும் அவ்வப்போது உள்ளுக்குள் எழுந்த கலகங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே முடிவுகள் அமைந்தன. முதல்வர் வேட்பாளர் விவகாரம், எதிர்கட்சித் தலைவர் விவகாரம் ஆகியவற்றை உதாரணமாக சொல்லலாம். இறுதியாக ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்த போது ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்தே நீக்கும் முடிவு வரை சென்றது.

இணைந்து செயல்பட்ட போதே இதுதான் நிலைமை என்றபோது ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து நின்று வெளிப்படையாக ஒருவருக்கு எதிராக மற்றவர் வார்த்தைகளை அள்ளி வீசிவரும் நிலையில் இப்போதும் எடப்பாடியின் கையே ஓங்கியுள்ளது. இடைத்தேர்தலில் இரட்டை இலைக்காக தன்னிடம் இறங்கிவருவார்கள் என்று ஓபிஎஸ் எதிர்பார்த்தார். ஆனால் விடாப்பிடியாக நின்று பாஜகவையும் தங்கள் பக்கம் இழுத்தார், எடப்பாடி பழனிசாமி.

தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி என்று கூட்டணிக்கு புதிய பெயர்கள் வைத்து பாஜகவுக்கு தனது எதிர்ப்பை காட்டினார், எடப்பாடி பழனிசாமி. இதன் பின்னர் தான் டெல்லி அவசர அவசரமாக எடப்பாடி பக்கம் வந்தது. பாஜக தனக்கு ஆதரவளித்ததால் மக்களவைத் தேர்தலில் அவர்களுடன் தான் கூட்டணி என்ற அறிவிப்பையும் நேற்று நெல்லையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஆதரவை பெருமளவில் இழந்த ஓபிஎஸ் பாஜகவை வைத்தே தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வந்தார். மக்களவையில் பாஜகவுடன் கூட்டணி என்று நேற்று எடப்பாடி அறிவித்ததால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. பாஜகவும் தன்னை கைவிட்டால் என்ன செய்வது என யோசிக்கத் தொடங்கிய ஓபிஎஸ் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனை செய்து வருகிறாராம்.

முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அண்மையில் ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசியுள்ளதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில். அதன்படி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு இணைந்து செயல்படுங்கள். அப்போது தான் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடையும் வகையில் தாக்கத்தை கொடுக்க முடியும். இனியும் தனித்தனியாக நின்றால் வெற்றி எடப்பாடிக்கு தான் என்று கூறியுள்ளனர்.

ஆரம்பத்திலேயே இருவரையும் சந்திப்பேன் என்று ஓபிஎஸ் சொல்லியிருந்தாலும் தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தார். தற்போது பாஜக வரை இபிஎஸ் பக்கம் சென்றுவிட்டதால் இனி காத்திருந்து பிரயோசனமில்லை என்று யோசிக்கத் தொடங்கியுள்ளாராம். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிந்த பின்னர் சசிகலாவையும் அவரைத் தொடர்ந்து தினகரனையும் ஓபிஎஸ் தேடிச் சென்று சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

Tags

Next Story
முளைகட்டிய பச்சைப்பயறு  ஆபத்தானதா..? உண்மை என்ன...?