ஓபிஎஸ் - இபிஎஸ் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல - ஸ்டாலின்

ஓபிஎஸ் - இபிஎஸ் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல -  ஸ்டாலின்
X

எடப்பாடிபழனிச்சாமியும்,ஓ.பன்னீர்செல்வமும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என தேனியில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். போடிநாயக்கனூர் தேவர் சிலை அருகே நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், போடிநாயக்கனூர் தொகுதி வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சரவணக்குமார், ஆண்டிபட்டி மகாராஜன் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர்களை அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது தங்கதமிழ்செல்வன் குறித்து பேசிய ஸ்டாலின், எதையும் வெளிப்படையாக பேசக் கூடிய வெள்ளை மனம் படைத்தவர். ஆனால் எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளர் (ஓபிஎஸ்) அவ்வாறு கிடையாது . இதே போடியில் பரப்புரை செய்த முதல்வர் பழனிசாமி தோல்வி பயத்தில் ஏதேதோ பேசி வருகிறார். பதவிக்காக ஊர்ந்து சென்றார் என சமூக வலைதளங்களில் வந்த கருத்துக்களைத் தான் நாம் கூறினோம். ஆனால் அதை ஏற்காமல் நான் உழைத்து படிப்படியாக வளர்ந்தவன் எனக் கூறுகிறார். இபிஎஸ்,ஓபிஎஸ் ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ், அதற்கான விசாரணை கமிஷனில் தற்போது வரை ஆஜராகவில்லை. ஆனால் பக்கம் பக்கமாக நாளிதழ்களில் விளம்பரம் தருகிறார். மேலும் டிவிக்களிலும் நடித்து வருகின்றார். ஓபிஎஸ் கூறுகிறார், நிஜ ஜல்லிக்கட்டு நாயகன் மோடி என்று. ஆனால் ஜல்லிக்கட்டின் நிஜ நாயகர்கள் இளைஞர்கள் தான் ‌. இதில் எந்த அரசியல் தலைவர்களுக்கும் பங்கு இல்லை. எனவே தயவு செய்து ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸ் , மோடி என்று கூறி கொச்சைப் படுத்தாதீர்கள்.

போடியில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி கண்ணகி கோட்டம் சீரமைக்கப்படும். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதய தமனி அறுவைச் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும். தேனியில் திராட்சை கிட்டங்கி, முருங்கைக்காய் கிட்டங்கி உள்ளிட்ட தேனி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றார்.

Tags

Next Story
highest paying ai jobs