ஓ.பி.எஸ்.ஐ., தேனியும் கை விட்டது ஏன்? என்பது பற்றி அ.தி.மு.க. தொண்டர்கள்
தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்., அறிமுகம் ஆகும் போது தேனி மாவட்டம் அ.தி.மு.க.,வின் இரும்புக்கோட்டை என்ற நிலையில் இருந்தது. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது, எதிர்க்கட்சிகள் அவர் உயிரிழந்து விட்டார் என்று பொய் பிரச்சாரம் செய்த போது கூட, எம்.ஜி.ஆரை வெற்றி பெற வைத்த தொகுதி ஆண்டிப்பட்டி. அதேபோல் ஜெ., வெற்றி பெற்ற போடி, ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் அவரை தலைவராக பார்க்கவில்லை, தெய்வமாகவே வணங்கினர். அந்த அளவு வலிமை வாய்ந்த நிலையில் அ.தி.மு.க., தேனி மாவட்டத்தில் இருந்தது.
ஓ.பி.எஸ்., அரசியலில் உயர் பதவிக்கு வந்து அமைச்சராகவும், மூன்று முறை முதல்வராகவும், நான்கு ஆண்டுகள் துணை முதல்வராகவும் பதவி வகித்தும், இன்னும் அவர் பிறந்த ஊரான பெரியகுளத்தில் உலர் கழிப்பிடங்களை கூட ஒழிக்கவில்லை. ஆமாம் பெரியகுளம் மக்கள் இன்னும் இயற்கை உபாதைகளை கழிக்க வெளியிடங்களையே தேடும் நிலை தான் உள்ளது. பெரியகுளம் தொகுதியில் வளர்ச்சி என்றால் என்ன என்ற நிலையே உள்ளது. ஒட்டுமொத்த தமிழகமே முன்னேறி வரும் நிலையில், பெரியகுளத்தில் எல்லா தொழில்களும், வியாபாரங்களும் மூடுவிழா கண்டு வருகிறது. வளர்ச்சியா? அப்படீனா? என்ன என்று மக்கள் கேட்கும் அளவுக்கு ஒரு மலைக்கிராமமாக பெரியகுளம் நகராட்சி பின்னோக்கி நகர்ந்து வருகிறது.
பொதுவாக அரசியலில் இருப்பவர்கள் தனக்கென ஒரு ஆதரவாளர்கள் கூட்டத்தை வைத்திருப்பார்கள். ஆனால் ஓ.பி.எஸ்.சால் (முந்தைய செய்தியில் குறிப்பிட்டுள்ளோம்) அவரது குடும்பத்தை தவிர வேறு யாரும், எந்த நிர்வாகியும் பயன் பெற்றதாக தேனி மாவட்டத்தில் யாரும் கூறவில்லை. அதேபோல் ஓ.பி.எஸ்.,ஐ. நம்பி வந்தேன்... இன்று நான் நன்றாக இருக்கிறேன்.... கட்சியில் மரியாதையான பதவியில் இருக்கிறேன் எனக்கூறும் அளவுக்கு தேனி மாவட்டத்தி்ல் யாரும் இல்லை. நிர்வாகிகள் யாரையும் அவர் வளர்த்த விடவும் இல்லை கவனிக்கவும் வளர விடவும் இல்லை.
தன் மகனை தேனி தொகுதியில் வெற்றி பெற வைக்க மதிப்பிட முடியாத தொலைவிற்கு சென்று வந்து பணிபுரிந்த ஓ.பி.எஸ்., கடந்த சட்டசபை இடைத்தேர்தல்களிலும், சட்டசபை பொதுத்தேர்தல்களிலும் தேனி மாவட்டத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் அத்தனை பேரையும் இழந்தார். யாரையும் வெற்றி பெற வைக்கவில்லை. அது தான் அப்படி என்றால் அடுத்து வந்த உள்ளாட்சிகள் அத்தனையையும் இழந்து ஒட்டுமொத்த தேனி மாவட்டத்தையும் தூக்கி தி.மு.க.,விடம் லட்டு மாதிரி கொடுத்து விட்டார்.
எம்.ஜி.ஆர்., ஜெ., உலா வந்த தொகுதியில் இன்று தி.மு.க., எம்.எல்.ஏ., சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறார். ஜெ., முகத்திற்காக ஓட்டுப்போட்ட போடியில் ஓ.பி.எஸ்., வெற்றி பெற பட்டபாடு அத்தனை பேருக்கும் தெரியும். தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க., உள்ளதா என்கிற அளவுக்கு இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. கட்சி நிர்வாகத்தில் மிகப்பெரிய பாரபட்சம் காட்டி வீரமும், விவேகமும் மிகுந்த தலைவர்கள் அத்தனை பேரையும் இழந்து விட்டார். இப்போது அவருடன் இருப்பவர்கள், வெகு சிலர் மட்டுமே. குடும்ப அரசியல், குடும்பத்தினரின் செயல்பாடுகள் என தேனி மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு தான் ஓ.பி.எஸ்.,க்கு எவ்வளவு கெட்ட பெயர் உள்ளது என்பது தெரியும் என அ.தி.மு.க.,வினரே கூறுகின்றனர்.
இப்போதும் கூட இவர்கள் இரட்டை இலையையும், எம்.ஜி.ஆர்., உருவாக்கி, ஜெ., வளர்த்த கட்சியை காப்பாற்றவுமே இ.பி.எஸ்., அணிக்கு சென்றுள்ளதாக பகிரங்கமாக பிரச்சாரமே செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu