முல்லைப்பெரியாறு நீர் தேங்கும் இடத்தில் கார் பார்க்கிங் அமைத்தற்கு கடும் எதிர்ப்பு..!
இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி நுழைவு வாயிலில் உள்ள ஆனவச்சலில் சுற்றுலா வாகனங்களுக்கான புதிய வாகன நிறுத்துமிடம்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணை சார்ந்த விடயங்களில் கேரள மாநில அரசுக்கு,அது எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஒரு அதீத ஆர்வம் உண்டு. அதில் ஏதாவது பின்னடைவை தமிழ்நாட்டின் பக்கம் தள்ளி விட்டால், அந்த ஆண்டுக்கான கேரள மாநில அரசியலை அவர்கள் வசம் வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு தானாகவே வரும்.
அந்த அடிப்படையில் தான் 1982 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெரியார் புலிகள் காப்பகத்தை மையமாக வைத்து பல சித்து விளையாட்டுகளை கேரள மாநில அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய அளவிலான சுற்றுலா வருவாயை ஈட்ட வேண்டும் என்பதை தவிர கேரள மாநில அரசுக்கு இன்னொரு உள்நோக்கமும் இருக்கிறது. அது இடுக்கி அணைக்கு தண்ணீரை கொண்டு சேர்ப்பது.
இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான் முல்லைப் பெரியாறு அரசியலை 1979 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் தோழர் அச்சுத மேனன் தொடங்கி வைத்தார். இன்று தொட்டால் பற்றி எரியும் அளவிற்கு இரண்டு மாநிலங்களுக்கிடையேயும் தீவிரமமெடுத்திருக்கிறது முல்லை பெரியாறு பிரச்சனை.
நேற்று முளைத்த பெரியார் புலிகள் காப்பகம் கிட்டத்தட்ட அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1886 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி, சென்னை ராஜதானிக்கும், திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு இடையே போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை கேள்வி கேட்பதுதான் வேதனையாக இருக்கிறது.
எல்லையை வரையறை செய்யாமலா ஒரு பெரிய ஒப்பந்தத்தை 999 ஆண்டுகளுக்கு இரண்டு பெரிய ராஜ்யங்கள் போட்டுக் கொண்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சொன்ன ஒரு வார்த்தையை இந்த இடத்தில் பதிவிட விரும்புகிறேன்.
ஆனவச்சால் பகுதியில் கேரள அரசின் மெகா கார் பார்க்கிங் திட்டம் என்பது சட்டவிரோதமே. சொல்வது நானல்ல, மத்திய அமைச்சகம். கடந்த 2014 ஆம் ஆண்டு o s no-4 ல் தொடங்கிய பிரச்சனை, தேசிய பசுமை தீர்ப்பாயம், தென்னக பசுமை தீர்ப்பாயம், தேசியப் புலிகள் ஆணையம் என்று பல அமைப்புகளை கடந்து இன்று அளவீடு என்கிற நிலையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வந்து நிற்கிறது. எனக்கு நினைவு தெரிந்து குமுளியிலிருந்து வண்டிப்பெரியாறு செல்லும் வழியில் உள்ள மாதா சொரூபம் வரை ஒரு காலத்தில் பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதியாக இருந்தது.
அதுதான் நம்முடைய எல்லையாகவும் காலங்காலமாக இருந்து வந்தது.முன்னொரு காலத்தில் அது தமிழக-கேரள எல்லையும் கூட ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக முண்டக்காயம், பீர்மேடு வழியாக குமுளியை நோக்கி வந்த மலையாள சகோதரர்கள், இன்றைக்கு குமுளியை ஒரு சர்வதேச சுற்றுலா நகரமாக மாற்றி விட்டார்கள். கடந்த 20 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்ற குமுளி, மெல்ல மெல்ல குடியேற்ற வாசிகளை அங்கீகரிக்க ஆரம்பித்தது. குமுளியில் இருக்கும் ஒரே தமிழ் பள்ளியை கூட நடத்த விடாமல் செய்யும் அளவிற்கு ஆக்கிரமிப்பு நிலங்களை அதிகப்படுத்தி வருகிறது பெரியார் புலிகள் காப்பகம்.
2014 ஆம் ஆண்டு பெரியார் புலிகள் காப்பகத்திற்குள் ட்ரெக்கிங் அழைத்துச்செல்லப்படும் வண்டிகளை நிறுத்துவதற்காக, பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதியாக அறியப்பட்ட, சட்டப்படி நமக்கு பாத்தியப்பட்ட ஆனவச்சாலை தேர்ந்தெடுத்து, இங்கு தற்காலிக கார் பார்க்கிங் அமைக்கும் போதே தமிழக அரசு அதை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்
ஆனால் அதற்கு நாம் தயாராக இல்லாததால், கொஞ்சம் கொஞ்சமாக ஆனவச்சால் நீர் தேங்கும் பகுதியை பேட்டரி வாகனங்களை நிறுத்துவதற்காக ஒருமுகப்படுத்த ஆரம்பித்தது பெரியார் புலிகள் காப்பகம். கேரள மாநில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த திட்டத்திற்கு கடுமையான ஆட்சேபங்களை தெரிவித்ததோடு இதை செயல்படுத்த விடக்கூடாது என்று போராட்டத்திலும் இறங்கினார்கள். குமுளியில் உள்ள மலையாள வர்த்தகர்கள் களத்திற்கு வந்து ஆனவச்சாலை கார் பார்க்கிங்காக மாற்றக்கூடாது என்று தொடர்ந்து போராடினார்கள்.
ஆனாலும் கூட கேரள மாநில அரசும் வனத்துறையும் ஆனவச்சாலை விடுவதாக இல்லை. தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும்,உச்ச நீதிமன்றத்திலும் தன் தரப்பு நியாயங்களை தொடர்ந்து எடுத்து வைத்து வந்த கேரளா, ஒரு கட்டத்தில் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கதவைத் தட்டியது.
National Tiger Conservation Authority கொடுத்த சில சாதகமான நிபந்தனைகளை கையில் எடுத்துக் கொண்ட கேரளா, கவனமாக FC வட்டத்தின் எந்த விதிகளையும் மீறக்கூடாது என்கிற நிபந்தனையை மட்டும் காற்றில் பறக்க விட்டு விட்டு தன்முனைப்பு காட்டி,கார் பார்க்கிங்கை நிறுவுவதில் தீவிர ஆர்வம் காட்டியது.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி நானும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட செயலாளராக தற்போது இருக்கும் தம்பி எஸ்.ஆர். சக்கரவர்த்தியும், குமுளி ஆனவச்சால் பகுதிக்கு சென்று பார்வையிட்டு படம் எடுத்து வந்து அன்றைய தேனி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தோம். ஆனால் கலெக்டர் எங்களை நீதிமன்றம் செல்ல சொல்லி தன் கடமையை தவற விட்டார்.
இந்த நிலையில் அக்டோபர் 18 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள், ஆனவச்சால் கார் பார்க்கிங் தொடர்பான உரிய பிரமாண பத்திரங்களை சமர்ப்பிக்கவும், தேசிய சர்வே ஆணையம் நடத்தும் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் நவம்பர் 24 ஆம் தேதி 2023 அன்று, பிரமாண பத்திரம் தொடர்பாக ஆஜரான தமிழக தலைமை வழக்கறிஞர், கேரளாவின் பிரமாண பத்திரத்தை படித்துப்பார்த்தாரா இல்லையா என்று தெரியாத நிலையில், எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்து கேரளாவிற்கு பச்சைக்கொடி காட்டி விலகிக் கொண்டார்.
கேரளாவில் பிரமாண பத்திரத்தை தயாரித்த நீரியல் வல்லுநர்கள், அதன் பனிரெண்டாவது பத்தியில் ஒட்டுமொத்தமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததை, கையில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், அதற்கு தமிழக வழக்கறிஞரின் ஆட்சேபம் இல்லாததால், 3 மாத கால அவகாசம் கொடுத்து சர்வே ஆஃப் இந்தியா விரிவான அறிக்கையை நேரடியாக தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று முடித்து வைத்திருக்கிறது.
அந்த அடிப்படையில் இன்றைக்கு சர்வே ஆஃப் இந்தியா அதிகாரிகள் ராஜசேகரன் தலைமையில் ஆனவச்சால் மெகா கார் பார்க்கிங் பகுதியை அளந்து கொண்டிருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டு நீதியரசர் அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான பெஞ்ச், ஆனவச்சால் கார் பார்க்கிங் தொடர்பான இந்த வழக்கை எடுத்த போதே, சரியான ஆதாரங்களுடன் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தால் இன்று இந்த சிக்கலே வந்திருக்காது.
ஆனால் இன்று நிலைமை கைமீறி இருக்கிறது. தற்போது களத்தில் இறங்கிய கேரள மாநில அரசு நீரியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற அனில்குமார், சம்ரவட்டம் நீர் திட்டத்தில் பாண்டித்யம் பெற்ற ராஜி தம்பான், ஸ்னிசா மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை ஊழியர்களை களத்தில் இறக்கி ஆனவச்சால் கார் பார்க்கிங்கை தன் வசப்படுத்த தீவிரமாகி விட்டது. நேரடியாக தமிழக அரசு இந்த அளவீட்டிற்கு எதிராக தன் கருத்தை பதிவிட வேண்டும்.
கடந்த 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இதே உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில், பேபி அணையை பலப்படுத்திவிட்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு உரிய முறையீடு செய்து, வழிகாட்டுதல்களை பெற்று தீர்ப்பை அமல்படுத்துவதற்கு முன் வர வேண்டும். இல்லையேல் சர்வே ஆப் இந்தியா ஆனவச்சால் மெகா கார் பார்க்கிங் பகுதியில் செய்துவரும் அளவீட்டை பார்ப்பதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும். மீறினால் வரும் 22 ம் தேதி ஆனவச்சாலுக்கு சென்று எங்கள் தரப்பு நியாயங்களை சர்வே ஆஃப் இந்தியா அதிகாரிகளிடம் முன்வைப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu