பைபாஸ் ரோடு திறப்பு: தேனிக்கு விடிவு பிறந்தது

பைபாஸ் ரோடு திறக்கப்பட்டதால், கடும் நெரிசலுடன் காணப்படும் தேனி நேரு சிலை சந்திப்பு நெரிசலின்றி காணப்பட்டது. நேற்று இரவு ஏழு மணிக்கு எடுக்கப்பட்ட படம்
திண்டுக்கல்- குமுளி நான்கு வழிச்சாலை தேனியில் அன்னஞ்சிக்கு சற்று முன்பே, மாவட்ட கோர்ட்டிற்கு அருகில் இருந்து பைபாஸ் ரோடாக பிரிந்து செல்கிறது. இந்த ரோடு அன்னஞ்சி விலக்கு, அல்லிநகரம், தேனி, பூதிப்புரம், பழனிசெட்டிபட்டியை ஒட்டிய மேற்கு பகுதியில் போடி ரோட்டில் இணைகிறது. அங்கிருந்து முத்துதேவன்பட்டியை கடந்து வீரபாண்டியில் நான்கு வழிச்சாலையுடன் இணைகிறது.
குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கும், திண்டுக்கல்லில் இருந்து கம்பம், குமுளிக்கும் இந்த ரோட்டின் வழியாக தினமும் பல லட்சம் வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்கள் தேனியில் இத்தனை நகர பகுதிக்குள் தான் இதுவரை சென்று வந்தன. இத்தனை நகரங்களும் தேனிக்குள் அடுத்தடுத்து ஓட்டி இணைந்துள்ளன. இதனால் அன்னஞ்சி விலக்கில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை நகருக்குள் உள்ள நெரிசலில் தான் வாகனங்கள் செல்ல வேண்டும்.
இதனால் முத்துதேவன்பட்டியில் இருந்து அன்னஞ்சி வரை கிட்டத்தட்ட 10 கி.மீ., துாரம் வாகன நெரிசல் நிலவி வந்தது. அதுவும் பழனிசெட்டிபட்டியில் இருந்து அல்லிநகரம் வரை ஐந்து கி.மீ., துாரத்தை கடப்பது என்பது சென்னை, மும்பை போன்ற பெரிய நகரங்களை நினைவுபடுத்தும் அளவுக்கு கடும் நெரிசல் நிலவி வந்தது. இந்த 5 கி.மீ., துாரத்தை கடக்க மட்டும் 30 நிமிடம் வரை ஆகும்.
அதுவும் பெரியகுளம் ரோட்டில் ரயில்வே கேட் போட்டு விட்டால் அதோ கதி தான். கிட்டத்தட்ட போக்குவரத்து சீராக 45 நிமிடங்களுக்கு மேலாகும். இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி விட்டது. இந்த சீசனில் வழக்கமாக வரும் வாகனங்களை விட தினமும் குறைந்தபட்சம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிகமாக வரும். எனவே பைபாஸ் ரோடு பணிகளை முடித்து சாலையை திறந்துவிடும்படி மாவட்ட காவல்துறை நான்கு வழிச்சாலை ஆணையத்திற்கு வேண்டுகோள் வைத்தது. தேனி கலெக்டர் முரளீதரனும் ரோட்டை திறக்க முயற்சிகள் மேற்கொண்டார். இந்த முயற்சிகள் காரணமாக பைபாஸ் ரோடு பணிகள் விரைவாக முடிந்து, நேற்று முதல் திறக்கப்பட்டது.
இதனால் கம்பம், குமுளி, சபரிமலை செல்லும் வாகனங்களும், அங்கிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்களும், குறிப்பாக தேனி நகருக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லா அனைத்து வாகனங்களும் பைபாஸ் ரோட்டில் சென்று விடுகின்றன. இதனால் நகரில் நெரிசல் ஒரே நாளில் பாதியாக குறைந்து விட்டது. குறிப்பாக பைபாஸ் ரோட்டில் ரயில்வே கேட் கடக்கும் இடத்தில் ரயில்வே மேம்பாலமும் கட்டப்பட்டுள்ளது. இதனால் எந்த இடத்திலும் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோல் பெரியகுளம், சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம், கூடலுாரிலும் பைபாஸ் ரோடு பணிகள் நிறைவு பெற்று விட்டன. எனவே லோயர்கேம்ப் வரை வாகனங்கள் எந்த ஊருக்குள்ளும் செல்லாமல் பைபாஸ் வழியாகவே சென்று விட முடியும். இதனால் தேனி மட்டுமின்றி, சின்னமனுார், கம்பம், கூடலுார் நகராட்சிகளும் நெரிசலில் இருந்து தப்பி விட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu