மாணவர்களால் மட்டுமே தமிழ்மொழியை காப்பாற்ற முடியும்!
படவிளக்கம் : காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கணித்தமிழ்ப் பேரவை தொடக்க விழா நிகழ்வில், எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ல. இராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கணித்தமிழ்ப் பேரவை தொடக்க விழாவில், தமிழ் மொழி அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு அதிகம் இருக்கிறது என்று எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி குறிப்பிட்டார்.
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, கணினி அறிவியல் பயன்பாட்டுத் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்திய ‘கணித்தமிழ்ப் பேரவை’ எனும் அமைப்பின் தொடக்கவிழா பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ல. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் ஆசிரியரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி கலந்து கொண்டு கணித்தமிழ்ப் பேரவையினைத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
“இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கைப் பயன்பாடுகளில் ஒன்றாக இணையம் வந்து விட்டது. இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, உலக அளவில் 1,267% எனும் அளவில் உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் 11,200% எனும் அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. உலகில் இதுவரை ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சிகளில் இணையத்தைப் போன்ற விரைவான வளர்ச்சி எதுவுமில்லை.
உலக மொழிகளில் இணையப் பயன்பாட்டில் 332 மொழிகள் இடம் பெற்றிருந்தாலும், 162 மொழிகள் மட்டுமே இணையத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கொண்டிருக்கின்றன. இம்மொழிகளில் ஆங்கிலம் அதிகளவாக 59.9 சதவிகிதம் உள்ளடக்கங்களைக் கொண்டு உலக மொழிகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
இணையம் வரவிற்குப் பின்பு, உலகில் ஆங்கில மொழியின் பரவல் வெகுவேகமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் அதிகப் பயன்பாட்டிலிருக்கும் பல மொழிகள் இணையத்தில் மிகவும் பின் தங்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. அதில் தமிழ் மொழியும் ஒன்றாக இருக்கிறது. இந்திய மொழிகளில் இந்தி 0.1 சதவிகிதம் இருக்கிறது. இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள மற்ற மொழிகள் அனைத்தும் 0.1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. உலகின் மொழிப் பயன்பாட்டில் பத்தொன்பதாவது இடத்தில் இருந்து வரும் தமிழ் மொழி இணையத்தில் 60 வது இடம் என்று பின் தங்கிப் போய் விட்டது.
சமூகத்தில் பயன்பாட்டிலிருக்கும் ஒரு மொழி, அதன் மொழித்திறன் குறைந்து கொண்டே சென்று, நாளடைவில் அந்த மொழி பேச்சு வழக்கொழிந்து தொடர்பற்றுப் போவதை மொழியின் இறப்பு என்கின்றனர். ஒரு மொழியின் அழிவுக்கு அரசியல், பொருளாதாரம், சமூகம், மொழியியல் மற்றும் புதிய தொழில்நுட்பம் போன்றவை முதன்மைக் காரணிகளாக இருக்கின்றன. மேற்காணும் முதன்மைக் காரணிகளில், ஐந்தாவது காரணியான இணையம் எனும் புதிய தொழில்நுட்பத்தின் தாக்குதலால் தமிழ் மொழியானது பாதிப்பைச் சந்தித்து விடாமல் பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். புதியத் தொழில்நுட்பத்திலான இணையத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை அதிகமாக்க வேண்டும். அதற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு முக்கியத் தேவையாக இருக்கிறது. குறிப்பாக, மொழி அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு இருக்கிறது. இணையத்தில் தமிழ் மொழியிலான உள்ளடக்கங்களை அதிகமாக்கிட மாணவர்கள் முன்வர வேண்டும்.
கணினி மற்றும் இணையத்தில் தமிழ் மொழிப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் குறுஞ்செயலி மற்றும் செயலிகள் உருவாக்குதல், மென் பொருட்கள் உருவாக்குதல், இணையதளங்களில் தமிழ் மொழியிலான உள்ளடக்கங்களை அதிகரித்தல் போன்ற பணிகளை மாணவர்கள் வழியாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குக் கணினி மற்றும் இணையம் தொடர்பான பல்வேறு பயிற்சிகளை அளிக்கும் வகையில் கல்வி நிறுவனங்களில், தமிழ்நாடு அரசு கணித்தமிழ்ப் பேரவையினைத் தொடங்கி வருகிறது. இப்பேரவையின் வழியாக, நடத்தப்பெறும் பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவும் வகையில் புதிய மென்பொருட்கள், செயலிகள், குறுஞ்செயலிகளை உருவாக்கிட வேண்டும். இணையத்தில் தமிழ் மொழியிலான உள்ளடக்கங்களை அதிகமாக்கிட வேண்டும்” என்றார்.
இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஒ. முத்தையா, கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ப. கலாவதி, பேராசிரியர் முனைவர் பா. ஆனந்தகுமார் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சி. சிதம்பரம் கணித்தமிழ்ப் பேரவை குறித்த நோக்கவுரையாற்றினார். முன்னதாக, உதவிப் பேராசிரியர் முனைவர் ச. சிவகுருநாதன் வரவேற்புரையாற்றினார். முடிவில் முனைவர் கா. கேசவராஜராஜன் நன்றியுரையாற்றினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu