அதிமுகவில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்!

அதிமுகவில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்!
X
இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற திட்டம் அ.தி.மு.க.,வில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கு ஆதரவும் எதிர்ப்புக்குரலும் ஒருசேரக் கட்சிக்குள் வலுத்திருக்கின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் இருக்கின்றன. இருப்பினும், கட்சிக்குள் அமைப்புரீதியான மாற்றங்களை இப்போதே மேற்கொண்டால் தான், தேர்தலை முழு வீச்சோடு எதிர்கொள்ள முடியும் என்பது அ.தி.மு.க தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்தச் சூழலில், ‘இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்’ என மாவட்டக் கழகங்களைக் கலைத்து, கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சும் தனது திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த முடிவெடுத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

“புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பிறகு, கட்சிக்குள் தனது ஆளுமையை நிலைநிறுத்த, அம்மா ஒரு முக்கிய அஸ்திரத்தைக் கையிலெடுத்தார். அதுவரை, இரண்டு, மூன்று மாவட்டங்களைத் தங்களது கைகளில் வைத்திருந்த நிர்வாகிகளின் பதவிகளையெல்லாம் ‘அமைப்பு ரீதியான மாற்றம்’ என்ற பெயரில், அதிரடியாகக் குறைக்கத் தொடங்கினார்.

அதன்படி 30-க்கும் குறைவாக இருந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை, அவரது காலகட்டத்தில் 50-க்கும் மேலாக அதிகரித்தது. இதனால், தனது முக்கிய விசுவாசிகளை அந்தந்த மாவட்ட அரசியலில் அம்மா களமிறக்கி விட்டார்.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு, கட்சி இரட்டைத் தலைமையின் வசம் வந்தது. அப்போது, கட்சிக்குள் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது, எடப்பாடி, பன்னீர் இருவரும் தங்களுக்கான ஆட்களைப் பொறுப்புகளில் நியமனம் செய்ய போட்டி போட்டுக்கொண்டு மாவட்டக் கழகங்களைப் பிரித்தார்கள். அதன்படி, மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை 70-ஐத் தொட்டது. தற்போது கட்சி எடப்பாடி வசம் வந்து விட்டாலும், இன்னும் பல மாவட்டங்களின் அரசியல் சீனியர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.

இதனால் கட்சிக்குள் தன்னிச்சையாகச் சில முடிவுகளை எடுக்கவும், தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும் வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் எடப்பாடி. இதையெல்லாம் ஒரே வீச்சில் சரிசெய்ய எடப்பாடிக்குக் கிடைத்த யோசனை தான் ‘இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்’ என்கிற சீரமைப்புத் திட்டம்.

மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், கட்சிப் பதவிகள் அதிகரிக்கும். அதில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கலாம். அதன் மூலம் கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்தலாம். அது சட்டமன்றத் தேர்தலில் தனக்குக் கைகொடுக்கும் என்று நினைக்கிறார் எடப்பாடி.

தற்போது அ.தி.மு.க-வில் 82 மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. இதில் சென்னை, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மொத்தமுள்ள 34 மாவட்டச் செயலாளர்களின் கையில், தலா இரண்டு சட்டமன்றத் தொகுதிகளே இருக்கின்றன. மீதமுள்ள 48 மா.செ-க்கள் கையில்தான், 166 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில், வேலுமணி, சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, காமராஜ், குமரகுரு, சேலம் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் நான்கு முதல் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வரை வைத்திருக்கிறார்கள். அதேசமயம், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டவர்களிடம் தலா மூன்று தொகுதிகளே இருக்கின்றன.

இது சீனியர்களிடையே பெரிய அளவில் ஈகோவை உருவாக்கியிருக்கிறது. ‘ஒருவருக்குக் கூடுதல்... ஒருவருக்குக் குறைவு என்ற இந்த நிலைமையை மாற்றி, சம பங்கீடு செய்து, எல்லோரையும் ஒரே குடைக்குள் கொண்டுவர இந்த ‘பிளான்’ மிகச்சரியாகக் கைகொடுக்கும்’ என்று நம்புகிறார் எடப்பாடி. இதன் மூலம், சீனியர்களின் பவரைச் சீராகக் குறைத்து, தனக்குச் சாதகமான விசுவாசிகளைப் புதிதாகப் பொறுப்புக்குக் கொண்டுவர நினைக்கிறார் எடப்பாடி” என்றனர் விரிவாக.

மற்றொருபுறம் ‘இந்த பிளான் கத்திமீது நடக்கிற முயற்சி, இது ஆபத்தில்தான் போய் முடியும்’ என்று எதிர்க்கிறார்கள் சில சீனியர்கள். சீனியர் புள்ளிகள் சிலரிடம் பேசினோம், “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி, கட்சிக்குள் பவராக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் எண்ணுவார்கள். உதாரணமாக, ஒரு மாவட்டத்தில் சீனியரிடமிருக்கும் ஒரு தொகுதியைப் பறித்து, புதிதாகக் கட்சிக்கு வந்த ஒருவருக்குக் கொடுத்தால் அதை எப்படி சீனியர் ஏற்றுக்கொள்வார். இது மேற்கொண்டு குழப்பத்தையும், கோஷ்டி மோதல்களையுமே உருவாக்கும். அம்மா காலத்திலிருந்து கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பதவிகளை வகித்து வந்ததோடு, இன்றைக்கு ஒவ்வொரு தேர்தலிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் பசையை இறக்குபவர்கள் சீனியர்கள் தான். வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தங்கள் மாவட்டப் பொறுப்புகளைக் கடந்து, கட்சியின் முகமாக இருக்கிறார்கள். அவர்களிடம் போய், `உங்கள் தொகுதியை ஜூனியர்களிடம் விட்டுக்கொடுங்கள்’ என்றால் கொடுப்பார்களா..?

சமீபத்தில் திருவண்ணாமலை, ராணிப் பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி ஆகிய ஐந்து மாவட்டங்களில், `இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்’ என்ற பிளானைச் செயல்படுத்தினார் எடப்பாடி. அப்படி, பத்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவசரகதியில் நடைபெற்ற இந்த மாற்றத்தால் மக்களவைத் தேர்தலில் அந்த ஐந்து மாவட்டத் தொகுதிகளிலும் கட்சி படுமோசமான பின்னடைவைச் சந்தித்தது. தேனி, திருநெல்வேலியில் டெபாசிட்டே கிடைக்கவில்லை. திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் உட்கட்சி மோதல் விஸ்வரூபமெடுத்து வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கவே ஆட்கள் திரளவில்லை.

தஞ்சாவூரில் நான்கு மாவட்டச் செயலாளர்கள், இரண்டு மாநகரச் செயலாளர்கள் என ஆறு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் எடப்பாடி. ஆனால், வைத்திலிங்கத்தின் கோட்டையாக இருக்கும் தஞ்சையில் அவர்களால் ஒரு செங்கல்லைக்கூடப் பெயர்த்தெடுக்க முடியவில்லை. ``வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான சக்சஸ் ஃபார்முலாவாக இது இருக்கும்’ என எடப்பாடி நம்புகிறார் என்றே வைத்துக்கொள்வோம்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் 14 மா.செ-க்கள் இருந்தும் ஏன் கடந்த தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ சீட்டைக்கூட ஜெயிக்க முடியவில்லை. தி.மு.க-வுக்குள் பேசுபொருளாகி, பின்னர் தூக்கிப்போடப்பட்ட இந்தத் திட்டம், அ.தி.மு.க-வுக்குள் அமல்படுத்தப்படுமானால் மேலும் மோசமான சிக்கல்கள் தான் உருவாகும்.

தொண்டர்களை ஒன்றிணைத்து, சார்பு அணிகளை மீண்டும் உயிர்த்தெழவைத்து, சரியான கூட்டணி அமைத்து, முறையாக வியூகங்களை வகுத்தாலே தேர்தல் வெற்றி சாத்தியப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு 18 மாதங்கள் இருக்கும் நிலையில், அவசர அவசரமாக மாவட்டங்களைக் கலைத்தாடினால், லாபத்தைவிட நஷ்டமே அதிகம் ஏற்படும்” என்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு இது பற்றிய அத்தனை விஷயங்களும் தெரியும். அரசியலில் எந்தெந்த நகர்வு என்னென்ன நன்மை, தீமைகளை வழங்கும் என்பதை அவர் தெளிவாக அறிந்திருக்கிறார். எனவே அவர் தெளிவான ஒரு முடிவினை விரைவில் அறிவிப்பார் எனவும் சில சீனியர்கள் சொல்கின்றனர். என்ன செய்யப்போகிறார் எடப்பாடி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!