ஒமிக்ரான் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது: தேனி மாவட்ட சுகாதாரத்துறை

பைல் படம்
ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உடல்நலனில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது. இந்த தொற்று பரவலில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் மட்டுமே போதுமானது என தேனி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
ஒமிக்ரான் வைரஸ் முதன் முறையாக கண்டறியப்பட்ட தென்ஆப்ரிக்காவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த நவம்பர் 24ம் தேதி ஓமிக்ரான் வைரசை கண்டுபிடித்தோம். வேகமாக பரவும். ஆனால் உடல் நலனில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது. ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட பலருக்கு மருத்துவமனை அனுமதி கூட தேவைப்படவில்லை. இதன் பாதிப்பும், அறிகுறியும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் டெல்டா வகை கொரோனா முழுமையாக கட்டுக்குள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே ஒமிக்ரானால் எந்தவித அச்சமும் பட வேண்டியதில்லை' என கூறியுள்ளது.
தவிர கர்நாடகாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவருக்கு பயணத்தொடர்புகள் எதுவுமே இல்லை. இதனால் கண்டறியப்படுவதற்கு முன்னரே ஒமிக்ரான் வைரஸ் உலகில் பல நாடுகளுக்கு பரவி விட்டது. இதனால் தான் உலக சுகாதார நிறுவனம், ஒமிக்ரான் வைரஸ் பரவலை விமான பயணத்தடைகள் மூலம் தடுத்து நிறுத்த முடியாது எனக்கூறி உள்ளது.
இந்நிலையில் இதில் இருந்து தப்பிக்க என்ன வழி. மக்கள் யாரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பற்றி கவலைப்படவே வேண்டாம். முககவசம் அணிதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் போன்ற வழக்கமான நடைமுறைகளே ஒமிக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
எத்தனை முறை உருமாறிய வைரசாக இருந்தாலும், நிச்சயம் அது முககவசத்தை ஊடுறுவிச் செல்ல வாய்ப்பில்லை. உலக அளவில் 30 நாடுகளுக்கும் மேல் ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டாலும், எந்த நாட்டிலும் இதனால் இறப்பு இதுவரை பதிவாகவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கர்நாடகாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரும் மிகவும் லேசான உடல் உபாதைகளுடன் தான் உள்ளனர். இருவரது உடல் நலமும் தற்போது நல்ல முறையில் உள்ளது. 66 மற்றும் 44 வயதுள்ள இருவரும் மிகவும் நல்ல உடல் நலத்துடன் தான் உள்ளனர். எனவே மக்கள் தற்போதைய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினாலே போதும். ஒமிக்ரான் தொற்றில் இருந்து எளிதில் தப்பி விடலாம் என தேனி மாவட்ட சுகாதாரத்துறையினர் தெளிவாக கூறி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu