பழைய ஓய்வூதியத் திட்டம்... அச்சத்தில் அரசு ஊழியர்கள்...

பைல் படம்
Old Pension Scheme News Today -இந்தியா முழுவதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களின் மிகப் பெரிய கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதுதான். மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று CPS ஒழிப்பு அமைப்பினரும் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்களும் நீண்ட காலமாகவே தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிதி நிலையைக் காரணம் காட்டி இத்திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகக் காரணம் கூறி வருகின்றன.
பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவோம் என உறுதி கூறி தமிழக அரசு ஊழியர்களின் ஓட்டுக்களை வாங்கி ஆட்சியை பிடித்த தி.மு.க. அரசு கூட தற்போதைய நிதிநிலை சிக்கலாக உள்ளதால், கையை பிசைந்து கொண்டு இருக்கிறது . சில மாதங்களுக்கு முன்பு நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை. இதனால் தமிழக அரசு ஊழியர்கள் தற்போதைய தி.மு.க. அரசு மீது சற்று அதிருப்தியுடன் தான் உள்ளனர்.
எனினும் ஒருசில மாநிலங்கள் துணிச்சலுடன் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் பஞ்சாப் மாநிலமும் இணைந்துள்ளது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஊழியர்களின் மற்ற சலுகைகள் குறைக்கப்படும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. இது அரசு ஊழியர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தற்போது பஞ்சாப் அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும்போது, அதில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று தொழிலாளர் சங்கத் தலைவர்களிடம் பஞ்சாப் மாநில கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் உறுதியளித்துள்ளார். சில ஊழியர்களால் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் அவர்களிடம் உள்ள குழப்பங்கள் குறித்து மாநில அரசு ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாப் பவனில் CPF ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பின் போது கல்வித் துறை அமைச்சர் பெயின்ஸ், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும்போது DA மற்றும் கருணைத் தொகையை அரசாங்கம் குறைக்கும் என்ற அச்சம் சில ஊழியர் சங்கங்களிடம் இருப்பதாகக் கூறினார். இந்த அச்சம் தவறானது என்றும், 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன்பு இருந்த இத்திட்டத்தை மாநில அரசு அப்படியே மாற்றம் இல்லாமல் செயல்படுத்தும் என்று உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பஞ்சாப் அரசு ஊழியர்கள் மத்தியில் இதுவரை இருந்த சலுகைகள் பறிக்கப்படும் என்ற அச்சம் சற்று குறைந்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu