பழைய ஓய்வூதிய திட்டம்: டி.டி.வி., தினகரன் கண்டனம்
கோப்பு படம்
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதாக கூறிய தமிழக அரசு அதனை நிறைவேற்றாமல் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் வஞ்சிப்பதாக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆசிரியர் தினத்தன்று போராட்டம் அறிவித்துள்ள ஆசிரியர்கள் - தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி 309 ஐ நிறைவேற்றக் கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத நிலையில், ஆசிரியர்களை கொண்டாடி மகிழ வேண்டிய தினத்தன்று ஆசிரியர்கள் அனைவரும் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பெரும்பாலான சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த திமுக, மூன்றாண்டுகளை கடந்தபின்பும் அதனை நிறைவேற்ற மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியிருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் செயல்படுத்த மறுப்பது ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் ஆசிரியர் தினத்தன்று போராட்டம் அறிவித்துள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்துப் பேசுவதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்று வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu