தமிழகத்தில் அலுவலகம் அமைத்து சுற்றுலா நடத்தும் கேரள வனத்துறை..!
மாட்டுவண்டி சுற்றுலா தொடக்கவிழாவில் கேரள வன அதிகாரிகளுடன் சுற்றுலா பயணிகள்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளருமான ச.பென்னிகுயிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கூடலூர் அருகே காஞ்சிமரத்துறையில், குமுளியை தலைமையிடமாக கொண்ட, பெரியார் புலிகள் காப்பகத்தின் துணை அலுவலகம் ஒன்று, நமக்கே தெரியாமல் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இதே பெரியார் புலிகள் காப்பகத்தின் இன்னொரு அலுவலகம், தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவில் வாசுதேவநல்லூரில் இருந்து செண்பகவல்லி கால்வாய்க்கு செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிசனாக அது அறிவிக்கவும் பட்டிருக்கிறது.
தமிழக எல்லைக்குள் இப்படி கேரளாவை மையமாகக் கொண்ட ஒரு புலிகள் காப்பகம், தன்னுடைய அலுவலகங்களை அத்துமீறி திறப்பதும், அங்கிருந்து கொண்டு தமிழகத்திற்கு எதிரான செயல்பாடுகளை செய்வதும் ஏற்புடையதுதானா...?. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகள், கேரளாவிற்குள் இந்த வேலையை செய்ய முடியுமா...? கூடலூரில் உள்ள பெரியார் புலிகள் காப்பக அலுவலகத்திலிருந்து, நவீன முறையில் வடிவமைப்பு செய்யப்பட்ட மாட்டு வண்டியில், தமிழக கிராமங்களை சுற்றி காண்பிக்கப் போகிறோம் என்று ஒரு மாட்டு வண்டியையும் தயார் செய்து, அதில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு, கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து வலம் வருவது தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியுமா...? எந்த அடிப்படையில் இந்த செயல்பாடுகளை பெரியாறு, புலிகள் காப்பக அதிகாரிகள் தமிழகத்திற்குள் மேற்கொள்கிறார்கள்.
தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கு ஒரு அமைச்சர் இருக்கும் நிலையில், கேரளாவைச் சார்ந்த வனத்துறை அதிகாரிகள் எந்த அடிப்படையில் தமிழகத்திற்குள் எவ்வித அனுமதியும் இன்றி சுற்றுலாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய பெரியார் புலிகள் காப்பகத்தின் இந்த செயலை, தேனி மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் நூற்றுக்கணக்கான மாடுகளை கொண்டு போய், காஞ்சி மரத்துறையில் உள்ள பெரியார் புலிகள் காப்பக அலுவலகத்திற்குள் அடைக்க வேண்டிய தேவை ஏற்படும். உடனடியாக அந்த அலுவலகம் இழுத்துப் பூட்டப்பட வேண்டும். இல்லையேல் அவர்கள் ஓட்டிக் கொண்டு வரும் மாட்டு வண்டியை சிறை பிடிப்பதோடு, போராட்டக் களத்தையும் முன்னெடுப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu