ஓபிஎஸ் -சின் கடைசி அஸ்திரம் திருச்சி மாநாடு....

ஓபிஎஸ் -சின் கடைசி அஸ்திரம் திருச்சி மாநாடு....
X

பைல் படம்

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் தனக்கான இடத்தை பிடிக்க கடைசி அஸ்திரமாக திருச்சி மாநாட்டை கையிலெடுத்துள்ளார்

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டு கட்சி பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளார். அதேசமயம் தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று நீதிமன்ற கதவுகளை தட்டி தீர்ப்பிற்காக காத்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தனக்கான செல்வாக்கை நிரூபித்து அதிமுகவில் மீண்டும் நுழைந்து விட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் காய்களை நகர்த்தி வருகிறார்.

இந்த சூழலில் திருச்சியில் வரும் 24ஆம் தேதி பிரம்மாண்ட மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை எம்.ஜி.ஆர் பிறந்த நாள், ஜெயலலிதா பிறந்த நாள், அதிமுகவின் 51வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளார். திருச்சியில் மிகப்பெரிய அளவில் கூட்டத்தை திரட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

இதையொட்டி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, அன்வர் ராஜா, கே.சி.பழனிசாமி உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பு இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கையில் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாநாட்டிற்கான செலவு விவகாரம் தான் சிக்கலாக முன்வந்து நிற்கிறது.

இந்த விஷயத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் எனப் பலரும் கைவிரித்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால் நான் இருக்கிறேன் என்பது போல் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கைகொடுக்க ஓடி வந்துள்ளார் மற்றொரு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். திருச்சி மாநாட்டை மட்டும் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டால் அடுத்தகட்டமாக சுதாரித்து கொள்ளலாம்.

எனவே எப்பாடு பட்டாவது மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும். மாநிலம் தழுவிய அளவில் ஆட்களை திரட்டும் வேலைகளில் மாவட்ட செயலாளர்கள் மும்முரமாக ஈடுபடுங்கள். மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என அறிவுறுத்தி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு நம்பிக்கை அளித்துள்ளார். மற்றொரு முக்கியமான விஷயத்தையும் ஓபிஎஸ் தரப்பு செயல்படுத்தி வருகிறது.

அதாவது, எடப்பாடி பழனிசாமி அதிகாரம் பெற்றதும் கிட்டத்தட்ட கவுண்டர் கட்சியாக அதிமுகவை மாற்றி வைத்து விட்டார். சமூக ரீதியாக பிரிந்து நிற்கின்றனர். குறிப்பாக தாங்கள் சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தினர் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை மாற்றும் வகையில் தமது சமூகத்தை சேர்ந்த அனைத்து தலைவர்களும் ஒன்று சேர வேண்டும். தென் மாவட்டங்களில் நமது செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டும்.

மேலும் மற்ற சமூகத்தினரின் ஆதரவரையும் திரட்டி ஒருங்கிணைந்த அதிமுகவாக கொண்டு வர வேண்டும் என வியூகம் வகுத்துள்ளனர். இதையொட்டி ரகசிய பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறதாம். இதில் தெற்கு, வடக்கு என்ற பேதம் எதுவும் இல்லை. எல்லாம் சுமூகமாக முடிந்தால் திருச்சி மாநாட்டில் பல்வேறு சமூக தலைவர்களை பார்க்க முடியும். உண்மையான அதிமுக நாங்கள் தான் என்பது உறுதி செய்யப்படும் என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவு ரத்தத்தின் ரத்தங்கள்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!