புதிய தொழில்நுட்பங்களால் தமிழ் மொழிக்கு அழிவில்லை..!

புதிய தொழில்நுட்பங்களால் தமிழ் மொழிக்கு அழிவில்லை..!
X

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற மொழிநாள் விழாவில் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி பேசினார்.

வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களால் தமிழ்மொழிக்கு அழிவு ஏற்படாது என எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி பேசினார்.

எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் தமிழ் மொழி, அதற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு விடுவதால், தமிழ் மொழிக்கு எப்பொழுதும் அழிவு இல்லை என்று எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி தெரிவித்தார்.

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில், உலகத் தாய்மொழி நாளினை முன்னிட்டு மொழிநாள் விழா கல்லூரியின் தமிழாய்வுத்துறைத் தலைவர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் யாழ் சு. சந்திரா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்துக்கம்லம் மின்னிதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘இணையத்தில் தமிழ்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது,

“உலகப் பயன்பாட்டிலுள்ள மொழிகளில் 335 மொழிகள் இணையத்தில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் 162 மொழிகள் மட்டுமே இணையத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஆங்கிலம் அதிக அளவாக 59.9 சதவிகித உள்ளடக்கங்களுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. இணையத்தில் இந்திய மொழிகள் அனைத்தும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கின்றன.

தமிழ் மொழி 0.0043 சதவிகிதம் எனும் அளவில் இணையத்தில் மிகவும் பின் தங்கியே இருக்கிறது. உலக அளவில் மொழிகள் பயன்பாட்டில் 20 வது இடத்திலிருக்கும் தமிழ் மொழி, இணையத்தில் 60 வது இடம் என்று பின் தங்கி இருக்கிறது. மொழி அழிவிற்கு அரசியல், பொருளாதாரம், சமூகம், புதிய தொழில்நுட்பம் என்று பல்வேறு காரணிகள் இருக்கின்றன.

இந்தக் காரணிகளில், தற்போதைய புதிய தொழில்நுட்பமான இணையத்தில் ஆங்கில மொழியின் பரவல் அதிகமாக இருப்பதால், மற்ற மொழிகளுக்கு அழிவுக்கான அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும், இணையத்தில் ஒவ்வொரு மொழியும் தங்களை உயிர்ப்பித்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்றன.

அவ்வழியில், இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுடன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே, இணையத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழி அழிவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. இனி வரும் காலங்களிலும், புதிய தொழில்நுட்பங்கள் எத்தனை வந்தாலும், அதற்கேற்றபடி, தமிழ் மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது என்பதால், தமிழ் மொழிக்கு எப்போதும் அழிவு என்பதில்லை.

இருப்பினும், புதிய தொழில்நுட்பமான இணையத்தில் தமிழ் மொழி பங்களிப்புகளை அதிகரிக்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்து இணையப் பயன்பாட்டிலும் தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்த முன் வரவேண்டும்” என்றார். நிகழ்வின் முடிவில் தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் கா. சத்யா நன்றி தெரிவித்தார். நிகழ்வினைத் தமிழாய்வுத்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் சு. சத்யா தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு