தேனியில் விடை பெற்றது வடகிழக்கு பருவமழை

தேனியில் விடை பெற்றது வடகிழக்கு பருவமழை
X
போதும்... போதும்... என்கிற அளவு பெய்து விட்டு இந்த சீசனுக்கான வடகிழக்கு பருவமழை தேனி மாவட்டத்தில் விடை பெற்றது.

தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாகவே தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை சற்று குறைவாகவே பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து கை கொடுத்து வருகிறது. இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கினாலும், வடகிழக்கு பருவமழை போதும்... போதும் என்கிற அளவு பெய்தது.

மழைச்சேதம் இந்த ஆண்டு மிக, மிக குறைவு தான். இல்லை என்று கூட சொல்லலாம். மிகவும் சிறிய அளவில் தான் ஆங்காங்கே பாதிப்பு. ஆனால் வைகை அணையினை மூன்று முறை நிறைத்தது. தற்போது வரை முழு கொள்ளவான 71 அடியில் ஒரு வாரத்திற்கும் மேல் தண்ணீர் நிற்கிறது. முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டமும் 141.5 என்கிற அளவுக்கு உயர்ந்து தான் குறைந்தது. அதேபோல் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் முல்லைப்பெரியாறு நீர் மட்டம் 130 அடிக்கு கீழே வரவில்லை. மூன்று முறை 136 அடியை கடந்தது. தற்போது கூட அணையின் நீர் மட்டம் 138.75 என்கிற அளவில் தான் உள்ளது. வழக்கத்தை விட இந்த சீசனில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள அத்தனை அணைகளும் பொங்கி வழிகின்றன. அத்தனை ஆறுகளிலும் நீர் பொங்கி பெருகி வந்து கொண்டுள்ளது. சோத்துப்பாறை அணை நுாறு நாட்களாக பொங்கி வழிகிறது. மாவட்டத்தில் உள்ள அத்தனை ஓடைகள், அருவிகளில் தொடர்ந்து நீர் வரத்து இருந்து கொண்டே உள்ளது. மிகவும் சிறப்பான ஒரு மழையினை கொடுத்து, எந்த ஒரு சேதமும் இல்லாமல் நீர் வளத்தை அதிகப்படுத்திய வடகிழக்கு பருவமழை கடந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் இருந்து விடை பெற்று விட்டது. இரண்டு நாட்களாக சாதாரண மேகமூட்டமும், கடும் பனிப்பொழிவும் மட்டும் நிலவுகிறது. தமிழகத்தில் இருந்து நாளை முதல் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை விடை பெறுகிறது என வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கடம்பூர் அருகே யானைகளுக்கு ராகி உணவு சமைத்து படையலிட்ட பழங்குடியின மக்கள்!