தேனி மாவட்டத்தில் இயல்பை விட கூடுதல் மழைப்பொழிவு

தேனி மாவட்டத்தில் இயல்பை   விட கூடுதல் மழைப்பொழிவு
X

தேனி கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் இயல்பை விட கூடுதல் மழை பெய்துள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.

தேனி கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் தொடங்குவதற்கு முன் அவரை, மஞ்சள் நோய் மற்றும் மா பயிரில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் பற்றியும், தேனீ வளர்ப்பில் அதிகளவு தேனீ பெற்றிட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்திட விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது பெயர் மற்றும் விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்ட கலெக்டர் தொடர்ந்து பேசியதாவது:

தேனி மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவான 829.80 மி.மீ-க்கு இம்மாதம் வரை 823.95 மி.மீ பெறப்பட்டுள்ளது. இது நவம்பர் மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 773.60 மி.மீ-யை காட்டிலும் 50.35 மி.மீ அதிகமாகும். நவம்பர் மாத இயல்பு மழையளவான 146.5 மி.மீ-க்கு தற்பொழுது வரை 164.38 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது நவம்பர் மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 17.88 மி.மீ அதிகமாகும்.

தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் இதுவரை 6,078 எக்டர் பரப்பிலும் சிறுதானியங்கள் 8,302 எக்டரிலும், பயறுவகைகள் 5,083 எக்டரிலும், பருத்தி 1,894 எக்டரிலும், எண்ணெய் வித்து பயிர்கள் 1,573 எக்டரிலும் மற்றும் கரும்பு 2,195 எக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 114 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 11.0 மெ.டன்னும் (NLR, ADT 54 & CO 52), சிறுதானியங்கள் 3.50 மெ.டன்னும் (கம்பு கோ 10, சோளம் கே 12) பயறு வகை விதைகள் 11.60 மெ.டன்னும், எண்ணெய் வித்துப் பயிர் விதைகள் 2.60 டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,519 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 455 மெ.டன்னும் (Green star> IPL & IFFCO) பொட்டாஷ் 680 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 4,781 டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், உரம் கிடைப்பதில் பிரச்னை, அதிக விலைக்கு விற்பனை செய்வது மற்றும் உரம் பதுக்கல் பற்றிய புகார்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (த.க) (பொ) 94432 32238 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

மேலும், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 6X5 மீ அளவுள்ள தார்பாலின்கள் 624 எண்கள் 50 சதம் அல்லது ரூ.830/- எண்ணிற்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும், நெல்லிற்கு ஜிங்க் சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ வீதம் 1030 ஏக்கருக்கும் (மானியம் 50 சதம் அல்லது ரூ. 250/ ஏக்கர்), நெல்லிற்கு ஜிப்சம் ஏக்கருக்கு 200 கிலோ வீதம் 1030 ஏக்கருக்கு (மான்யம் 50 சதம் அல்லது ரூ. 250/ ஏக்கர்) விநியோகம் செய்யப்படவுள்ளது என்றும், வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் தேக்கு, செம்மரம், பலா, சவுக்கு, மகாகனி மற்றும் இலவ மரக்கன்றுகள் விலையில்லாமல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு விவசாயிக்கு வரப்பு பயிராக ஒரு எக்டருக்கு 70 எண்களும், சாதாரண நடவு மேற்கொள்ள 200 எண்களும், அட நடவு மேற்கொள்ள 400 மரக்கன்றுகளும் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்தில் இதுவரை 50,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டது. பி.எம்.கிஸான் திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள் தங்களது ஆதார் மற்றும் செல்பேசி எண்ணை தங்களது வங்கிக்கணக்குடன் இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திட கேட்டுக்கொள்ளப்பட்டது.

வேளாண்மை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து மானியம் வழங்கப் படுவதால் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று பயனடையலாம்.விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ) பொ.தனலெட்சுமி மற்றும் அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil