தேனியில் 50 ஆண்டுகளாக தீராத பிரச்னை..!

தேனியில் 50 ஆண்டுகளாக  தீராத பிரச்னை..!
X

பொது கழிப்பிடம் (கோப்பு படம்)

தேனியில் ஐம்பது ஆண்டுகளை கடந்தும் தீர்க்க முடியாத பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.

தேனியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கழிப்பிட வசதிகள் இல்லாமல் தவிக்கும் பல்வேறு குடியிருப்புகளின் பொதுமக்கள், கரட்டுப்பகுதியை குடியிருப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

தேனியில் சமதர்மபுரம், எம்.ஜி.ஆர்.நகர், சிவராம்நகர், கக்கன்ஜிகாலனி, விஸ்வநாததாஸ் காலனி குடியிருப்புகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்த குடியிருப்புகள் அனைத்தும் தேனியின் வால்கரடு மலைப்பகுதியினை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இந்த குடியிருப்புகள் அமைந்த நாள் முதல் குறிப்பாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடியிருப்பு பகுதிகளின் மக்கள் வால்கரடு மலைப்பகுதியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் கக்கன்ஜிகாலனி, விஸ்வநாததாஸ் காலனி பகுதியில் கூட கழிப்பிடம் கட்ட இட வசதி உண்டு. நகராட்சி இந்த பகுதிகளில் ஓரளவு வசதிகளும் செய்து கொடுத்துள்ளது. ஆனால் சமதர்மபுரம், எம்.ஜி.ஆர்.,நகர், சிவராம்நகர் பகுதிகளில் பொதுக்கழிப்பிடம் கட்ட போதிய இட வசதிகள் இல்லை. இவர்கள் வால்கரடு பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் வால்கரடு பகுதியை ஒட்டியுள்ள மற்ற குடியிருப்பு பகுதிகளுக்கும் சுகாதாரப்பிரச்னைகள் உருவாகி வருகின்றன. இப்பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் சிறியதாகவும், நெருக்கமாகவும் உள்ளதால் வீடுகளிலும் கழிப்பிடங்கள் அமைக்க இடம் இல்லை.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் நகராட்சி நிர்வாகமும் சிரமப்பட்டு வருகிறது. பொதுமக்களும் பெரும் இடையூறுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‛இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் பொதுக்கழிப்பிடம் கட்ட இடம் இருந்தால் உடனே நகராட்சி கட்டித்தர தயாராக உள்ளது. அப்பகுதியில் இடம் இல்லாததால் இப்பிரச்னை தொடர்கிறது.’ என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!