கைகொடுப்பார் யாருமில்லை..! போராட உதவிகள் இன்றி பரிதவிக்கும் தமிழக 5 மாவட்ட விவசாய சங்கம்

கைகொடுப்பார் யாருமில்லை..! போராட உதவிகள் இன்றி  பரிதவிக்கும் தமிழக 5 மாவட்ட விவசாய சங்கம்
X

முல்லை பெரியாறு அணை பைல் படம்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் வலுவான போராட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் திணறி வருகிறது.

மிக கடுமையான பணபலம், அரசியல்பலம், பொதுமக்கள் ஆதரவுடன் முல்லை பெரியாறு அணையினை உடைக்க வேண்டும் என வலுவான போராட்டம் கேரளாவில் நடைபெற்று வரும் நிலையில், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் விவசாயிகள் எந்த ஆதரவும் இல்லாமல் நிராயுதபாணிகளாக பரிதவித்து வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணையினை உடைக்க வேண்டும் என்ற கருத்தில் கேரளாவில் அரசியல்வாதிகள் முதல் அடித்தட்டு சாமானியன் வரை ஒரே அணியில் உள்ளனர். இவர்களுக்கு பின்னணியில் பணமாபியா உள்ளது. இவர்கள் எத்தனை லட்சம் கோடிகள் வேண்டுமானாலும் கொட்டிக்கொடுக்க தயாராக இருக்கின்றனர்.

தவிர யாராவது ஒருவர் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக பேசினால் அவர் ஒரே நாளில் கேரளாவில் ஹீரோவாகி விடுகிறார். அத்தனை சமூக ஊடகங்களும் அவரை துாக்கி வைத்து கொண்டாடுகின்றன. ஒரேநாளில் அந்த நபர் மிக கடுமையான பணக்காரராகி விடுகிறார். இதனால் அங்கு நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. முல்லை பெரியாறு அணையினை பாதுகாக்க வேண்டும் என்று ஒரே ஓரு ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட தமிழக விவசாய சங்கத்தினர் பெருமளவில் பரிதவித்துப்போகின்றனர். காரணம், இங்கு போராட்ட களத்தில் உள்ள விவசாயிகள் அத்தனை பேரும் நடுத்தர மற்றும் ஏழை விவசாயிகள். அவர்களால் தினசரி வாழ்வாதாரத்திற்கே போராட வேண்டி உள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணைக்காக போராடுவது என்பது, 'நெப்போலியன் வானத்தை சுமந்தது' போன்ற கதை தான்.

தமிழக விவசாயிகளிடம் பணம் இல்லை. பொதுமக்கள் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை. அரசியல் ஆதரவு ஒரு துளி அளவு கூட இல்லை. மாறாக போராடினால் அந்த விவசாய சங்க நிர்வாகிகள் கடும் மிரட்டலுக்கு உள்ளாக நேரிடுகிறது. தவிர அணி சேர்ந்த ஒரு சில நிமிடங்களில் விவசாய சங்கங்களை துண்டாக உடைத்து விடுகின்றனர். இதற்கான பின்னணி காரணம் என்ன என்பதே தெரியவில்லை.

தவிர தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒருவர் கூட முல்லை பெரியாறு அணை போராட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவிட தயாராக இல்லை. (ஆனால் கேரளாவில் நினைத்த ஒரு மணி நேரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் திரட்டி விடுகின்றனர். தற்போது அவர்கள் தொடங்கி உள்ள முல்லை பெரியாறு அணையை உடைப்போம், சேவ் கேரளா என்ற அமைப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டி விட்டது).

பணம் தான் செலவிட முடியவில்லை. போராட்டத்திற்காவது வாருங்கள் என்றாலும் பலரும் எஸ்கேப் ஆவதில் குறிக்கோளாக உள்ளனர். குறிப்பாக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் போன் செய்தால், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் என எந்த தரப்பினரும் போனை எடுப்பதில்லை. தற்போது தமிழக விவசாய சங்க நிர்வாகிகளுக்கு உள்ள ஒரே ஒரு ஆதரவு தமிழக அனைத்து ஊடகங்களின் ஆதரவு மட்டுமே. முல்லை பெரியாறு அணை போராட்டத்தை தமிழக ஊடகங்கள், கேரள ஊடகங்களை விட சிறப்பாகவே ஒளிபரப்பி வருகின்றன.

இப்போது கூட பார்லிமெண்டில் கேரளாவின் 20 எம்.பி.,க்களும் தினமும் ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி, ஸ்தம்பிக்க வைக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள 39 எம்.பி.,க்களும் இது பற்றி கண்டுகொள்ளவே இல்லை. குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் பாசன பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.,க்கள் கூட முல்லை பெரியாறு அணை பற்றி பார்லிமெண்டில் விவாதம் வந்தாலே ஓடி ஒளிந்து கொள்கின்றனர். தமிழகத்தின் அத்தனை கட்சிகளும் ஒளிந்து கொள்வதில் மட்டும் ஓரணியில் நிற்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஒரே நம்பிக்கை முதல்வர் ஸ்டாலினும், பிரதமர் மோடியும் மட்டுமே. இந்த இருவரை தவிர வேறுயாரையும் நம்ப தயாராக இல்லை என தமிழக விவசாயிகள் பலரும் பகிரங்கமாகவே கூறி வருகின்றனர். இவர்கள் இருவர் மட்டுமே மனது வைத்து, நிச்சயம் தமிழக விவசாயிகளின் உண்மை நிலையையும் முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலையையும் புரிந்து ஐந்து மாவட்டங்களில் வசிக்கும் ஒரு கோடி மக்களை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!