ஆபாச தளங்கள் வேண்டாம்... சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
பைல் படம்
ஆபாச தளங்களை பயன்படுத்துவோர், இணையத்தில் தங்களது மொபைல் போன் எண்களை பதிவிடவோ, அதிலிருக்கும் எண்களை தொடர்பு கொள்ள கூடாது. இது குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் மோசடி கும்பல், பல்வேறு வகையில் பொது மக்களை ஏமாற்றி வருகிறது. அதில், பெரும்பாலான புகார்களுக்கு காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீர்வு காணப்படுகிறது. அதேநேரம், ஆபாச தளங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்து புகார் தெரிவிக்க, சபல நபர்கள் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக, ஆபாச கதைகள், வீடியோக்களின், 'கமென்டில்' ஏராளமான எண்கள் குவிந்துள்ளன.
பலர், தங்களது மொபைல் போன் எண்களை பதிவிட்டு, பெண்கள் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடுகின்றனர். அதேபோல், பெண்கள் பெயருடன், அரைகுறை ஆடை, உள்ளூர் பெண்கள் புகைப்படத்துடன், மொபைல் எண்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த எண்களை சபல நபர்கள் தொடர்பு கொள்ளும் போது, அழைப்பை எடுக்காமல், சிறிது நேரம் கழித்து குறுஞ்செய்தியில்பதிலளிப்பர். பின், வீடியோ காலில் மர்ம நபர்கள் வருவர்.
ஆனால், அவர்கள் முகத்தை காட்டாமல், சபல நபரின் முகத்தை மட்டும், 'ரெக்கார்டு' செய்து, சபல நபரின் முக அமைப்புக்கு ஏற்ப, ஆடையில்லாதது போல் அல்லது வேறு பெண்ணுடன் இருப்பது போல், 'மார்பிங்' செய்து பணம் பறிப்பது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதில் சிக்குவோர், அவமானம் எனக் கருதி, மற்றவர்களிடமோ, போலீசாரிடமோ புகார் அளிக்க, தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே ஆபாச தளங்களை பயன்படுத்த வேண்டாம். பயன்படுத்தினால் உங்கள் மொபைல் நம்பரை வழங்க வேண்டாம். அப்படி வழங்கினாலும், மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். பணம் கொடுக்க வேண்டாம். அப்படி ஏமாற்றும் நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யுங்கள். இப்படி நீங்கள் செய்யும் புகார் உங்களை பாதுகாப்பதோடு, அந்த மோசடி நபரை கைது செய்வதன் மூலம் அவர் சமூகத்தில் பிற நபர்களுக்கு செய்ய இருக்கும் மோசடியையும் பாதுகாக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu