அ.தி.மு.க.,வில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறாரா தம்பிதுரை?

அ.தி.மு.க.,வில் தனி ராஜ்ஜியம்  நடத்துகிறாரா தம்பிதுரை?
X

எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை -கோப்பு படம் 

ராஜ்யசபாவில் நடந்த சம்பவம் ‘அ.தி.மு.க-வுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை’ என்பதை மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியிருக்கிறது.

மத்திய பட்ஜெட் தொடர்பாக ராஜ்யசபாவில் தம்பிதுரையும் சி.வி.சண்முகமும் எதிரெதிர் கருத்துகளை பேசியிருக்கின்றனர். இந்த சம்பவம் ‘அ.தி.மு.க-வுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை’ என்பதை மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியிருக்கிறது.

கூட்டணிக் கட்சிகள் ஆதரவோடு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறது பா.ஜ.க தலைமையிலான அரசு. இந்த நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஜூலை 25-ம் தேதி தாக்கல் செய்தார். `பட்ஜெட்டில் தமிழ்நாட்டைத் திட்டமிட்டே தவிர்த்திருக்கிறார்கள்’ என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ‘தமிழகத்துக்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது’ என்று மத்திய அரசைக் காட்டமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரது குரலை அப்படியே எதிரொலிக்கும் வகையில் ராஜ்ய சபாவில் பேசிய அ.தி.மு.க எம்.பி சி.வி.சண்முகம், “சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. சேலம் - சென்னை நெடுஞ்சாலைப் பணிகளுக்கும், தமிழ்நாடு சந்தித்த வெள்ள பாதிப்புகளுக்கும் நிதி ஒதுக்கவில்லை. தமிழகத் -துக்குத் தேவை... திட்டங்களும் நிதியும்தான். ஆனால், பட்ஜெட்டுக்கு முன்பு கிண்டிய அல்வாவைத்தான் தந்திருக்கிறார்கள்” என்று போட்டுத் தாக்கினார்.

ஆனால், அ.தி.மு.க-வின் சீனியர் எம்.பி-யான தம்பிதுரையோ, “இந்த பட்ஜெட் மூலமாக வரி வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயம், குறு, சிறு தொழில் நிறுவனங்கள், எரிசக்தித்துறை, மாநிலங்களின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி, இளைஞர்கள் நலன் என அனைத்துப் பிரிவுகளிலும் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தியிருக்கிறது” என்று மத்திய பா.ஜ.க அரசுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பது போல, மாநிலங்களவையில் பேசியிருந்தார்.

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு நேரெதிராக தம்பிதுரை இப்படிப் பேசியிருப்பது அந்தக் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

என்னவானது ராணுவக் கட்டுப்பாடு?

இது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான போது, ‘பா.ஜ.க-வுடன் கூட்டணிவைத்திருந்தால் 35 இடங்களை வென்றிருப்போம்’ என்று வேலுமணி ஒரு கருத்தை முன்வைத்தார். ஆனால் ஜெயக்குமாரோ, ‘வேலுமணி பேசியது அவரது சொந்தக் கருத்து. கட்சியின் கருத்து இல்லை’ என்று மறுத்துப் பேசினார். இப்படி சீனியர்களே ஆளாளுக்கு ஒரு கருத்தை முன்வைத்ததால், ‘கட்சி எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இல்லை’ என்ற பேச்சு பரவலாக எழுந்தது. அதை மேலும் வலுப்படுத்தும் விதமாகக் கடந்த ஜூலை 8-ம் தேதி, எடப்பாடியின் சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டம் அ.தி.மு.க-வில் பெரும் புயலைக் கிளப்பியது.

முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகிய ஆறுபேர், ‘பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க அணிகளின் இணைப்பு குறித்து ஒரு முடிவெடுக்க வேண்டும்’ என எடப்பாடியை ரவுண்ட் கட்டினர்.

மேலும், தொகுதிவாரியாக நடந்து வரும் ஆலோசனைக் கூட்டங்களிலும், ‘பா.ஜ.க எதிர்ப்பில் தலைமைக்கு பயமிருப்பதாகத் தொண்டர்கள் நினைக்கிறார்கள்’ என்று நிர்வாகிகள் பொங்கினார்கள். இதையடுத்தே, ‘கட்சிக்குள் தற்போது இருக்கும் சலசலப்பைச் சரிசெய்ய, பா.ஜ.க எதிர்ப்புதான் சரியான வழி’ என்ற உறுதியான முடிவுக்கு வந்தார் எடப்பாடி. அதனால்தான், மத்திய அரசின் பட்ஜெட்டையும் காட்டமாக விமர்சித்திருந்தார்.

எடப்பாடிமீது சி.வி.சண்முகத்துக்கு அதிருப்தி இருந்தாலும்கூட, பொதுவெளியில் ‘பொதுச் செயலாளர்’ என்ற மரியாதையுடன் நடந்து கொள்கிறார். கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறுவதில்லை. தனது ராஜ்ய சபா உரையிலும் அதைத்தான் வெளிக்காட்டியிருந்தார். ஆனால், தம்பிதுரைக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை.

பா.ஜ.க-வுடனான கூட்டணி முறிவை அவரால் இன்னமும் ஏற்க முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. அதனால்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில்கூட அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகக் குறிப்பிடும்படியான எந்த வேலையையும் அவர் செய்யவில்லை. ‘பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி தொடர வேண்டும். அப்போதுதான் டெல்லியில் லாபி செய்து நமக்கான அனுகூலங்களைத் தொடர்ந்து பெற முடியும்’ என்று நினைக்கிறார் தம்பிதுரை.

அதனால்தான், இன்னமும் பா.ஜ.க புகழ்பாடுவதுடன், தன் ஆதரவு வட்டத்திலும், தொடர்ந்து எடப்பாடிக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகிறார். இவையெல்லாம் கட்சித் தலைமைக்குத் தெரிந்தும்கூட தம்பிதுரை மீது எந்த நடவடிக்கையும் இல்லை; விளக்கமும் கேட்கப்படுவதில்லை. ஏனென்றால், தம்பிதுரையின் டெல்லி லாபியைத் தலைமையும் அவ்வப்போது பயன்படுத்துகிறது.

நீட் விவகாரத்திலும்கூட காங்கிரஸ், தி.மு.க-வைச் சாடிப் பேசிய தம்பிதுரை, ‘நீட் விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைக் குறை கூறக் கூடாது’ என்று பா.ஜ.க-வுக்குப் பல்லக்குத் தூக்கியிருக்கிறார். தம்பிதுரையின் இந்தச் செயல், கட்சி எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

அம்மா இருந்திருந்தால், இப்படிப் பேசும் துணிச்சல் தம்பிதுரைக்கு வந்திருக்குமா..? அம்மா இருக்கும்போது ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கட்சி, இப்போது ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்ற பழமொழியினை உறுதிப்படுத்துவது போல் உள்ள நிலைமைக்கு வந்து விட்டது அ.தி.மு.க., இதற்கும் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தம்பிதுரைபோலப் பலரும் தலைமையின் கருத்துக்கு எதிராக பேசத் தொடங்கி விடுவார்கள். கட்சியின் கட்டுப்பாடு இன்னும் மோசமாகிவிடும்” என்றனர் கவலையோடு.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது