அனுமதியின்றி அணைக்குள் வந்தால்...?? பெரியாறு அணை விவசாயிகள் எச்சரிக்கை..!

அனுமதியின்றி அணைக்குள் வந்தால்...??  பெரியாறு அணை விவசாயிகள் எச்சரிக்கை..!
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.

மறுபடியும் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவான ஊர்வலங்களை நடத்த வேண்டுமா...?

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச,பென்னிகுயிக் பாலசிங்கம் கூறியதாவது:

கடந்த 2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை காக்க கொதித்து எழுந்தது தேனி மாவட்டம் மட்டுமல்ல, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள மூணாறு நகரமும் தான், கொதித்து எழுந்தது.

மூணாறு நகரில் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உணர்வுள்ள தமிழ் இளைஞர்களால்(கண்டிப்பாக அதில் நான் இல்லை) நடத்தப்பட்ட அந்த ஊர்வலம், கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கேரள மாநிலத்திற்கு உள்ளேயே ஒரு தமிழர் கூட்டம், தங்களை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று சொல்லி எழுப்பிய குரல் அங்கு அடங்குவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியது.

இடுக்கி மாவட்டத்தில் இடதுசாரிகளும், வலதுசாரிகளும், முல்லை பெரியாறு அணையை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்துவார்களானால், மறுபடியும் ஒரு ஊர்வலத்தை வண்டிப்பெரியாறிலும், மூணாறிலும்,மறையூரிலும், பூப்பாறையிலும் நடத்துவோம்.

தேவையின்றி எங்களை கேரள மாநில சமூக விரோதிகள் வம்புக்கு இழுத்தால் மேற்கண்ட இடங்களில் ஊர்வலத்தை நடத்தி, எங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடும். நாங்கள் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்.

தேவிகுளம், பீருமேடு, உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களும் எந்த அடிப்படையில் கேரளாவோடு இணைக்கப்பட்டது என்பதற்கான பதில் இன்று வரை கிடைக்காத நிலையில், மறுபடியும் அதற்கான தீர்வை நோக்கி சட்டபடியாக முன்னேறுவோம்.

கர்நாடக மாநிலத்தின் வட எல்லையில் இருக்கும் பெல்ஹாம் மாவட்டத்திற்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மராட்டிய மாநிலம் உரிமை கோருவதைப் போல,,,

கேரள மாநிலத்தின் மத்திய கிழக்கில் அமைந்திருக்கும், தேவிகுளம், பீரிமேடு, உடுமஞ்சோலை உள்ளிட்ட மூன்று தாலுகாக்களுக்கும் நாங்கள் உரிமை கோருவோம்.

1956 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மொழிவழி பிரிவினை மோசடியை அம்பலப்படுத்தி, கேரள மாநில அரசால் திட்டமிட்டு கபளீகரம் செய்யப்பட்ட 1,400 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட தமிழர் நிலத்தை, மீட்க கூடிய நிலை ஏற்படும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதிக்குள் வரும், ஆணவச்சால் பகுதியில் சட்டவிரோதமாக கார் பார்க்கிங்க்கை அமைத்த பெரியார் புலிகள் காப்பகம், சர்வே ஆஃப் இந்தியா மூலம் தனதாக்கிக் கொண்ட நிலையில், சட்டப்படியான வரைபடத்தின் மூலம் சர்வே ஆஃப் இந்தியாவை அம்பலப்படுத்துவோம்.

152 அடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை தேக்கும் போது, அந்த நீர் எங்கெல்லாம் நிற்கிறதோ, அதுதான் அணையின் நீர் தேங்கும் பகுதி என்பதை மலையாளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லா நாளும் நாங்களும் பொறுமையாக இருந்து விட மாட்டோம். திருப்பி அடிக்கும் காலம் வந்திருக்கிறது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமோ? மத்திய நீர்வள ஆணையமோ? தமிழக அரசின் அனுமதி இன்றி அணைக்குள் போக முயற்சித்தால், அத்து மீறி அணைப்பகுதிக்குள் நாங்களும் நுழைவோம்.

இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை... முல்லைப் பெரியாறு அணை தான் எங்கள் உயிர், எங்கள் வாழ்க்கை... 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கொடுத்த தீர்ப்பே இறுதியானது ,உறுதியானது. களத்தில் உறுதியுடன் நிற்கிறோம்... இனி முல்லைப் பெரியாறு அணை மட்டுமல்ல எங்கள் பிரச்சனை... நெய்யாற்றின் கரை- நெடுமங்காடு- காட்டாக்கடை- புனலூர்- கோணி- பீருமேடு- உடுமஞ்சோலை- தேவிகுளம்- சித்தூர்- பாலக்காடு- நிலம்பூர்- வைத்திரி- மானந்தவாடி- சுல்தான் பத்தேரி ஆகிய அத்தனை தாலுகாக்களுக்கும் நாங்கள் உரிமை கோருவோம்.

822 கிலோமீட்டர் தூரம் எல்கை கொண்ட தமிழக கேரள எல்லையை உடனடியாக சர்வே ஆஃப் இந்தியா மூலம் அளப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசின் அனுமதி இன்றி, அணைக்குள் எவரையும் நுழைவதற்கு ஒருபோதும் அனுமதியோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!