முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது:
முல்லைப்பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது என மத்திய அரசு தொழில்நுட்ப நிபுணர்கள் குழு பலமுறை உறுதிப்படுத்தி உள்ளது. இதனை கேரள மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனாலும் கேரளாவில் சிலர் வேண்டுமென்றே முல்லைப்பெரியாறு அணையினை வைத்து பிழைப்பு நடத்துவதற்காக இப்பிரச்னையை பெரிதாக்கி வருகின்றனர். அவர்களுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது தெரிந்தாலும், பணம் வருகிறதே.. பிழைப்பு நடக்கிறதே இதனால் தொடர்ந்து பெரியாறு அணை பற்றி அவதுாறுகளை கிளப்பி வருகின்றனர்.
கேரளத்தை கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி செய்தாலும், காங்கிரஸ் ஆட்சி செய்தாலும் தமிழகத்திற்கு தீங்கு செய்வதில் இருந்து பின்வாங்குவதே இல்லை. முல்லைப்பெரியாறு அணை பலமாக இருப்பது பற்றி கேரள அரசுக்கு முழுமையாக தெரியும். இருப்பினும் இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தமிழக மக்களுக்கு எல்லா துரோகங்களையும் கேரளா செய்கிறது. கேரள அரசு மனசாட்சி இல்லாமல் செய்யும் வேலைகளை தமிழக அரசு தட்டிக்கேட்பதே இல்லை.
தமிழகத்தினை தி.மு.க., ஆட்சி செய்தாலும், அ.தி.மு.க., ஆட்சி செய்தாலும் முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் கேரளாவிடம் நீதி கேட்டு வாங்குவதில் இருந்து பின்வாங்கி விடுகின்றனர். முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என சுப்ரீம் கோர்ட் இரண்டுமுறை தீர்ப்பு வழங்கி விட்டது.
மத்திய நீர்வளக்கமிஷன் பலமுறை ஆய்வு நடத்தி கேரளாவிற்கு அறிவுரைகள் வழிகாட்டுதல்கள் வழங்கி விட்டது. கண்காணிப்பு ஆணையமும் அணை பலமாக இருக்கிறது என உறுதிகூறி விட்டன. இவ்வளவு நடந்தும் தண்ணீர் தேக்க கேரள அரசு விடாமல் இடையூறுகளை செய்கிறது. பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை வனப்பகுதிகளின் வழியாகவே இடுக்கி அணைக்கு திசை திருப்பி விடுகிறது.
தமிழக அரசு பெரியாறு அணை பிரச்னையை கண்டு கொள்வதே இல்லை. விவசாயிகளான எங்களுக்கு துரோகம் செய்யும் கேரள அரசை கண்டித்து போராட்டம் நடத்துவதா, அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்துவதா என்ற குழப்பம் எங்களுக்கே வந்து விட்டது. அந்த அளவு தமிழக, கேரள அரசுகள் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்கின்றனர்.
நாங்கள் பயிர் செய்ய முடியாமல் வாடிக்கிடக்கையில் கொண்டாட்டங்களை எப்படி மேற்கொள்ள முடியும். எனவே இனிமேல் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லை என முடிவு செய்துள்ளேன். கடந்த முறை நாங்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடவில்லை. பெரியாறு அணையில் நீர் மட்டத்தை அப்போது ரூல்கர்வ் முறைப்படி 142 அடி வரை தேக்க அனுமதி இருந்தும், மழை கிடைத்தும் கேரள அரசின் சதியால் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த முடியவில்லை.
இதனை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் தீபாவளி பண்டிகையினை கொண்டாடவில்லை. இப்போது பிறந்த நாள் கொண்டாடுவதை நான் கை விடுகிறேன். இது போல் நிலைமை நீடித்தால், நாங்கள் உண்மையிலேயே துக்கதினம் அனுசரிக்கும் அளவுக்கு வறுமையும், வறட்சியும் எங்களை ஆளுமை செய்து விடும் போல் தெரிகிறது. ஐந்து மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு நீதி வழங்க வேண்டும்.
அதற்காக நாங்கள் எங்களது கொண்டாட்டங்களை தவிர்த்து காத்திருக்கிறோம். எவ்வளவு நாள் என்று தெரியவில்லை.... இருந்தாலும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்..... இவ்வாறு கூறினார். ச.அன்வர்பாலசிங்கத்தின் இந்த அகிம்சை வழி போராட்டத்தை பின்பற்றி பல விவசாயிகளும், சங்க நிர்வாகிகளும் தாங்களும் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கும் வரை கொண்டாட்டங்களை தவிர்ப்போம் என கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu