பாலீத்தீன் குப்பைகளுக்கு வந்தது மவுசு; துப்புரவாளர்களுக்கு தனி வருவாய்

குப்பைகளை வாங்க புதியதாக உருவாகியுள்ள கடைகள்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், குப்பை சேகரிப்பதன் மூலம் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை தனி வருவாய் பார்த்து வருகின்றனர். இவர்களிடம் பாலீத்தீன் குப்பை வாங்க அனைத்து இடங்களிலும் ஏராளமான கடைகள் உருவாகி உள்ளன.
தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக இருப்பது பாலீத்தீன் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் தான். இவற்றை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தும் பலனில்லை. இதனால் சிறப்பான ஒரு அணுகுமுறையினை கையாண்டனர். அனைத்து உள்ளாட்சிகளிலும் குப்பை மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்து, மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து உரங்கள் தயாரிக்க தொடங்கினர். இருப்பினும் பிரச்னை தீரவில்லை.
இந்நிலையில், உள்ளாட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்த அற்புதமான முடிவால் இப்பிரச்னை பெருமளவில் தீர்த்து வைத்துள்ளது.
ஆமாம் வீடு, வீடாக குப்பை வாங்கிச் செல்லும் துப்புரவு பணியாளர்கள், அவர்கள் வாங்கும் குப்பைகளில் உள்ள பாலீத்தீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்களை எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம். அந்த பணத்தை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என ஒரு அதிகாரப்பூர்வமற்ற ஒரு அறிவிப்பு கொடுத்தனர்.
இதன் விளைவு நன்றாக வேலை செய்தது. அத்தனை துப்புரவு பணியாளர்களும் தாங்களுக்கு கொடுத்த வண்டியின் இருபுறமும் இரண்டு சாக்கு பைகளை கட்டிக் கொள்வார்கள். அவர்கள் செல்லும் வழித்தடம் முழுவதும் ரோட்டில் கிடக்கும் பாலீத்தீன் குப்பைகள், பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்களை பொறுக்கி எடுத்து தனது பைகளில் போட்டுக் கொள்வார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் இருந்து வரும் மக்கள் குப்பைகளை வண்டியில் கொட்டியதும் அதில் உள்ள பாலீத்தீன் பொருட்கள், பாட்டில்களை உடனே பிரித்து, தனக்கு வழங்கப்பட்ட பைகளில் போட்டுக் கொள்கின்றனர். அந்த குப்பை பைகள் இரண்டும், சில நேரங்களில் இரண்டுக்கு மேலும் பைகள் நிரம்பி விடும். அதனை கொண்டு வந்து குப்பை வாங்க தயாராக இருக்கும் கடைகளில் கொடுத்து உடனே பணம் வாங்கிக் கொள்கின்றனர்.
குறைந்தபட்சம் முந்நுாறு ரூபாய்க்கும் குறைவில்லாமல் தினமும் கிடைக்கிறது என துப்புரவு பணியாளர்களே திருப்தியுடன் தெரிவிக்கின்றனர். இந்த பணம் மாதம் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் வரை சேர்ந்து விடுகிறது.
இதன் மூலம் துப்புரவு பணியாளர்கள் தமிழகம் முழுவதும் மிகவும் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் பணிபுரிகின்றனர். உள்ளாட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பெரும் தலைவலி நீங்கி விட்டதாகவும், உள்ளாட்சிகளில் பெருமளவு பாலீத்தீன், குப்பைகள், பாட்டில் குப்பைகள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu