பழனிசெட்டிபட்டி, சின்னமனுாரில் புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்க கோரிக்கை
புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க கோரிக்கை.
New Police Station -தேனி மாவட்டத்தில், மிகப்பெரிய ஸ்டேஷன் பழனிசெட்டிபட்டி. கிட்டத்தட்ட ஒரு தாலுாகா அளவிற்கு பெரிய பரப்பினை கொண்டது. பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனின் ஒரு பகுதியில் உள்ள எல்லையில் இருந்து மற்றொரு பகுதியில் உள்ள எல்லைக்கு செல்ல 52 கி.மீ., துாரம் போலீசார் பயணிக்க வேண்டும்.
பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர்தான், வீரபாண்டி ஸ்டேஷனுக்கும் பொறுப்பு. இரண்டு ஸ்டேஷன்களையும் இவர் ஒருவர் தான் கவனிக்க வேண்டும். வீரபாண்டியும் மிகப்பெரிய எல்லைகளை கொண்ட ஸ்டேஷன் ஆகும். இவ்வளவு பெரிய எல்லைகளை கண்காணிக்க 20 பேர் போதுமானதாக இல்லை. அதுவும் தற்போதைய அசுர போக்குவரத்து வளர்ச்சியில், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. திருட்டு, கஞ்சா விற்பனை என அத்தனை விதிமீறல்களும் நடக்கின்றன. இரவு ரோந்தின் போது கூட ஒருமுறை சுற்றி வர மட்டுமே நேரம் இருக்கும். இதில் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனையும் கவனிக்க வேண்டும் என்பதால், பணிச்சுமையால் போலீசார் தவிக்கின்றனர். எனவே, பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க வேண்டும். வீரபாண்டி ஸ்டேஷனுக்கு தனி இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும்.
அடுத்தது சின்னமனுார். இதுவும் ஓரு ஊராட்சி ஒன்றியம் அளவிற்கு மிகப்பெரிய ஸ்டேஷனாக உள்ளது. போக்குவரத்து முக்கியத்துவம், மற்றும் விவசாய கிராமங்கள் நிறைந்தது. சட்டம் ஒழுங்கு இங்கு பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், சிறு, சிறு பிரச்னைகள் அதிகளவில் வரும் ஸ்டேஷன்களில் ஒன்றாக சின்னமனுார் உள்ளது. இந்த ஸ்டேஷனையும் இரண்டாக பிரிக்க வேண்டும். மிகவும் புராதனமான கோவில்கள் நிறைந்த ஸ்டேஷன். குச்சனுார் சனீஸ்வரபகவான் கோயில், சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர் கோயில் என இங்கு கோவில்களும் மிக,மிக அதிகம். எனவே பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி சின்னமனுார் ஸ்டேஷனையும் இரண்டாக பிரித்து தனி இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் எனவும் போலீஸ் நிர்வாகத்திற்கு போலீசாரே வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
வைகை அணை போலீஸ் ஸ்டேஷனையும் இன்ஸ்பெக்டர் அந்தஸ்த்திற்கு தரம் உயர்த்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள போலீஸ் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் உள்ள போலீசார் மருத்துவமனையினை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். போலீஸ் குடியிருப்பு, ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளில் பூங்காக்கள் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கைகளை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் போலீசார் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை, இரவு நேர பாதுகாப்பு, விபத்து மீட்பு பணிகள், பழைய வழக்குகளை கையாளுதல் போன்ற பணிகளை செய்ய மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது. எனவே கூடுதல் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu