அகத்தியர்மலையில் புதிய யானைகள் காப்பகம் : தமிழக விவசாயிகள் வரவேற்பு

அகத்தியர்மலையில் புதிய  யானைகள் காப்பகம் :  தமிழக விவசாயிகள் வரவேற்பு
X

அகத்தியர் மலை யானைகள் காப்பகம் (பைல் படம்)

Today Theni News - அகத்தியர்மலையை புதிய யானைகள் காப்பகமாக அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

Today Theni News -கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தேக்கடியில் நடந்த யானைகள் தின விழா நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திரயாதவ் அவர்கள், 1,197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புதிய யானைகள் காப்பகமாக தமிழகத்தில் உள்ள அகத்தியர் மலையை அறிவித்தார்.

சோலைக் காடுகளும், நீரூற்று மண்டலங்களும் நிறைந்த அகத்தியர்மலை உலகப்பிரசித்தி பெற்ற வனப் பகுதியாகும். மனித நடமாட்டத்திற்கு வேலை எதுவும் இல்லாத பகுதியான இந்த அகத்தியர் மலையில் கடந்த 2017 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் 2 ஆயிரத்து 761 யானைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அடிப்படையிலேயே அகத்தியர் மலை தற்போது தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக மாறி இருக்கிறது.

குமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பறந்து விரிந்து கிடக்கும் இந்த அகத்தியர்மலை புராண காலத்தோடு தொடர்புடையது. சிவனுக்கும் பார்வதிக்கும் கைலாயத்தில் திருமணம் நடந்த போது, ஒட்டுமொத்த தேவர்களும் ,முனிவர்களும் கைலாயம் அமைந்திருக்கும் இமயமலையில் குழுமியதால், வடபகுதி உயர்ந்ததாகவும், தென்பகுதி தாழ்ந்ததாகவும் ஒரு ஐதீகம் இருக்கிறது.நிலைமையை உணர்ந்த சிவபெருமான் அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பி தென்பகுதியை சமப்படுத்த விரும்பினார். சிவபெருமானின் உத்தரவிற்கு ஏற்ப அகத்திய முனி வந்து கால் பதித்த இடம்தான் இன்றைக்கு அகத்தியர்மலை என்று அழைக்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தின் பேச்சிபாறை அணைக்கு வடக்கே, திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை, குதிரைவெட்டி ,காரையாறு, சேர்வலாறு வனப்பகுதிகளுக்கு மேற்கே, திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாலோடு நெடுமங்காடு பொன்முடி பகுதிகளுக்கு கிழக்கே...குற்றால மலை, கொல்லம் மாவட்டத்தில் உள்ள தென்மலை, கல்லடா ஆறுக்கு தெற்கே உள்ள பகுதி தான் அகத்தியர்மலை என்று அழைக்கப்படுகிறது.

சுருக்கமாக சொல்லப் போனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நம்பி கோயிலில் தொடங்கி குற்றாலம் மலை வரை நீண்டு கிடக்கும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பெரும்பகுதியை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த அகத்தியர்மலை, ஒரு விசித்திரமான வனப்பகுதி. தமிழகத்திலிருந்து அகத்தியர் மலைக்கு செல்வதற்கு எப்போதும் வனத்துறை அனுமதிப்பதில்லை. ஆனால் அகத்தியர் கால் பதித்த இடத்தை தரிசிக்க வருகிறவர்கள் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெடுமங்காடு, பாலோடு வழியாக கேரள வனத்துறையினரின் அனுமதியைப் பெற்று வருகிறார்கள். அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே.

அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள பாபநாசத்தில் இருந்து காரையாருக்கு ஒரு வனச்சாலை இருக்கிறது. அந்தக் காரையாறில் இருந்து, பாபநாசம் அணைக்கு மேலே உள்ள காணிக்குடியிருப்புக்கு, தூர்ந்து போன சாலை ஒன்றும் இருக்கிறது.அங்கிருந்து நெடுமங்காட்டுக்கு 26 கிலோ மீட்டர் மட்டுமே என்று அளவீடு செய்யப்பட்டு , பொதிகை மலையை ஊடறுத்து சாலை போடுவதற்கான ஏற்பாடுகள் 1996 காலகட்டத்தில் நடந்தது.

அப்படி சாலை போட்டால் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகமும் அகத்திய மலையின் சோலைக் காடுகளும், அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான வன உயிர்களும் அழிவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பெரும் போராட்டம் சாலைப் பணியை முடக்கிப் போட்டது.மத்திய வனத்துறையின் நீண்ட கால தேடுதலில் அடிப்படை யில், இப்போது நீரூற்றுகளுக்கு பெயர் பெற்ற அகத்தியர்மலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டிருக் கிறது.

வற்றாத ஜீவ நதியாக ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணியின் மூலம் இந்த அகத்தியர் மலை தான். காரையாருக்கு மேலே உள்ள அகத்தியர் மலையில் இருந்துதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. தாமிரபரணி மட்டுமல்ல கிட்டத்தட்ட 9 நதிகளின் பிறப்பிடமாகவும் அகத்தியர்மலை இருக்கிறது.

நேற்று மத்திய வனத்துறை அமைச்சர் அகத்திய மலையை யானைகள் காப்பகமாக அறிவித்ததும், நிறைய பேர் கூகுளை தேடிக் கொண்டிருக்கிறார்கள், அகத்தியர்மலை எங்கே இருக்கிறது என்று.கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தென்காசி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய ஐந்து தமிழக, கேரளா மாவட்டங்களுக்கு மத்தியில் உயர்ந்த மலைச் சிகரங்களில் அமைந்திருக்கிறது அகத்தியர்மலை.

அகத்தியர்மலையை யானைகள் காப்பகமாக அறிவித்து, காட்டை வளப்படுத்த உதவிய மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் -க்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இ.சலேத்து, பொன்.காட்சிக்கண்ணன், மை.தாமஸ், பா.ராதாகணேசன், கடமலைஜெயகுமார் மற்றும் ச.அன்வர் பாலசிங்கம் ஆகியோர் நன்றியை தெரிவித்துள்ளனர்

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story