பருவநிலை மாற்றத்தால் உருவாகும் புதிய நோய்கள்
பைல் படம்
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் அண்மையில் பறவைக் காய்ச்சல், பருவகால காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டன. இது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் கூறுகையில், பருவநிலை மாற்றம் தான் அந்த வகை காய்ச்சல்களுக்குக் காரணம் எனத் தற்போதைய நிலையில் உறுதியாகக் கூற முடியாது.
ஆனால், அதை மறுக்கவும் இயலாது. பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. காற்றின் ஈரப்பதம் பெருமளவில் மாறி வருகிறது. அதனால் டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பது, தீநுண்மிகள் உள்ளிட்ட நோய் பரப்பிகளின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் மாறுபடுத்துகிறது. அது நோய்ப் பரவல் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
பருவநிலை மாற்றமானது நோய்ப் பரவலுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது. வெப்பமான, ஈரப்பத சூழலானது நோய்ப் பரவல் வழிகளை அதிகரிப்பதோடு, பரவல் தன்மை, தீவிரத்தையும் அதிகரிக்கிறது. வெப்பநிலை அதிகரிப்பானது புதிய இனங்களை நோய் பரவல் அபாயத்துக்கு உள்ளாக்குகிறது. அத்தகைய இனங்களில் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
அதீத மழைப்பொழிவால் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளது. வெப்ப அலையானது விலங்குகளிலும் மனிதர்களிடத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பல விலங்கினங்களில் தற்போது சுமார் 10,000 தீநுண்மிகள் அமைதியாக உலவி வருகின்றன. பருவநிலை மாற்றத்தால் அவை தீவிரமடைந்து மனிதர்களுக்குப் பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும், குளிர்சாதனங்களின் அதிகரித்த பயன்பாடு, பயிர் சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம், மக்களின் பெரும் இடப்பெயர்ச்சி உள்ளிட்டவையும் நோய்ப் பரவல் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu