தேனியில் தி.மு.க.,- காங்., இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

தேனி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க., 19 இடங்களையும், காங்., இரண்டு இடங்களையும் பெற்றனர். இதர இடங்களை பிற கட்சியினரும், சுயேட்சைகளும் பெற்றனர். தி.மு.க., தனி மெஜாரிட்டி பெற்ற நிலையில், நகராட்சி தலைவர் பதவி கூட்டணி கட்சியான காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தலைமையின் அறிவிப்பினை மீறி தலைவர் பதவியை தி.மு.க., நகர செயலாளர் பாலமுருகன் மனைவி ரேணுப்பிரியா பாலமுருகன் கைப்பற்றினார்.
இதேபோல் பெரியகுளத்தில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட துணைத்தலைவர் பதவியையும், போடியில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட துணைத்தலைவர் பதவியையும் தி.மு.க., கைப்பற்றியது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் இது போல் நடந்ததால், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க.,வினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கூட்டணிக்கு மீண்டும் கட்சிப்பதவிகளை வழங்குவது குறித்து தி.மு.க., தலைமையும், கூட்டணி கட்சி தலைமைகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். இன்று முழுக்க நடந்த பேச்சு வார்த்தை கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்தது. பேச்சு வார்த்தை முடிவுகளை இரு தரப்பினரும் உறுதி செய்ய மறுத்து விட்டனர்.
இது குறித்து விசாரித்த போது, தேனி நகரில் மட்டும் இதுவரை தி.மு.க., கவுன்சிலர்களை வெற்றி பெற வைக்கவும், இதற்கு முன்னரும் பல கோடி ரூபாய்களை செலவிட்டதாகவும், அந்த பணத்தை தாருங்கள். அடுத்து கட்சிக்கு உழைத்த எனக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்ற வாதத்தை தி.மு.க., நிர்வாகிகள் முன் வைத்ததாக தெரிகிறது. இதே போல் கட்சியை வெற்றி பெற வைக்கவும், பதவிகளை பெறவும் பல கோடி வரை செலவிட்டுள்ளோம். அதனை கூட்டணி கட்சிகளிடம் வாங்கித்தாருங்கள்... நாங்கள் பணம் செலவிட, பதவி அவர்களுக்கா என தி.மு.க., நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
கூட்டணி கட்சிகளை எதிர்த்து பதவிகளை கைப்பற்றிய தி.மு.க., நிர்வாகிகள் இணைந்து தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளனர். சில வலுவான கோரிக்கைகளை நாம் முன் வைப்போம். அதனை செய்து கொடுக்காதவரை யாரும் அவசரப்பட்டு பதவிகளை ராஜினாமா செய்து விட வேண்டாம் என அவர்கள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
முழுமையான உழைப்பும், செலவிட்ட பணமும் எங்களுடையது? பதவி மட்டும் கூட்டணிக்கா? என பதவிகளை கைப்பற்றி உள்ள தி.மு.க., நிர்வாகிகளின் கோரிக்கைகளி்ல் நியாயம் இருப்பதால் எங்களால் ஒரு திடமான முடிவுக்கு வர முடியவில்லை என்று கட்சி நிர்வாகிகள் புலம்பி வருவதாக தெரியவந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவை நிறைவேற்றாமல் விட்டால் பெரும் சிக்கல் ஏற்படும். நிறைவேற்றுவதில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளன என கட்சி தலைமை நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். இந்த சிக்கலால் எத்தனை தலைகள் உருளப்போகிறதோ என ஒருவித பதட்டம் நிர்வாகிகள் மத்தியில் உருவாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu