இணையத்தில் தமிழ்மொழி : தேனி சுப்பிரமணி வலியுறுத்தல்..!
பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய ‘இணையத்தில் தமிழ்ப் பயன்பாடுகள்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கில் தேனி எழுத்தாளர் சுப்பிரமணி பேசினார்.
இணையத்தில் தமிழ் மொழியிலான உள்ளடக்கங்கள் அதிகரிக்க மாணவர்களின் பங்களிப்புகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன என்று எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி தெரிவித்தார்.
பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய ‘இணையத்தில் தமிழ்ப் பயன்பாடுகள்’ எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறைக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் உஷா காட்வின் தலைமை வகித்தார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சா. தேவநேசம் மேபல் வரவேற்புரையாற்றினார். முனைவர் ப. அலிஸ் ராணி இறைவணக்கமும், முனைவர் ஜா. சாந்திபாய் இறைவார்த்தையும், முனைவர் பா. ஹெலன் சோபியா ஐயன் திருவள்ளுவர் உரையும், திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா வாழ்த்துரையும் வழங்கினர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சியளித்த முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் ஆசிரியரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளருமான எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி பேசும் போது,
“முன்பெல்லாம், ‘ஆடையில்லாத மனிதன் அரை மனிதன்’ என்பார்கள்; இன்று ‘அலைபேசி இல்லா மனிதன் அரை மனிதன்’ என்று சொல்லுமளவிற்கு, இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான அலைபேசியின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகி விட்டது. இணைய இணைப்பு வசதியுடைய திறன்பேசிகள் மக்களின் அன்றாடத் தேவைகளின் ஒன்றாகி விட்டது.
உலக மொழிகளில் இணையப் பயன்பாட்டில் 332 மொழிகள் இடம் பெற்றிருந்தாலும், 162 மொழிகள் மட்டுமே இணையத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கொண்டிருக்கின்றன. இம்மொழிகளில் ஆங்கிலம் அதிகளவாக 59.9 சதவிகிதம் உள்ளடக்கங்களைக் கொண்டு முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ரசியன் 8.7 சதவிகிதமும், ஸ்பானிஷ் 4.0 சதவிகிதமும், துருக்கீஷ் 3.3 சதவிகிதமும், பெர்சியன் 2.8 சதவிகிதமும், பிரெஞ்ச் 2.6 சதவிகிதமும், ஜெர்மன் 2.6 சதவிகிதமும், ஜப்பான் 2.2 சதவிகிதமும், போர்த்துக்கீசு 1.9 சதவிகிதமும், வியட்நாமிஷ் 1.6 சதவிகிதமும், சீனம் 1.5 சதவிகிதமும் இடம் பெற்றிருக்கின்றன. மற்ற மொழிகள் அனைத்தும் 1 சதவிகிதத்திற்கும் குறைவானதாகவே இருக்கின்றன.
இந்திய மொழிகளில் இந்தி 0.1 சதவிகிதம், வங்காளி 0.018 சதவிகிதம், உருது 0.010 சதவிகிதம், தமிழ் 0.0043 சதவிகிதம், மராத்தி 0.0021 சதவிகிதம், தெலுங்கு 0.0016 சதவிகிதம், கன்னடம் 0.00146 சதவிகிதம், மலையாளம் 0.00138 சதவிகிதம், குஜராத்தி 0.0007 சதவிகிதம், பஞ்சாபி 0.0005 சதவிகிதம், சமஸ்கிருதம் 0.00027 சதவிகிதம் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கின்றன.
உலக அளவில் இணையத்தில் தமிழ் மொழியிலான உள்ளடக்கம் 60 வது இடத்தில் இருக்கிறது. உலகின் மொழிப் பயன்பாட்டில் இருபதாவது இடத்தில் இருந்து வரும் நம் தமிழ் மொழி இணையத்தில் 60 வது இடம் என்று பின் தங்கிப் போய்விட்டது. இணையத்தில், பல்வேறு துறைகளிலான தகவல்களுடன் தமிழ் மொழியிலான உள்ளடக்கங்கள் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இணையத்தைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு எனும் புதிய தொழில்நுட்பத்தில், புலனம் எனப்படும் வாட்சப்பில் புதிதாக ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் சில வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன. இதில் தமிழ் மொழியிலான வசதிகள் கிடைப்பதில்லை.
இதே போன்று, சேட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு வழியிலான அரட்டைத் தொழில்நுட்பத்திலும் நமக்குத் தேவையான கட்டுரைகள், படங்கள் போன்றவைகளை ஆங்கில மொழியில் உடனுக்குடன் எளிமையாகப் பெற முடிகிறது. இந்தத் தளத்திலும் தமிழ் மொழியில் நமக்குத் தேவையானதை முழுமையாகப் பெற முடியவில்லை.
இது போன்ற செயலிகள் இணையத்தில் இடம் பெற்றிருக்கும் செய்திகளையும், தகவல்களையும் முதன்மைத் தரவுகளாகக் கொண்டிருக்கின்றன. இதனால், இணையத்தில் அதிக அளவிலான உள்ளடக்கங்களைக் கொண்ட ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் தேவையானதை எளிதில் பெற முடிகிறது. இணையத்தில் தமிழ் மொழியிலான உள்ளடக்கங்கள் மிகக் குறைவாக இருப்பதால், முழுமையான பயனைப் பெறமுடியவில்லை.
இணையத்தில் கிடைக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளை இணையத்தில் முழுமையாகப் பெற்றிட, இணையத்தில் தமிழ் மொழியிலான பல்வேறு துறைகளிலான கட்டுரைகளையும், செய்திகளையும் அதிக அளவில் உருவாக்கிப் பதிவேற்றம் செய்திட வேண்டும். இதற்கு மாணவர்களின் பங்களிப்புகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. மாணவர்கள் இணையத்தில் தங்களது தமிழ் மொழியிலான பங்களிப்புகளைச் செய்திட முன் வர வேண்டும்” என்றார்.
இப்பயிலரங்க நிகழ்வினை முனைவர் இரா. செல்வஸ்ரீ தொகுத்து வழங்கினார். முடிவில் பேராசிரியர் ஜே. சூசன் எழில்மலர் நன்றியுரை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu