Theni News Today-அரசு பணிகளுக்கு கூட வைகை திருட்டு மணல் தான்..! என்ன ஒரு கொடுமை சார்?

Theni News Today-அரசு பணிகளுக்கு கூட வைகை திருட்டு மணல் தான்..! என்ன ஒரு கொடுமை சார்?

ஆற்று மணல் (கோப்பு படம்)

கண்டனுார் வைகை ஆற்றில் இரவும், பகலும் கணக்கின்றி மணல் கொள்ளை நடந்து வருகின்றது. அரசு பணிகளுக்கே திருட்டு மணல் பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளிமலை வனப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்கள் வழியாக செல்லும் மூலவைகை ஆறு கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக நீர்வரத்து இல்லாமல் மணல் மேடாக காட்சி அளிக்கிறது.

இதை பயன்படுத்தி கண்டமனூர் அருகே துரைச்சாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலம் ஆற்றில் மணல் திருடி வருகின்றனர். இதே போல் சில அரசு ஒப்பந்ததாரர்கள் திருட்டுத்தனமாக மணலை அள்ளி அரசு பணிகளுக்கே பயன்படுத்தி வருகிறார்கள்.

இவர்களுக்கு உதவி செய்யும் வகையில், இந்த பகுதியில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணி மேற்கொள்வதில்லை. அதன் காரணமாக ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆற்றின் வழியாக தோட்டங்களுக்கு செல்லும் பாதைகளில் மணல் அள்ளப்படுவதால் பாதையில் பள்ளம் ஏற்பட்டு விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆத்தங்கரைப்பட்டி, துரைசாமிபுரம் வைகை ஆற்றுப்பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி மணல் திருட்டை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மணல் அள்ளப்படுவதால் ஏற்படும் விளைவுகளை நம் மக்கள் உணர்வதில்லை. அதற்கான விழிப்புணர்வும் இல்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் உதவி இல்லாமல் மணல் அள்ளும் வேலைகள் நடப்பதில்லை. அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் குறித்த கவலை இல்லை.

மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் அற்றுப்போகும். தமிழகம் பாலைவனமாகும். பணத்துக்காக நமது வளங்களை கொள்ளையடிப்பது தற்கொலைக்குச் சமம். எதிர்கால தமிழக சந்ததிகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை, வளமுள்ள தமிழ்நாட்டை விட்டுச் செல்லும் கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் 5,500-6,000 லாரிகள் 200 கன அடி மணல் அள்ளப்படுகிறது, உண்மையில் இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 55,000 லாரிகளில் 400 கன அடி மணல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆற்றுக்கு மணல் என்பது மனித உடலுக்கு தோல் போன்றது. அந்த தோலை சிராய்த்து எடுத்துவிட்டால் மனித உடல் எப்படி அலங்கோலமாக இருக்குமோ அப்படித்தான் ஆறும் காட்சி அளிக்கும். இயற்கையை நாம் சிதைத்து வருவதால்தான் அவ்வப்போது பூகம்பம், வெள்ளப்பெருக்கு, வறட்சி என்று நமக்கு இயற்கை எச்சரிக்கை செய்துகொண்டு இருக்கிறது. விழித்துக்கொண்டால் மனித இனம் தப்பிக்கும்.

Tags

Next Story